ஞானப் பள்ளு



ஞானப் பள்ளு என்ற இலக்கியம் போர்த்துக்கேயர் காலத்தே எழுந்த இலக்கியங்களில் ஒன்றாகும். இதன் பெயர் ஞானப் பள்ளு என்பதனை
ஆதி கத்தன்தி ருவேத மாகிய
அருப ஞானத்தை யும்புவி மீதிலே
நீதி யுற்றசொ ரூபம தாகிய
நீண்ட ஞானநி றைந்தபள் ளோதிட

என்ற காப்புச் செய்யுட் பகுதி சுட்டி நிற்கும். கிறிஸ்துநாதரே ஞான வடிவமானவர் என்பதனை இதன் ஆசிரியர் பல இடங்களிலும் கூறியுள்ளார். இந்நூலுக்கு வேதப்பள்ளு என்னும் பெயரும் உண்டு என்பது
அறைந்த வேதபள் ளானதி னிக்கதை
என இதன் நாலாவது செய்யுளிலும்,
நிமலன்றிரு வேதபள் ளின்னிசை நெறிகூற
என ஆறாவது செய்யுளிலும்,
செம்பொன்பத மேவிய வேதபள் ளிசைபாட
என எட்டாவது செய்யுளிலும் கூறப்படுவதாற் புலனாகும்.
கத்தோலிக்க சமயத்தைப் புகழ்ந்து, இயேசுநாதரை பாட்டுடைத் தலைவராக கொண்டு, பள்ளுப்பிரபந்தத்தினிலக்கணமமையச் செய்யப்பட்டுள்ளது இந்நூல். இது கத்தோலிக்க மதப்பற்றை மக்களிடையே பெருக்குவதனை குறிக்கோளாக கொண்டுள்ள தென்பதனை நூலின் இடையிடையே காணப்படும்,
வாரிக் கரையில் வளர்வா னுலகமென் மாநிலத்திற்
பாரிக்கை யாக அபிராங் கிளைகள் பலுகவைத்த
சீருக் குகந்த திரித்துவ ஏகனைச் சிந்திப்பவர்
ஆருக்கு முந்திப் பரலோக நன்மை யடைவர்களே
என்பது போன்ற பள்ளுப்பாட்டு மரபுக்கு புறம்பான அறிவுறுத்தற் பாடல்கள் காட்டி நிற்கும்.
ஏனைய பள்ளுப்பிரபந்தங்களில் வரும் பாத்திரங்களை போல இதிலும் மூத்தபள்ளி, இளையபள்ளி, பள்ளன், பண்ணைக்காரன் ஆகிய நாலு பாத்திரங்களே இடம்பெற்றுள்ளன. ஆனால் மூத்தபள்ளி, பள்ளன் ஆகிய இருவரும் இயேசுநாதரின் பிறப்பிடாகிய செருசலை நாட்டவராகவும், இளைய பள்ளி கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப்பீடமாகிய உரோமாபுரி நாட்டவளாகவும் பண்ணைக்காரன் உரோமாபுரி எனும் பண்ணைக்கு உரிமையாளனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். எனவே, மூத்தபள்ளி செருசலைப்பள்ளியெனவும், இளையபள்ளி றோமைப்பள்ளியெனவும், பள்ளன் தன்மகுணப்பள்ளனெனவும் வழங்கப்பட்டுள்ளனர். நூலின் பெரும்பகுதி கிறீஸ்துநாதரின் புகழைச் செருசலைப்பள்ளி, றோமைப்பள்ளி ஆகிய இருவரின் வாயிலாகக் கூறும் பாடல்களாக அமைந்துள்ளது.
இந்நூலாசிரியர் யார் என்பது இந்நூல் வாயிலாகவோ பிற சான்றுகள் மூலமாகவோ அறிதற்கில்லை. எனினும், இவர் கத்தோலிக்க சமயத்தவர் என்பதும், யாழ்ப்பாணத்திலே வாழ்ந்தவர் என்பதும் நூலகச் சான்று கொண்டு அறியலாகும். இதில் வரும் “குயில் கூவல்” என்னும் பகுதியில் இறுதியில் உள்ள,
தழைவு பெற்ற யாழ்ப்பாண
சத்தியகி றிஸ்துவர்கள்
சந்ததமும் வாழவே – கூவாய் குயிலே
என்ற சிந்து அவற்றிற்காதாரமாகும். குயில் கூவல் எனும் பகுதியிலே இந்நூலின் 84ஆவது பாடலாக வரும்,
பேரான பாராளும்
பிடுத்துக்கால் மனுவென்றன்
பிறதானம் வீசவே – கூவாய் குயிலே
எனுஞ்சிந்து, போர்த்துக்கல் மன்னனை வாழ்த்தி நிற்கும். “பாராளும்” என நிகழ்காலத்தால் மன்னனின் ஆட்சி சுட்டப்படுதலின், இலங்கையிற் போர்த்துக்கேயர் ஆட்சி நிலவிய காலத்தில் இந்நூல் செய்யப்பட்டதென கொள்ளலாம். எனவே போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய 1621ஆம் ஆண்டுக்கும் 1658ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தே இது செய்யப்பட்டிருத்தல் கூடும். நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் ஞானப்பள்ளு எழுந்த காலம் 1642ம் ஆண்டென தம் நூல்களிலே குறிப்பிட்டுள்ளார். அதற்கவர் கொண்ட ஆதாரங்களெவையெனத் தெரியவில்லை. செபஸ்தியான் பொன்சேகா சுவாமிகளின் வேண்டுகொளுக்கிணங்கவே ஞானப்பள்ளு இயற்றப்பட்டது. யேசு சபையைச் சேர்ந்த பொன்சேகா சுவாமிகள் 1650ம் ஆண்டு தென்னிந்தியாவிலுள்ள கொச்சின் எனுமிடத்திலிருந்த கலாசாலையின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் 1650ஆம் ஆண்டுக்கு முன்பு ஈழத்தில் பணிபுரிந்தார். எனவே ஞானப்பள்ளு 1650ம் ஆண்டுக்கு முன்பு இயற்றப்பட்டதாகலாம்.
ஞானப் பள்ளு என்கின்ற இந்த நூல் பற்றிய குறிப்பு கலாநிதி க. செ. நடராசா அவர்களால் எழுதப்பெற்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் 1982 இல் வெளியிடப்பெற்ற ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி எனும் நூலில் இருந்து பெறப்பட்டது

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP