திருக்கரைசைப் புராணம்



திருக்கரைசைப் புராணம் என்ற நூல் “கரைசை” எனும் பதியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் புகழை விரித்துக் கூறுவதொன்றாகும். இப்பதி திருகோணமலைப் பகுதியில் மகாவலி கங்கைக் கரையோரத்திலே அமைந்துள்ளது. கரைசையம்பதியை அகத்தியதாபனம் எனவும் வழங்குவர். அகத்திய முனிவரே இதனைத் தாபித்தார் என்று இந்நூல் கூறும். இப்புராணம் சூதமுனியருளிச்செய்த வடமொழிப்புராணத்தினை தழுவிச்செய்யப்பட்டது என இப்புராணத்தின் வரலாறு கூறும் பகுதியில் கூறப்பட்ட போதும், தழுவப்பட்ட முதல்நூலின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இந்நூல் செய்த புலவர் பெயர் தெரியாததாகையால், அவர் செய்த நூற்பெயர் கொண்டு, அவரைக் கரைசைப் புலவர் என்ற காரணப்பெயராலழைப்பர். எனினும், நூலகச் சான்று கொண்டு அவர் ஈசானச் சிவனைக் குருவாகக்கொண்டவரென்றும், “கொற்றங்குடி வாழும் பிரான் சரவணத்துறுதி” கொண்டவர் என்றும் தெரிகின்றது. இவற்றிற்காதாரமாக அந்நூற் குருவணக்கமாய
அண்டர்பிரா னடமாடுந் தில்லைமணி
மன்றதனி லகலா தென்றும்
விண்டசிவ சித்தாந்த வேதாந்தப்
பொருள்விளக்கும் விளக்க மாகித்
தொண்டறியா நாயேனுக் கருள்புரிந்து
கிளைமுழுதுந் தொழும்பு கொண்ட
எண்டகுசீ ரீசானச் சிவன்மலர்த்தாண்
மறவாதென் னிதயந் தானே
என்ற செய்யுளையும்
அதன் புராண வரலாறு கூறும் செய்யுள்களில்,
வண்ணமலி வடகலைக் கொடுமுடியாந்
தென்கலை மணியார் தன்மைத்
தண்ணமரு மலரிட்டுத் தாடொழுவான்
பொருட்டங்ஙன் சாராநின்ற
கண்ணகலுங் கலைஞானத் தெளிவனைத்துங்
கைவந்த கலச யோனி
அண்ணலுமுத் தரமுகமே யாக்கியமா
வலிகங்கை யாடும் போதில்
ஆங்கொருபே ரற்புதமா வசரீரி
வாசகத்தா லண்ண லார்தம்
பாங்கமருந் தென்மலயம் பயின்றதமிழ்க்
குறுமுனிவ பயிலு கின்ற
வீங்கமரு மிக்கங்கை யிரும்பெருமை
யியல்பிவையா மிங்ங னீயு
மோங்கநம்மைத் தாபனஞ்செய் திடுதியென
வுவனறிய வுரைத்திட் டாரால்
அக்கணமே தாபனஞ்செய் தவ்விறைக்குச்
சூதமுனி யருளிச் செய்த
மிக்கதிரும் வடபாடைப் புராணத்தைத்
தென்கலையின் விருத்தப் பாவாற்
றிக்கிசைய வருந்தொண்டர் செய்தியென
வென்னறிவுஞ் சிறிது சேர்த்தி
ஒக்கவுரைத் தனன்கொற்றங் குடிவாழும்
பிரான்சரணத் துறுதி கொண்டே
ஆகிய விருத்தங்களைக் காட்டலாம்.
இவர் காலத்தை உறுதியாக கூறக்கூடிய சான்றுகள் ஏதும் இப்போது இல்லை. இப்புராணத்தை வே. அகிலேசபிள்ளை என்பார் 1893இலே பதிப்பத்து வெளியிட்டார்.
இந்நூலின்கண் கடவுள் வாழ்த்து, குருவணக்கம், புராண வரலாறு, அவையடக்கம் ஆகியன கொண்ட பாயிரப்பகுதிகளை விட இலங்கைச் சருக்கம், கங்கைச் சருக்கம், தாபனச் சருக்கம், பூசைச் சருக்கம் ஆகிய நான்கு சருக்கங்களுள. இதனை ஒரு தலபுராணம் என்றே கொள்ளத்தகும்.

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP