யாழ்ப்பாண நூல் நிலையம்


பொதுமக்கள் நூல்நிலையம்' என்னும் பெயரோடு முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நூலகம் இன்று நிலைத்திருந்தால், அதற்கு வயது 140 ஆகும். அது 1842 ஆம் ஆண்டில் பெரிய நீதிமன்றக் காரியதரசியாயிருந்த எஃப். கிறினியர் என்னும் பெரியாரால்
ஆரம்பிக்கப் பெற்றது. அதை நூலகம் என்பதிலும் பார்க்க வாசகசாலை என வழங்குதல் பொருத்தமாகும்.

கிறினியர் ஆரம்பித்த நூல் நிலையத்தைவிட வேறொரு நூலகம் நீதிமன்றத்துள் சட்டத்தரணிகளின் உபயோகத்துக்காக நடைபெற்று வந்தது. கிறினியர் ஆரம்பித்த நூல் நிலையம் பெருமளவிற் பயன்படுத்தப்படவில்லை. படித்தவர்கள், பெரியவர்கள் என ஒரு சிலர் அதன் ஒரு சில வேளைகளிற் பயன்படுத்தி வந்தார்கள். அது நாளடைவில் உருக்குலைந்து போயிற்று.

அச்சுவேலி ஊரைச்சேர்ந்த க.மு. செல்லப்பா என்பவர், யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தின் 'சக்கடத்தார்' என்னும் காரியதரிசிப் பதவியில் இருந்தார். அவர் கந்தர்மடச் சந்திக்கு மேற்கில் உள்ள குத்தகைக்காரன் வளவு என்னும் மனையில் வாடகை கொடுத்து வாழ்ந்து வந்தார்.

அக்காலத்தில் கந்தர்மடத்தில் 'முன்னேற்றத்து முதல் நூற்றுவர் கழகம்' ஒன்று நிறுவியது. நூற்றுவர் கழகத்து இளைஞர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தைப் பழக்கிய பெரியார் செல்லப்பா அவர்கள், காலஞ் செல்ல நீதிமன்றத்துக்கு அண்மையிலே 'லங்கா ஹோம்' என்னும் மனையிலே வாழ்ந்தார்.

அவரால் 11.12.1933 ஆம் நாளில் தமிழர் தேசிய அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்ட விண்ணப்பப் பத்திரங்கள் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உலவியன. "யாழ்ப்பாணத்துக்கு ஒரு மத்திய இலவச தமிழ் வாசிகசாலையும் நூற்கழகமும்" என்பதே தமிழ்த் தலைப்பு ஆகும். "A Central free Tamil Library in Jaffna" என்பதே ஆங்கிலத் தலைப்பாகும்.





தமிழ் பேசும் மக்கள் யாவருக்கும் பொதுவான நூலகம் என்பதால் சைவர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என எல்லோரையும் கரம்கூப்பி பணம் திரட்டி உதவுமாறு உருக்கமாக வேண்டி நின்றார். நூலகத்தில் ஆங்கிலம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலான நூல்களும் இடம்பெற விரும்பினார்.

மாணக்கர்களை நல்வழிப்படுத்தி, குற்றங்களைக் குறைக்கவும் தடுக்கவும் வழிவகுத்து, ஆராய்ச்சி செய்வோர்க்கு ஆதரவு கொடுத்து, வைத்தியர்கள், சட்டத்தரணிகள் முதலானோர்களுக்கு வாசிக்கும் வசதி செய்து யாழ்ப்பாணம் மட்டுமன்றி ஏனைய பிரதேசங்களுக்கும் பெரும் பயனளித்தல் வேண்டும் என்பதே அவரது ஆசை ஆகும்.

திருவாளர் க.மு.செல்லபா அவர்களின் விடாமுயற்சியினால் உருவான நூல் நிலையச் சபையின் பழைய பெயர் 'மத்திய இலவச தமிழ் வாசகசாலைச் சங்கம் - யாழ்பாணம்' என்பதாகும். இச் சங்கத்தின் முக்கிய நோக்கங்கள் சில;

1. தமிழ்க் கல்வியை மறுமலர்ச்சி செய்தல்.

2.பொது மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்கபடுத்தல்.

3. பழைய ஓலைச் சுவடிகளை விலைகொடுத்து வாங்கிச் சேகரித்தல்.

4.தமிழ் மொழி ஆராய்ச்சி முயற்சிகளை ஊக்கப்படுத்தல்.

5. நூல்களை மொழிபெயர்த்து பயன் பெறுதல்.

6. யாழ்ப்பாணத்தில் ஒரு மத்திய இலவச தமிழ் நூலகத்தையும் வாசிகசாலையையும் அமைத்தல்.


நல்லவர்கள் நல்ல மனதோடு, நல்ல நோக்கத்தோடு தங்களை ஒறுத்துப் பிறர் நன்மைக்காக் ஆரம்பித்த நற்பணி, வளர்பிறைபோல் நாளும் வளர்ந்தது. அன்று ஆஸ்பத்திரி வீதியில் அமைந்த நூல் நிலையம் வசதி குறைவான கட்டடமும் சூழ்நிலையுமாயினும் வாசிப்பவர்களுக்குப் போதிய நூல்களையும் சஞ்சிகைகளையும் கொண்டிருந்தது. 01.01.1935 இல் முதல் நூல் நிலையம் யாழ்ப்பாண நகர சபையாரின் பரிபாலனத்தில் விட தீர்மானம் எடுக்கப்பட்டது. நூல் நிலையத்தை நகரசபையார் பொறுப்பேற்றதும் யாழ்ப்பாணம் கச்சேரியில், ஒரு பகுதியில் நடைபெற்று வந்தது. பின்னர் நூல் நிலையம் பிரதான வீதியில், ஒரு சந்திக்கு அருகில், அபூபக்கர் கட்டடத்தில் மாதம் 35 ரூபா வாடகையில் விசாலமான முகப்புக் கடையொன்றில் இயங்கியது.





பின்னர் நகர சபையார் யாழ்ப்பாண வாடி வீட்டுக்குத் தென் திசையில் சைவ வித்தியா விருத்திச் சங்கக் காரியாலயக் கட்டடத்தின் அருகில் உள்ள மாடிக்கட்டடத்தின் மேல் மண்டபத்தைப் புத்தூர் மழவராயர் குடும்பத்தாரிடம் மாதம் 65 ரூபாவுக்கு வாடகைக்கு எடுத்தார்கள். அங்கு 1936 ஆம் ஆண்டு முதல் நூலகம் சிறப்பாக இயங்கியது.

யாழ்ப்பாண நகரசபை அக்காலத்தில் முதலில் யூ.டி.சி எனவும் பின்னர் யூ.சி என்றும் வழங்கியது. 01.01.1949 முதல் யாழ்ப்பாண யூ.சி தரமுயர்ந்து முனிசிபாலிற்றி என்னும் மாநகர சபையாக இயங்கியது. யாழ்ப்பாணத்தில் ஒரு பெரிய நூலகத்தை நிறுவ வேண்டும் என்ற எண்ணத்துடன் 16.06.1952 இல் 'சாம் சபாபதி' அவர்கள் கூட்டிய பகிரங்கக் கூட்டத்தின் பலனாக 'யாழ்ப்பாண மத்திய நூல் நிலைய சபை' என்னும் இயக்கம் உருவானது. நூலகம் நகரத்தின் நடுவிலேயே அமையவேண்டும் என்று கூறிய அரசினர் நகர் நிர்மாண நிபுணர் திரு வீரசிங்கா அவர்கள், முனியப்பர் கோவிலுக்குக் கிழக்கில் இருந்த முற்றவெளியை உரிய இடம் என நிச்சயித்தார். அடிக்கல் நாடு விழா 29.03.1954 அன்று இடம்பெற்றது. இவ் விழாவில் அமெரிக்க உதவித்தொகையாக 22,000 டொலர்களும் இந்தியாவின் நன்கொடையாக 10,000 ரூபாவும் கிடைத்தது.

யாழ்ப்பாணத்து நூல்நிலையக் கட்டடத்தை நிர்மாணஞ் செய்த கட்டடக்களை நிபுணர் நரசிம்மன் அவர்கள் தமிழ்ப் பண்பாடு, இந்துப் பண்பாடு, நவீன கட்டடக் கலை அமைப்பு முதலியவற்றைக் கொண்டு நிர்மாணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நூல் நிலையக் கட்டட நிதிக்காக 1952, 1954, 1959, 1963 ஆகிய ஆண்டுகளில் 'யாழ் விநோத காணிவல் விழாக்கள்' நகரத்தில் நடைபெற்றன. ஆனாலும் பழைய நூலக மாடியில் இடநெருக்கடி காரணமாக 11.10.1959 இல் புதிய நூலகக் கட்டடத் திறப்பு விழா ( பொது சன நூலகம் என்னும் பெயரோடு) இடம்பெற்றது. "This Public Library was opened by Alfred T.Durayappah J.P.U.M. Mayor of Jaffna on the 11th of October 1959." என்பது நூலகத் திறப்பு விழாவைக் குறிக்கும் கல்லெழுத்தாகும்.




யாழ்ப்பாணத்துக்கு மட்டுமன்றி இலங்கை முழுவதற்குமே 'யாழ்ப்பாண பொதுசன நூல் நிலையம்' ஒரு முன்மாதிரியாக விளங்கியது. இத்தகைய பெருமை வாய்ந்த நூலகம் கண் திருஷ்டி பட்டது போல் 01.06.1981 அன்று தீக்கிரையாக்கப்பட்டது. அது வலியோடும் வேதனையோடும் எரியும்போது பெறுமதிமிக்க 97,000 க்கும் மேற்பட்ட அரிய நூல்களும், பல நூறு சஞ்சிகைகளும், பத்திரிகைகளும், அரிய பல ஓலைச் சுவடிகளும், விலை மதிக்க முடியாத தளபாடங்களும் கூடவே எரிந்து சாம்பராயின. பொதுசன நூலகம் எரியுண்ட வேளையில் அதில் நூல்களை இரவல் பெறுவோர் தொகை ஏறக்குறைய பத்தாயிரமளவில் இருந்தது.

1933 இல் உதயமாகி, ஒரு கொட்டிலில் தவழ்ந்து, ஒரு கடையில் எடுத்தடி வைத்து, இன்னொரு கடையில் சிறுநடை நடந்து, ஒரு வீட்டின் மாடியில் ஓடியாடித் திரிந்து, ஓர் அழகிய மாடிக் கட்டடத்தில் ஒளி வீசி, வளர்ந்து உலகப் புகழ் பெற்று, கலங்கரை விளக்கம் போன்று இருந்து, யாழ்ப்பாண மக்களுக்கு அறிவொளியூட்டிய 'யாழ்ப்பாண பொதுசன நூலகம்'எரிந்து போனது . 

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP