இணுவில் கந்தசுவாமி ஆலயம்



 இணுவில் கந்தசுவாமி ஆலயம்யாழ்ப்பாணக் குடாநாட்டின் மத்தியில் விளங்கும் இணுவில் கிராமம் சைவப் பண்பாட்டிற்கும் தமிழ், இயல், இசை, நாடகத் துறைக்கும் பெயர்பெற்ற கிராமமாக இன்றும் திகழ்கின்றது. இதற்கான காரணம் இக்கிராமத்தின்தொன்மையே ஆகும். அன்று இணையிலி என அழைக்கப்பட்ட இந்நிலப்பரப்பின் பெயர் மருவி இணுவில்
என வந்ததாக ஆய்வாளர் கூறுவர். இக் கிராமத்தின் சைவப் பண்பாட்டிற்கு, இவ்வூரில் காணப்படும் வரலாற்றுப் புகழ்பெற்ற ஆலயங்களும் இயல், இசை நாடகத்துறை வளர்ச்சியும், முன்பே ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ச்சங்கமும் அதனைத் தொடர்ந்த திண்ணைப் பள்ளிக்கூடங்களுமே காரணம் என்றால் மிகையாகாது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற ஆலயமாக இணுவில் மத்தியில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் திகழும் இணுவில் கந்தசுவாமி கோவில் காலத்தால் முற்பட்ட வரலாற்றுப் பெருமையைத் தன்னத்தே கொண்டது.

இதற்கோர் எடுத்துக்காட்டாக அன்று செகராசசேகர மன்னரின் மைத்துனர் அரசகேசரி தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவினார் என்றும், அந்தத் தமிழ்ச்சங்கத்திற்குச் சங்குவேலி என்னும் வயற்பரப்புத் தானமாக வழங்கப்பட்டதாகவும் யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. ஆனால் இன்று அத்தமிழ்ச்சங்கம் அழிவுற்றாலும் முதல் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வளர்த்த தெய்வமான முருகப்பெருமானுக்கு, இணுவைக் கந்தப்பெருமானுக்கு இச்சங்குவேலி வயற்பரப்பிலிருந்து நெல்லுத் தானமாக வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாலயம் அரசகேசரி காலத்திலமைந்த தமிழ்ச்சங்கத்துடன் தொடர்புள்ளது எனக் குறிப்பிடுவதற்குத் தக்க சான்று இவ்வாலயத்திற்குரிய சங்குவேலி வயற்பரப்பும் அங்கிருந்து இவ்வாலயத்திற்கு வழங்கப்பட்டு வரும் நெல்லும் அமைகின்றன.
இவ்வூரின் வரலாறாக யாழ்ப்பாண வைபவமாலையில் செங்கரும்பும், செந்நெல்லும், கமுகும் தழைத்தோங்கும் இணுவிலில் மேழிக்கொடியுடையவனும் திரண்ட தோள்களையும் விரிந்த மார்பினையும் உடையவனும், குவளை மலர் மாலையை அணிந்த திருக்கோவிலூர் பேராயிரமுடையோன் முதலில் ஆட்சித்தலைவனாக விளங்கினான் எனக் கூறப்படுகின்றது. இவனது காலம் கி.பி. 1365 என முதலியார் செ.இராசநாயகம் அவர்கள் யாழ்ப்பாணச் சரித்திரத்தில் எழுதியுள்ளார். அவன் மரபில் வந்த கனகராச முதலிகாலத்து ஆலயமாக இணுவைக்கந்தன் ஆலயம் கருதப்படுகிறது. இதற்கான கர்ணபரம்பரைக் கதை ஒன்றும் உண்டு.
இணையிலி என அழைக்கப்பட்ட இணுவிற் கிராமம் மயிலங்காடு தொடக்கம் ஆனைக்கோட்டை வரை எல்லைகள் பரவியிருந்த காலம். முதலிக்குளம், காக்கைக்குளம் எனும் இரு குளங்கள் மூலம் நீர் பாய்ச்சி வடக்குப்புறத்தே பருத்தியும் கரும்பும், கமுகும், தெற்குப்புறத்தே செந்நெல்லும் தழைத்தோங்கிய காலம். கனகராச முதலியினால் ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் சீரும் சிறப்பும் பெற்ற இப்பொற்காலத்தில் ஒருநாள் இரவு ஓர் ஒளிப்பிழம்பு தெரிவதை மக்கள் கண்டனர். அதனைக் கண்ணுற்றவர்கள் ஒளிப்பிழம்பு தெரியும் இடம் முதலியாரின் வீடு இருந்த திசையே என உணர்ந்து முதலியார் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெற்போர் தீப்பிடித்து விட்டது எனக்கருதி நாலாபுறத்திலிருந்தும் முதலியார் வீடு நோக்கி ஓடி வந்தனர். முதலியார் வீட்டு முற்றத்தை அடைந்த மக்கள் அங்கு எவ்வித அனர்த்தங்களுமின்றி யாவும் வழமைபோல் இருப்பதைக் கண்டு அதிசயித்தனர். முதலியாரிடம் தாம் வந்த காரணத்தை விளக்கினர். முதலியார் அதற்குத் தான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வேளயில் இரு பிராமணச் சிறுவர்கள் தன்னை அணுகித் தாம் காஞ்சியிலிருந்து வந்ததாகவும், தம்மை ஆதரிக்குமாறும் கூறி மறைந்துவிட்டனர் என்று கூறினார். தனது குலதெய்வமாகிய காஞ்சியம்பதி குமரகோட்டக் கந்தப்பெருமானே தனக்கும் தனது குடிமக்களுக்கும் நல்லருள் பாலிக்கும் பொருட்டுக் காட்சிகொடுத்துள்ளாரென மனம்நெகிழ்ந்து இறைவனின் திருவருளை வியந்து ஆனந்தத்தில் சிலிர்த்தார். முதலியார் சித்தத்திற்கிணங்க முருகப்பெருமானையும், வைரவப்பெருமானையும் இல்லத்தில் குடிலமைத்து வழிபட்டு வந்தாரென கர்ணபரம்பரைக் கதை ஒன்றுள்ளது. இக்கனகராச முதலிக்கு மக்கள் நினைவுக்கல் நாட்டி வழிபட்ட இடமே இன்று இவ்வாலயத்திற்கு முன்பாகக் காணப்படும் முதலியாரடி எனப்படும் சிறு ஆலயமாகும்.
1620 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கேயர் வருகையால் கிறிஸ்தவ சமயம் மேலோங்கி ஏனைய மதங்களும் சுதேச மக்களது பண்பாடு பழக்க வழக்கங்களும் அதற்கிரையாக வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள்ளாகின. அதற்கமைவாகப் போர்த்துக்கேயரால் பல ஆலயங்கள் இடித்தழிக்கப்பட்டன. சமய அனுட்டானங்களைப் பேணியோர் தண்டிக்கப்பட்டார்கள். அக்காலத்தில் அந்த அன்னியரால் அழிவுக்குட்பட்டு அழிந்து போன இத்தலம் மீண்டும் 1621 ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட்டுத் தோற்றம் பெற்றதே தற்போதுள்ள கந்தசுவாமி கோவிலாகும். அக்காலத்தில் வாழ்ந்த குழந்தையர் வேலாயுதர் என்பவரது கனவில் கந்தக் கடவுள் தோன்றித் தம்மை ஆதரிக்கும் படியும், தான் காஞ்சியிலிருந்து வந்ததாகவும் கூறி ~~உனது வெற்றிலைத் தோட்டத்தில் நாட்டப்பட்டுள்ள மரத்தடியில் காலால் மிதித்து அடையாளம் இட்டிருப்பேன்|| அவ்விடமே எனது இருப்பிடம் எனக்கூறி மறைந்தார். அதிகாலை எழுந்த வேலாயுதர் தான் கண்ட கனவை எண்ணியவாறு வெற்றிலைத் தோட்டத்திற்குச் சென்றார். இது என்ன அதிசயம் கண்டது கனவல்ல நனவுதான் என உணர்ந்தார். பெருமான் உரைத்ததற்கிணங்கப் புதிதாக ஓர் நொச்சிமரம் நாட்டப்பட்டு அருகில் பாதச்சுவடும் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினார். அவ்விடத்தில் குடிலமைத்து வேற்பெருமானை வணங்கி வந்தார்.
மேலே கூறிய சம்பவத்திற்கிணங்க ஆலயம் அமைந்துள்ள காணியின் பெயர் நொச்சியொல்லை மிதியன் என வழங்கப்படுகிறது. இவ்வாலயத்தின் தலவிருட்சமாக இன்றும் அந்த நொச்சி மரம் கருவறைக்கருகில் நிற்பதைக்காணலாம்.
இறைவனது அருளாட்சியில் இவ்வூர் மக்கள் கவரப்பட்டப் பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. ஆலயத்தின் பூசைவழிபாடுகளை வேலாயுதரின் மகன்மாரில் ஒருவரான அருணாசலம் என்பவர் நடத்தி அருட்கடாட்சத்திற்குட்பட்டு வாக்குச் சித்தி பெற்றதுடன் விபூதிப்பிரசாதத்தின் மூலம் தீராத நோய்களைக் குணப்படுத்தும் அருளாளராகவும் காணப்பட்டார்.
முருகப்பெருமானை நாடிவந்து பிணி தீரப்பெற்று அருள்வாக்குப் பெற்றுச் செல்லும் அடியவர்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து, குடிலாக அமையப்பெற்ற ஆலயம் வளர்ச்சி பெற்றுச் செங்கற் கோயிலாக மாற்றமடைந்தது. செங்கற் கோயிலில் வேற்பெருமானைப் பிரதிஷ்டை செய்து குடமுழுக்கும் நிகழ்த்தப்பட்டது. கூட்டுப்பிரார்த்தனை, கந்தபுராணபடனம் என்பன அடியவர்களால் நிகழ்த்தப்பட்டன. இந்த அருட் செயற்பாடுகளால் அயற்கிராமங்கள் மட்டுமன்றி தூரவுள்ள கிராமங்களும் கவரப்பட்டன. எம்பெருமானை நாடி வந்த மக்கட் தொகைக்கேற்ப செங்கற் கோயிலை வெள்ளைக் கற்கோயிலாகக் கட்டுவதற்கு முருகன் அடியவர்கள் சித்தம் கொண்டனர். அதற்கிணங்க அருணாசலத்தின் மகன் சுப்பிரமணியத்தினது காலத்தில் தொடங்கப்பட்ட வெள்ளைக்கல் வேலைகள் அவரது மகன் ஆறுமுகத்தின் காலத்தில் 1840 ஆம் ஆண்டளவில் நிறைவு பெற்றது.
ஆண்டவனுக்கு வெள்ளைக்கல்லால் ஆலயம் அமைக்கும் பணியை ஆறுமுகம் மேற்கொண்டு வரும் காலத்தில் ஆலயம் அமைப்பதற்குப் பெரும் பொருட் செலவு ஏற்படுவது கண்டு செலவினை எப்படி
இத்திருப்பணியின் போது சிலர் வெள்ளைக்கற்களைப் பொளியவும் சிலர் கற்களை வைத்துக்கட்டவும் திருப்பணி வேலைகள் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. கட்டிட வேலையாள் கோறைக்கல் ஒன்றை ஆலயச்சுவர் ஒன்றில் வைத்துக் கட்டிவிட்டார். அக்கல் கோறை என்பதனை உணர்த்துவதற்காக எம்பெருமான் அணில் வடிவில் அக்கல்லின் மேல் ஏறி விளையாடியதாகவும் அணிலின் குறிப்பை உணராத சிற்பி அணிலைக் கல்லால் எறிந்து துரத்திவிட, இறைவன் இரவு கோமேசு முதலியின் கனவில் தோன்றி, தான் அணில்வடிவில் இருந்த கல்லை அகற்றுமாறு பணித்ததாகவும் அகற்றிய அக்கல்லில் கோறை இருப்பதைக் கண்டு யாவரும் அதிசயித்து முருகப் பெருமானுடைய அருட்சாந்நித்தியம் ஆலயத்தின் மேல் இருப்பதை உணர்ந்து கண்ணுங்கருத்துமாக திருப்பணியைச் செய்துமுடித்ததாகவும் இவ்வூரார்கள் கூறுவர்.
1840 ஆம் ஆண்டளவில் கட்டி முடிக்கப்பட்டுக் குடமுழுக்குச் செய்யப்பட்டு, ஆலயத்திற்கு நித்திய நைமித்திய பூசைகளைக் கவனிப்பதற்கென, காஞ்சியிலிருந்து வரவழைக்கப்பட்ட திம்மசேனர் என்னும் பிராமண உத்தமர் நியமிக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து புங்குடுதீவிலிருந்து வந்து அராலியில் குடியேறிய சரவணைஐயர் என்பவர் பூசைகளைக் கவனித்து வந்தார் என்று அறியக்கிடக்கின்றது.
இவ்வாலயத்தின் பூசைகளை இனிது செய்துகொண்டிருந்த செல்லையா சின்னையா என்பவருக்குப் புத்திரப்பேறின்மையால் எம்பெருமானை வேண்டி ஆறுமுகப்பெருமானின் திருவுருவைத் தான் அமைப்பதாக நேர்த்தி வைத்துத் தமக்கு புத்திரர்களைத் தந்துதவுமாறு வேண்டினார். தனது சித்தப்படி ஆறுமுகப்பெருமானை வள்ளி தெய்வயானை சமேதராய் மயில்மேல் இருந்த பாவனையில் உருவாக்க எண்ணினார் ஐயர். அதன்படி ஆலயத்தில் எம்பெருமானை ஐம்பொன்னில் வார்க்க எடுத்த முயற்சி இருமுறை கைகூடவில்லை. இதனைக்கண்ட ஐயர் மனம்நொந்து எம்பெருமானை வேண்டிநின்றார். ஐயரது கனவில் தோன்றிய எம்பெருமான் தான் நின்ற பாவனையில் திருச்செந்தூரில் இருப்பதைப் போன்ற தோற்றத்தில் வண்ணார்பண்ணையில் ஸ்தபதி வீட்டில் அமையப்போவதாகக் கூறியருளினார். ஆண்டவனது அருள்வாக்கைச் சிரமேற்கொண்ட சின்னையர் பஞ்சலோகங்களையும் ஏனைய உலோகங்களையும் எடுத்துக் கொண்டு ஸ்தபதியின் இல்லம் சென்று நடந்தவற்றைக் கூறினார். இவற்றைக்கேட்டு உவகையடைந்த ஸ்தபதி விக்கிரகம் அமைக்க வேண்டிய அளவுப்பிரமாணத்தை எம்பெருமானிடம் கேட்டுரைக்கும் படி வேண்டினார். ஆலயத்தை அடைந்த ஐயர் விக்கிரகத்தின் அளவுப்பிரமாணத்தை வேண்டி இறைவனிடம் விண்ணப்பம் செய்தார். ஐயரின் கனவில் தோன்றிய எம்பெருமான் நீர் குக்கட ஆசனமாக இருப்பீரானால் எவ்வளவுஉயரம் தோன்றுகிறதோ அதுவே எனக்குரிய அளவுப்பிரமாணம் எனக்கூறியருளினார். அதற்கிணங்கச்; சின்னையா ஐயரது குக்குடாசனத்தின் உயரத்திற்கேற்ப வார்க்கப்பட்ட ஆறுமுகப்பெருமான் திருவுருவமே இன்றும் இங்கு நாம் தரிசிக்கும் ஆறுமுகப்பெருமானாவார். இது 1886 ஆம் ஆண்டளவில் நிகழ்ந்ததெனக் கூறுவர். தமிழ் நாட்டில் இருந்து வந்த கலைஞர்கள் கூட எம்பெருமானது திருவுருவம் போன்று இந்தியாவிற் கூடப் பார்த்ததில்லை என வியந்து கூறுகின்றமை ஆறுமுகப்பெருமானது திவ்விய மூர்த்திகரத்துக்கு எடுத்துக்காட்டாகும்.
அருள் மலிந்தோங்கி அடியவர்களை மெய்யுருகச் செய்யும் எம்பெருமானாம் கல்யாணவேலரின் பெரும்பதியான இணுவைக் கந்தகோட்டத்திற்கு அருளாளர் பெரிய சன்னியாசியார் எனப் போற்றப்படும் ஆறுமுகம் சந்நியாசியாரது அருள்தொண்டு 1861 ஆம் ஆண்டளவில் கிடைக்கப்பெற்றது. கந்தவேள் பெருமானது கருணையும் அருள்வாக்கும் சந்நியாசியார் மூலமாக அடியவர்களுக்கு அனுக்கிரகிக்கப்பட்டன. அடியவர்கள் யாவரும் அன்னாரின் வாக்கு அருள்வாக்கு எனவும் அவரது கட்டளை ஆண்டவனது கட்டளை எனவும் எண்ணித் தம்பணிகளை இயற்றி வந்தனர். அருளாளர் எம்பெருமானுக்கோர் திருமஞ்சம் அமைப்பதற்குத் திருவுளம்கொண்டார். திருமஞ்சத்தினைச் செவ்வனே செய்துமுடிக்கக்கூடிய சிற்பவல்லுநர்களைத் தேடியபோது எம்பெருமானே வழிகாட்டினார். தமிழ்நாட்டிலே தாம் கற்ற கலையாற்றலை வெளிப்படுத்துவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்காமல் காத்திருந்த சிற்பவல்லுநர்களிடம் எம்பெருமான் சந்நியாசியார் வடிவில் சென்று இணுவில் கந்தசாமி கோவிலுக்கு மஞ்சம் செய்யவரும்படி கூறியருளினார். அதேபோன்று சந்நியாசியாரின் கனவில் தோன்றி உனது மஞ்சத்திருப்பணிக்கான ஆசாரிமார்கள் ஊர்காவற்துறைக் கரையை அடைந்துள்ளார்கள் அழைத்துவா எனப்பணித்தார். அதற்கிணங்கி அருளாளரும் சிற்பாசாரிகளும் சேர்ந்து உருவாக்கிய இக்கலைக்கூடம் சைவ உலகின் முதல் மஞ்சம் என்னும் பெருமையைப் பெற்றுள்ளது. இம்மஞ்சத்தின் ஆரம்பவேலைகள் பெரிய சந்நியாசியார் சஞ்சரித்த இடத்திலே அவரின் மேற்பார்வையின் கீழ் 1910 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1912 ஆம் ஆண்டு மஞ்சம் வெள்ளோட்டத்திற்கு விடப்பட்டது. அன்னாரது கண்காணிப்பில் மஞ்சவேலைகள் ஆரம்பமான இடமும் காரணப்பெயர் கொண்டு இன்றும் மஞ்சத்தடி என அழைக்கப்படுகின்றது. அன்னாரது சமாதியே மஞ்சத்தடி அருணகிரிநாத கந்தசுவாமி கோவிலாகும். அன்னாரது காலத்தில் எம்பெருமானால் நிகழ்த்தப்பட்ட அற்புத லீலைகள் பல. அவற்றை இன்றும் இவ்வூர் மக்கள் எண்ணி மனம் நெகிழ்வர்
அன்னாரது காலத்திலே அவரது வேண்டுகோளிற்கிணங்க வேலாயுதர் ஆறுமுகம் என்பவரால் ஆலயத்திற்கு ஓர் கேணி உருவாக்கப்பட்டது. அக்கேணி காலப்போக்கில் தூர்ந்துவிட வேலாயுதம் ஆறுமுகம் மரபில் வந்தவர்களால் கேணிக்குரிய நீரூற்றுப் பாதுகாக்கப்படும் பொருட்டுத் தற்போது கிணறாக வடிவமைக்கப்பட்டுக் காட்சியளிக்கிறது. ஆலயத்தின் மேற்குப் புறமாகக் காணப்படும் இக்கிணறும், கிணற்றிற்கு வடக்கே காணப்படும் ஆவுரஞ்சிக்கல்லும் கேணி இருந்த இடத்தை உறுதி செய்வனவாக உள்ளன.
இவ்வாலயத்திற்குச் சுதுமலையைச் சேர்ந்த முத்து நாகலிங்கம் என்பவரால் 1905 – 1909 காலப்பகுதிகளில் மூன்று தளங்களைக் கொண்ட கோபுரம் ஒன்று சோழர்காலச் சிற்பமரபை ஒட்டி அமைக்கப்பெற்றது. அக்கோபுரம் இப்போது ஐந்து தளங்களைக் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டு காட்சியளிக்கிறது. ஆலயத்தின் முன்பாகத்திலுள்ள ஊஞ்சல்மடமும் அன்னாராலேயே கட்டப்பட்டது. ஆலயத்தின் கண்டாமணியும் மணிக்கூட்டுக் கோபுரமும் 1946 ஆம் ஆண்டு சிதம்பரநாதர் பொன்னையா என்பவரால் பொதுமக்களின் அனுசரனையுடன் உருவாக்கப்பட்டது. இறையருள் பொங்கித் ததும்பும் இவ்வாலயத்தின் முகாமைத்துவ மாற்றங்களால் சிறுதடங்கல் ஏற்பட்டமை வருந்தத்தக்க விடயமே. இருப்பினும் 1953 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 12 ஆம் தேதி உயர்நீதிமன்றத் தீர்ப்பு இவ்வாலயம் பொதுக் கோவில் எனவும் பொதுமக்களால் தெரிவுசெய்யப்படும் நிர்வாகிகளே இவ்வாலயத்தை வழிநடத்த வேண்டும் எனவும் பிரகடனம் செய்கிறது. 28 ஆதனங்களைக் கொண்ட – ஏறக்குறைய 600 பரப்புக் காணிகளை அயற்கிராமங்கள் உட்படத் தர்ம சாதனமாகப் பெற்ற இவ்வாலயம் பெரிய கோவில் என அழைக்கப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்றே. 1967 ஆம் ஆண்டு இவ்வாயலம், இருதள விமானங்களைக் கொண்ட கருவறை அமைக்கப்பட்டுப் புனருத்தாரனம் செய்யப்பட்டு மூலவராக இருந்த வேற்பெருமானுக்குப் பதிலாக வள்ளி தெய்வயானை சமேத முத்துக் குமாரசாமி பிரதிஷ்டை செய்யப்பட்டுக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நித்திய நைமித்திய பூசைகள் காலக்கிரமமாகப் பேணப்பட்டு வருகின்றன. 25 நாட்கள் பிரமோற்சவத்தை தன்னகத்தே கொண்ட இவ்வாலயம் ஆனிமாத அமாவாசைத் தினத்தன்று தீர்த்தோற்சவத்தைக் காண்கிறது. தீராத வினைகள் தீர்க்கவல்ல நீர்ச்சுனைகளைத் தன்னகத்தே கொண்டு அருள் பொழிகின்றது. சாந்தியடியான் – விளாத்தியடியான் எனப் போற்றப்படும் வைரவர் ஆலயத்திற்கு முன்பாக அமையப்பெற்ற தீர்த்தம் அடியவர்களுக்கோர் வரப்பிரசாதம் எனலாம். இத்தீர்த்தத்தில் நீராடித் தமது தீராத வினைகள், பிணிகள் தீர்க்கப்பட்ட அடியவர்கள் பலர்.
இவ்வாலயத்தின் கந்தசஷ்டித் திருவிழா வெகு சிறப்புப் பொருந்திய திருவிழாவாகக் காணப்படுகிறது. மஹோற்சவத்தினைப் போன்று யாகம் அமைக்கப்பட்டு 6 நாட்களும் யாக பூசை செய்யப்படுகிறது. உற்சவ மூர்த்தியாக ஆறுமுகப்பெருமானே எழுந்தருளுப் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 6 நாட்களும் கந்தபுராணத்தில் வரும் சூரபதுமன் வதைப்படலம் படிக்கப்பட்டு உரை சொல்லப்படுகிறது. இக்கைங்கரியம் இவ்வாலயத்தில் தொன்றுதொட்டு நடைபெற்றுவரும் ஒரு சம்பவமாகும். சூர சங்காரத்தின் போது ஆறுமுகப்பெருமான் கடாவாகனத்தில் எழுந்தருளிச் சூரபத்மனுடன் போர் புரியும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். பக்தர்களைப் பரவசமூட்டும் இச்சூரன் போரினைக் கண்டுகளிக்க ஆயிரக்கணக்கான பலவூர் அடியார் கூட்டம் ஆலயத்தில் அலைமோதும்.
சூரசங்காரத்தின் மறுநாள் காலை சூரிய உதயத்தின்போது ஆறுமுகப்பெருமான் கோவில் வாயிலிலுள்ள கந்தபுட்கரணி என்னும் தீர்த்தத்தில் தீர்த்தத்திருவிழா நடைபெறும். அன்று மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெறும். ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வந்து பக்தகோடிகளுக்கு அருட்காட்சி கொடுப்பார். தொன்றுதொட்டே மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் முறையாக அமையப்பெற்ற இத்தலம் போற்றுதற்குரியதொன்றே. மூர்த்தியாக ஆறுமுகப்பெருமானும் தலவிருட்சமாக நொச்சிமரமும் தீர்த்தமாக வைரவ தீர்த்தமும் காணப்படுகின்றன. இந்தியாவில் பல கோவில்கள் இருந்தும் கோவில் என்னும் பெயர் சிதம்பரத்திற்கே உரித்துடையதாகக் கருதப்படுகிறது. அது போன்று இலங்கையின் வடபால் யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை வீதியைப் பார்வையாகக் கொண்ட பல கோவில்கள் இருந்தும் இன்றும் கோவில்வாசல் என்று காரணப்பெயர் கொண்டு அழைக்கப்படுவது முருகன் பார்வையிலுள்ள இணுவில் சந்தியே ஆகும். இவ்வாலயத்தின் தொன்றுதொட்ட பெருமைக்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.
இவ்வாலயத்தின் ஆறுமுகப்பெருமானுக்கு 1976 ஆம் ஆண்டளவில் சித்திரதேர் ஒன்று திரு.வல்லிபுரம் சுப்பையா என்பவரால் ஊர்மக்களின் உதவியுடன் இனிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் இளந்தொண்டர்சபையினரால் 1977 ஆம் ஆண்டளவில் ஊர்மக்களின் பேருதவியுடன் அரிய சப்பறமும் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் வேட்டைத் திருவிழாவின்போது எம்பெருமான் பவனிவரும் சிவப்புக் குதிரைவாகனம் ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. கலைநுணுக்கங்கள் நிறைந்து கம்பீரமாகக் காட்சி தரும் குதிரைவாகனம் வேலாயுதர் செல்லையா என்பாரின் முன்னோர்களால் வட்டுக்கோட்டையில் இருந்த சிற்பவல்லுநர்களைக் கொண்டு உருவாக்கப்பெற்றதாகும்.
இதே போன்ற அமைப்பை உடையதே எம்பெருமான் சூரசங்காரத்தின் போது பவனி வரும் கடாவாகனமும் ஆகும். இதனுடைய காலமும் 100 ஆண்டுகள் கடந்ததே. சாத்திரி சின்னையா என்னும் அடியவருக்கு எம்பெருமான் கனவில் தோன்றித் தனக்குக் கடாவாகனம் அமைக்கும் படி கூறினார். இதற்கேற்ப அமைக்கப்பட்ட கடாவாகனத்திற்கு கொம்பினைச் சரியான முறையில் அமைப்பதற்குச் சிற்பி பெருமுயற்சி எடுத்தார். சிற்பியின் முயற்சி கைகூடவில்லை. சாத்திரி சின்னையாவின் கனவில் முருகப்பெருமான் தோன்றிக் கடா ஆட்டிற்குக் கொம்பு எப்படி இருக்குமோ அதே போன்ற தோற்றத்தில் ஒரு பற்றைக்குள் கொடியொன்று திரண்டு முறுகி இருப்பதை இடக்குறிப்போடு உணர்த்தி அருளினார். ஆண்டவனால் உணர்த்தப்பட்ட கொடியே இன்றும் இவ்வாகனத்தின் கொம்பாகப் பரிமளிக்கிறது. ஆண்டவனின் சித்தப்படி அமைக்கப்பெற்ற ஆறுமுகசுவாமியையும், கடாவாகனத்தையும் சூரசங்காரத்தின் போது தரிசிப்பதற்காக அயல் நாடான இந்தியத்தமிழகத்தில் உள்ள வேதாரணியத்தில் இருந்து கூட அன்றைய நாட்களில் அடியவர்கள் வந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
இவ்வாலயத்தில் காணப்படும் விக்கிரகங்கள் இறையருள் ததும்பும் முகபாவனையும் உடல்வாகும் கொண்டு அமையப்பெற்றுள்ளன. இவ்வாயலத்தின் சிலவிக்கிரகங்கள் காலத்தால் முந்தியவை. ஆராய்ச்சிக்குரியவை. இவ்வாலயத்தில் காணப்படும் முருகக்கடவுளுக்குரிய விக்கிரகங்களாகக் கருதப்படுபவை ஆறுமுகப்பெருமான், கல்யாணவேலர், முத்துக்குமாரசாமி, தண்டாயுதபாணி, சத்துருசங்கார வேற்பெருமான் ஆகிய திருவுருவங்களாகும். இவற்றில் சத்துருசங்கார வேற்பெருமானது உருவம் காலத்தால் முற்பட்டது. ஆராய்வுக்குரியது. இரண்டு கைகளிலும் அபயவரத அம்சங்களைக் காட்டும் நாலு கைப்பதங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு அமையப்பெற்ற அபயகரபாதங்கள் நுனியில் வேலைத்தாங்கிய வண்ணமும் அமையப்பெற்றிருக்கும் இத் திருவுருவம் ஆராய்ச்சிக்குரியதாகக் காணப்படுகிறது. இத்தகைய திருவுருவம் இந்தியாவிலும் எந்த ஆலயத்திலும் காணப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள திருப்பரங்குன்றத்தில் நின்றும் ஆறுமைல்கல் தொலைவில் ~~பாகை|| என்னும் கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் வில்வமரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஆறடி உயரங்கொண்ட கற்சிலை ஒன்று இதே அமைப்பை எடுத்துக் காட்டுகிறது. அவ்வூர் மக்களின் விருப்பத்திற்குரிய பெருந்தெய்வமாக சத்துருசங்காரவேற்பெருமானே விளங்குகிறார்.
ஆலயத்தின் சிவமூர்த்தங்களாகச் சோமாஸ்கந்த முகூர்த்தம், சிவலிங்கம், நடேசர், சந்திரசேகரர், போன்றன காணப்படுகின்றன. இவற்றுள் சிவலிங்கம் ஆராய்வதற்குரியதொன்றே! இது இரண்டு கோமுகைகளைக் கொண்ட ஆவுடையாரும் லிங்கமும் ஐம்பொன்கலந்த தாமிர விக்கிரமாக உருவாக்கப் பட்டுள்ளது. பிரமாணத்திற்கு அப்பாற்பட்டது எனவும் பிராமணர் அல்லாத ஏனைய வருணத்தார் வணங்கிப் பூசிப்பதற்கு ஏற்றது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
பரிவாரமூர்த்தங்களாகப் பிள்ளையார், சோமாஸ்கந்தர், வேணுகோபாலர், மகாலட்சுமி, தண்டாயுதபாணி, வைரவர், நாகதம்பிரான், சூரியசந்திரர், நவக்கிரகம், சண்டேஸ்வரர் என்பன அமைக்கப்பட்டுள்ளன.
இப் பரிவாரமூர்த்தங்களில் ஒன்றாகக் கருதப்படும் வைரவப்பெருமான் விளாத்தியடியான் என அழைக்கப்படும் இச்சந்நிதி தனிச்சிறப்புப் பெற்றது. வேண்டும் அடியார்களது வௌ;வினை போக்கவல்லவர் இவ்வைரவப் பெருமான். எம்பெருமான் காட்டிய அருட்திருவிளையாடல்கள் பல. அவற்றை எழுதமுற்படின் அது தனிப்புத்தகமாகவே அமைந்துவிடும்.
வாரந்தோறும் வருகின்ற வெள்ளிக்கிழமைகளில் கல்யாணவேலவரும், மாதம் தோறும் வருகின்ற கார்த்திகைத் திருவிழா, மாதப்பிறப்பு மற்றும் ஏனைய விசேட திருவிழாக்களின் போது முத்துக்குமாரசாமியும் வீதியுலா எழுந்தருளி அருட்காட்சி கொடுப்பர்.
மஹோற்சவத்தில் காணப்படும் 12 ஆம் திருவிழாவும், தைப்பூசத் திருவிழாவும் மஞ்சத் திருவிழாவாகக் காணப்படுகின்றன. சந்நியாசியார் காலத்தில் தைப்பூச மஞ்சத் திருவிழாவிற்கு இலங்கையின் பலபாகத்திலிருந்தும் இந்தியத் தமிழ்நாட்டில் இருந்துங்கூட அடியவர்கள் வந்து சென்றதாகக் கருதுவதற்கு ஏதுகள் பல உள. இணுவை மஞ்சம் பற்றிய ஆய்வுக்கட்டுரையில் தொல்பொருள் துறைப் பிரதேச அதிகாரி மா.பொ.செல்வரத்தினம் பின்வருமாறு கூறுகிறார். ~~1912 அளவில் மஞ்சம் வெள்ளோட்டம் காணப்பெற்றது. கிழக்கு வீதியருகே நிழல்தரு மரமாக அன்று நின்று, இன்று பெருவிருட்சமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் மருதமரத்திற்கருகே மஞ்சக் கொட்டகை அமைக்கப்பெற்றது. கூரையைக் கழற்றி மஞ்ச ஓட்டத்தைக் கவனிப்பதற்கு வல்வெட்டித்துறையில் இருந்து பெரிய கப்பிகள், பெரிய கப்பல் வடக்கயிறுகள் ஆகியவற்றோடு பலம்வாய்ந்த மக்கட்கூட்டமும் வரும். இத்திருவிழாவைப் பார்ப்பதற்கு நாலாதிக்கும் இருந்தம் மாட்டுவண்டிகள் மூலமாகவும் கால்நடையாகவும் மக்கள் வந்து கூடுவர். யாழ்ப்பாணப் பிரதான வீதியான காங்கேசன்துறை வீதியின் வடக்கே மருதனார்மடம் தொடக்கமாவும் தெற்கே தாவடிச் சந்தி வரையும் கிழக்கே கோண்டாவில் தொடக்கம் மேற்கே சுதுமலை வரைக்கும் சனக்கூட்டமாக இருக்கும்|| எனக் குறிப்பிட்டுள்ளார்.
மார்கழி மாதத் திருவெம்பாவைத் தினத்தில் மணிவாசகப் பெருமான் வீதியுலாவந்து திருவெம்பாவை பாடி அமைவதாக திருவிழாக்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. இறுதி நாளான திருவாதிரையின் போது அடியார்கள் பசனைக்கேற்ப நடராஜப்பெருமான் நடனமாடி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உட்பிரகாரக் கோவில்கள் ஐந்தும் (சோமாஸ்கந்தர், சந்தான கோபாலர், இலக்குமி, நாகதம்பிரான், மணிக்கூட்டு வைரவர், சந்திர சூரியர் கோவில்கள்), வசந்தமண்டபம், யாகசாலை என்பனவும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. 80 அடி நீளமும், 48 அடி அகலமும் கொண்ட மணிமண்டபமும் பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாலயத்திற்கு இரண்டாவது கண்டாமணி வெளிநாட்டு அன்பர்களின் உதவியுடன் திரு.செ.சோதிப்பெருமாள் ஆசிரியரது பெருமுயற்சியால் இலண்டனிலிருந்து வருவிக்கப்பட்டு 2001 ஆம் ஆண்டளவில் புதிதாக அமைக்கப்பட்ட மணிக்கூட்டுக் கோபுரத்தில் ஏற்றப்பெற்று ஓங்கி ஒலிக்கிறது. தற்போது இவ்வாலயம் 2 மணிக்கோபுரங்களையும் 5 தளங்களைக் கொண்ட இராச கோபுரத்தையும் கொண்டு புதியதோர் பரிமாணத்தில் காட்சியளிக்கிறது. ஆறுமுகசுவாமி வாசலிலும் புதியதோர் கோபுரம் விரிவுரையாளர் காலாநிதி இ.விக்கினேஸ்வரன் அவர்களின் பெருமுயற்சியால் அமைக்கப்பட்டுக் குடமுழுக்காட்டப்பட்டது.
 இணுவில் கந்தசுவாமி ஆலயம்
எம்பெருமானாம் சுப்பிரமணியச் செவ்வேளுக்கு அன்று தொடக்கம் இன்றுவரை பாவலர்கள் பாமாலை புனைந்த வண்ணமும், ஆடல்வல்லோர் எம்பெருமானுக்குக் காவடி எடுத்து ஆடிய வண்ணமும், இசையாளர் எம்பெருமான் புகழை இனிமைததும்ப இங்கிதமாகப் பாடியவண்ணமும் உள்ளனர்.
அந்தவகைப் பாமாலை புனைந்த பாவலர்களையும் பாடல்களையும் எண்ணுமிடத்து, வறுத்தலைவிளான் மயில்வாகனப் புலவரின் இணுவைப்பதிகமும், இணுவைச் சின்னத்தம்பிப் புலவரின் கல்யாணவேலர் திருவூஞ்சலும், கணபதிதாசனின் இணுவை முருகன் பத்தி ரசக்கீர்த்தனையும், முதுபெரும்புலவர் திரு.சிற்றம்பலம் ஆசிரியரின் இணுவை அந்தாதியும், பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரத்தின் இணுவை முருகன் பிள்ளைத்தமிழும் நூல் வடிவில் உள்ளன. மேலும் தவத்திரு வடிவேற்சுவாமிகள், இணுவை அம்பிகைபாகன், வீரமணி ஐயர், பண்டிதர் இ.திருநாவுக்கரசு, பண்டிதர் இ.இராசலிங்கம், திரு.அ.க.வைத்திலிங்கச் சட்டம்பியார் போன்றோராலும் இணுவைக் கந்தப்பெருமானுக்குப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன
ஆண்டவருக்குக் காவடி எடுத்து ஆடுபவர்களான அனுமான் கதிர்காமர், தாமோதரம்பிள்ளை, புளியடி முருகேசு, வேலாயுதர் செல்லையா, காசியர் கணேசு, ஆசிரியர் இராசையா போன்றவர்களது காவடிகள் வருடாவருடம் குறித்த தினங்களுக்கு நேர்த்தியாக எடுக்கப்பட்டு வந்தன. தொடர்ந்தும் எடுக்கப்பட்டு வருகின்றன. இளந்தொண்டர்சபையினரின் காவடி தீர்த்தத் திருவிழாவின்போது அன்னை சிவகாமி அம்பாள் ஆலயத்தினின்றும் எடுக்கப்பட்டு இவ்வாலயத்தை வந்தடைகிறது
ஆலயத்தில் எம்பெருமான் புகழ்பாடும் இசையாளர் வரிசையில் சேதர்ச் சட்டம்பியார், தவத்திருவடிவேல் சுவாமிகள், பண்டிதர் இ.திருநாவுக்கரசு, வை.ஆறுமுகதாசர், குமாரசுவாமி, குமாரு அப்பா, பெரியதம்பி கந்தையா, போன்றோரும் தற்போது சி.அழகேசன், மா.நாகையா ஆசிரியர், சி.சிவபாதசுந்தரம், க.இராசேந்திரம், சுப்பிரமணியம், ந.பரமேஸ்வரன், இ.பாலராசன், முதலியோரும் இளந்தொண்டர் சபையினரும் அடங்குவர்.
ஆலயத்தின் பழமையும், சைவஉலகிற்கு எம்முன்னோர் விட்டுச்சென்ற ஆன்மீகப்பொக்கிசமான கலைப்பொருட்களும் முருகக்கடவுளின் அருளை நினைவூட்டக்கூடியவையாக அவனால் வழிகாட்டப்பட்டு அமைக்கப்பட்ட கட்டடங்கள், வாகனங்கள், திருவுருவங்கள் என்பனவும் தெய்வப்பொலிவைக் கொண்டனவே. இவ்வாறான அருள்வளங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டு இவ்வாலயம் விளங்குகின்றது.
பிற்குறிப்பு: இவ்வாலயச் சூழலில் அருள்மிகு மரங்களாக மருதமரம், அரசு, வேம்பு, ஆல், பலா, நெல்லி, இத்தி, கடம்பு, வன்னி, பன்னீர், நொச்சி, செண்பகம், சிவலிங்கமரம், உருத்திராட்சம், வில்வை, புளி, சந்த சாம்பிராணி, மகிழமரங்கள் என்பனவும் மற்றும் சிலமரங்களும் உள்ளன.
[box type=info]

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP