யோகர் சுவாமிகள்


எமது காலத்திலே வாழ்ந்து மறைந்த சித்த புருஷர்களில் யோகர் சுவாமிகள் மிகமிக முக்கியமானவர். கடையிற் சுவாமிகளின் சீடர்களில் ஒருவர் செல்லப்பா சுவாமிகள். செல்லப்பா சுவாமிகளின் ஒரே ஒரு சீடர் யோகர் சுவாமிகளாகும். செல்லப்பா சுவாமிகள் உலகத்திற்கு தன்னைக் காட்டிக்கொள்ளாது வாழ்ந்து மறைந்துபோன மகான். உலகத்தோர் கண்ணுக்கு பைத்தியக்காரன்போன்றே காட்சியளித்தார். அதனால் உலகம் அவரை விசர்ச்செல்லப்பா என்றே பெயர்சூட்டி அழைத்தது. செல்லப்பா சுவாமிகள் யோகர் சுவாமிகளுக்கு நான்கு மகாவாக்கியங்களை உபதேசித்தார். இந்த நான்கு மகா வாக்கியங்களும் சகல சாஸ்திரங்களினதும் சாரம் கொண்டவை. ஆதலின் இவை மகா வாக்கியங்கள் என்று அழைக்கப்பட்டன.


ஒரு பொல்லாப்பு மில்லை
எப்பவோ முடிந்த காரியம்
நாம் அறியோம்
முழுதும் உண்மை
சரித்திரப்பிரசித்தி பெற்ற மாவிட்டபுரத்திலே சைவ வேளான் குலத்தில் அம்பலவாணர் என்னும் சைவப்பெரியார் ஒருவர் வாழ்ந்தார். இவரது தர்மபத்தினி சின்னாச்சி அம்மையார். இவர்களது பூர்வ புண்ணிய விசேடத்தினாலே 29-05-1872இல் அவிட்ட நட்சத்திரத்தில் ஓர் ஆண்மகவு பிறந்தது. பெற்றோர் இக்குழந்தைக்கு யோகநாதன் என்று நாமகரணம் சூட்டினர். அம்பலவாணரின் சகோதரர் சின்னையா என்பவர் கொழும்புத்துறையைச்சேர்ந்த கத்தோலிக்க பெண் ஒருவரை திருமணம்செய்து தமதுபெயரை யோசேப்பு என்றும் மாற்றிக்கொண்டார்.
அம்பலவாணர் மஸ்கெலியா என்ற மலைப்பிரதேசத்தில் கடை ஒன்று நடத்தி வந்தார். யோகநாதனுடைய கல்வி விடயத்தை யேர்சேப்பு கவனித்து வந்தார். அதனால் யோகநாதன் மாவிட்டபுரத்தைவிட்டு கொழும்புத்துறையில் வாழவேண்டிய சூழ்நிலை உருவானது. அக்காலத்தில் சைவப்பாடசாலைகள் மிகமிகக் குறைவு. அதனால் யோகநாதனின் கல்வி கத்தோலிக்கப்பாடசாலையிலேயே ஆரம்பமானது. இளமையில் துடுக்குடையவராயும், புத்தி யுக்தி உள்ளவராயும் வாழ்ந்து வந்தார். யோகநாதனுக்கு வயது எட்டாயிருக்கும்போது தாயார் இறந்துவிட்டார்.
சிறியதந்தையார் யோகநாதனுடைய கல்வியில் மிகுந்த ஊக்கம் காட்டினார். ஆங்கிலக்கல்வி கற்கும்பொருட்டு செம்பத்திரிசியார் கல்லூரியில் இணைக்கப்பட்டார். பகலில் சிறிய தகப்பனார் வீட்டிலும், மலையில் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையிலுள்ள தந்தைவழி மாமியாராகிய முத்துப்பிள்ளை அவர்களுடைய இல்லத்துக்கும் போய்விடுவார்கள்.
எட்டாம் வகுப்புவரை ஆங்கிலம் கற்றார். அம்பலவாணர் யோகனை அழைப்பித்து தேயிலைத்தோட்டம் ஒன்றிலே வேலைக்கு அமர்த்தினார். மலையகத்தின் இயற்கைச் சூழ்நிலை யோகனின் மனதைக் கவர்ந்தது. ஒருநாள் யோகநாதன் சிவனொளிபாதம் சென்று சூரியன் உதிக்கும் காட்சியினை கண்டு மகிழ்ந்து வந்தார். சிவனொளிபாதம் சென்றுவந்த யோகநாதன் இயற்கையின் சூழலிலே தமது மனதை பறிகொடுத்து விட்டார். அதனால் தன்பாட்டிலேயே பேசத்தொடங்கினார். இது எல்லாம் உண்மை. எனது உடம்பு சிவன்சொத்து, சிவனுக்கே அது சொந்தம். அவனையே தேடிப்போனேன். இந்த விபரீத எண்ணங்களை கண்ட தந்தையார் இவரை யாழ்ப்பாணத்திற்கே அனுப்பிவைத்தார்.
யோகர் சும்மா இருக்கமாட்டார். உத்தியோகம் தேடித்திரிவார். இரணைமடுக்குளக் கட்டிட வேலை நடைபெற்ற காலம் அங்கு சென்றபோது பிறவுண் என்ற பொறியியலாளர் பண்டகசாலை பாதுகாவலர் என்ற உத்தியோகத்தை இவருக்கு அழித்தார். ‘உங்கள் கடமையை மறவாதீர்கள்’ என்று எல்லோருக்கும் உபதேசித்த சுவாமிகள் நேர்மையாகவும் உண்மையாகவும் வேலைபார்த்தார். பொறியியலாளரிடம் ஒரு நன்மதிப்பை பெற்றுக்கொண்டார்.
யோகநாதன் கிளிநொச்சியை விட்டு மாவிட்டபுரம் திரும்பினார். அவருக்கு அப்போது வயது 32. தந்தையும் இறந்துவிட்டார். தாயை எட்டு வயதில் இழந்தார், தந்தையை வாலிப வயதில இழந்தார். ஆனால் மாவிட்டபுர கந்தன கருணையை இழக்கவில்லை. கீரிமலையிலும் மாவிட்டபுரத்திலும் மாறிமாறி வசித்தார். கீரிமலையிலிருந்து நடையிலேயே நல்லூருக்கு வருவார். ஆத்மீகதாகம் மேலிட்ட காலம். குரு ஒருவரை தேடிஅலைந்த காலம். பற்றுக்கோடாக இருந்த இருமுதுகுரவரையும் இழந்தபோது பற்றுக்கோடு ஒன்றை நாடினார். நல்லூர்த்தேரடியில் செல்லப்பா சுவாமிகளை சந்தித்தார். செல்லப்பாச் சுவாமிகளின் பார்வை இவரை காந்தமெனக் கவர்ந்தது. குருநாதனை சந்தித்த அநுபவத்தை அவரே கூறுகின்றார்.
கருத்தில் நினைந்துருகி கைகூப்புந் தொண்டர்
வருத்தமெலாந்த தீர்க்கும் வடிவேல் – திருத்தலத்தில்
தேரடியில் தேசிகனை கண்டு தெரிசித்தேன்
ஆரடாநீ என்றான் அவன்.
விசர்ச்செல்லப்பா என்று மக்களால் ஏசப்பட்ட செல்லப்பாசுவாமிகளைச் சுழ ஒரு கூட்டம் கூடத்தொடங்கியிருந்த காலம். செல்லப்பா சுவாமிகளின் அரிய சீடர்கள் கதிரவேலுச்சாமியும், யோகநாதனும் ஆவர். பெரும்பாலும் மூவரும் ஒன்றுகூடித்திரிவர். சண்டைபோடுவர். சமையல் செய்வர். சமையல் முடியும் தருணத்தில் சட்டிபானையை உடைப்பர். இச்செயலைக்கண்டால் யார்தான் இவர்களைப் பைத்தியம் என்று கூறமாட்டார்கள்?
கொழும்புத்துறையில் சிற்றம்பலம் சம்பந்தர் என்னும் ஒரு சைவப்பெரியார் வளவில் றோட்டுப்பக்கமாக ஒரு இலுப்பை மரம். இந்த இலுப்பைமரத்தின் கீழேதான் யோகர் சுவாமிகளுடைய அருந்தவம் நடைபெற்றது. கொழும்புத்துறை வளவில் இருந்த கடையொன்றைத் திருநாவுக்கரவு என்பவர் திருத்தி அமைத்துக் குடிசை ஒன்று கட்டிக்கொடுத்து, சுவாமிகளை அதில் தங்குமாறு அவரும் அவரது தாயாரும் அன்புடன் வேண்டிக்கொண்டனர். அவர்களுடைய அன்புக்கு கட்டுப்பட்ட சுவாமிகள் பூத உடலைவிட்டு உயிர் பிரியும் வரை அக்குடிசையிலேயே வாழ்ந்து வந்தார்கள். சுவாமிகளை நாடி நாள்தோறும் கூட்டம்கூடத்தொடங்கியது. செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பெருங்கூட்டம். திருமுறைகள் பாராயணம் இடம்பெறும். எல்லாத்தரங்களிலும் உள்ள மக்கள் ஒன்றுகூடுவார்கள். ஆன்மீக தாகம் கொண்டவர்களும் வருவார்கள். தங்கள் இட்டல் இடைஞ்சல்களை தீர்த்துக்கொள்வதற்காகவும் வருவார்கள். சுவாமிகளை சோதித்து பார்க்கவும் வருவார்கள்.
சுவாமிகள் தம்மை நாடி வந்தவர்களுடைய உள்ளப்பாங்கை அறிந்து அவர்களுக்கேற்ற வகையில் புத்திமதிகள் கூறுவார்கள். சிலரை ஏசியும் துரத்துவார்கள். அதைப்பொருட்படுத்தாமல் தம்மைமேலும் மேலும் நாடி வந்தவர்களை அன்புடன் அணைத்து அருளுரை வழங்குவார்கள். அவர்களை ஏசுவதன் மூலம் அவர்கள் வினைகளைச் சுவாமிகள் தொலைத்துவிடுவார்கள். இவ்வுண்மையை உணர்ந்த அடியார்கள் சுவாமிகளின் மறமயக் கருணையை நினைந்து நினைந்து ஆனந்த பாஷ்பம் சொரிவார்கள்.
“எல்லோரும் ஒருகுலம், எல்லோரும் ஒரு இனம்” என்பது சுவாமிகள் தம்மை நாடிவருபவர்களுக்கு அடிக்கடி கூறும் உபதேசமாகும். ‘எனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் எல்லோரும் சமம்” என்றும் கூறுவார்கள். “நீயும் மனிதன் நானும் மனிதன் உங்கள் கடமையைப்போய்ச்செய்யுங்கள் இங்கே ஏன் வருகின்றீர்கள்? நாங்கள் பிச்சைக்காரர்கள், நாங்கள் சும்மா இருக்கின்றோம் எங்களைத்தொந்தரவு செய்யாதீர்கள்!” என்று ஏசிக்கலைப்பதும் உண்டு.
“கர்மவினையால் எமக்கு இப்பிறவி வந்தது. நாம் ஒன்றும் அறியோம், நாம் ஏன் இங்கு பிறந்தோம்? இப்பிறவியால் ஒரு பொல்லாப்பும் இல்லை, அதனால் பாதகமும் இல்லை, பிறப்பு வர இருந்தது, வந்துவிட்டது. நாங்கள் ஆத்மலாபத்தை நல்லாய்த்தேடிக்கொள்ளலாம்” என்று உபதேசம் செய்தார்கள்.
சுவாமிகளுடைய உபதேசங்களை எல்லோருக்கும் பரப்பவேண்டும் என்று அடியார் கூட்டம் விரும்பியது. சுவாமிகளிடம் மாதவெளியீடு ஒன்று வெளியிடுவது பற்றி அடியார்கள் விண்ணப்பித்தார்கள். சுவாமிகளும் அதற்கிசைந்து நாம் எல்லோரும் சிவத்தொண்டர்கள், நாம் செய்வது சிவத்தொண்டு, ஆகவே எமது வெளியீடும் ‘சிவத்தொண்டான்’ ஆக இருக்கட்டும் என்றார்கள்.1935ம் ஆண்டு மார்கழி மாதம் முதலாவது இதழாகிய சிவத்தொண்டன் திரு. க. கி. நடராசன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்தது. சிவதொண்டனுக்கு நிலையம் ஒன்று காங்கேசன்துறை வீதியில் 4-11-1953 இல் உருவானது. அந்த நிலைய மேல்மாடியில் இன்னும் தியான மண்டபத்தில் சுவாமிகளுடைய ஆத்மீக அலையை இன்னும் அனுபவிக்கலாம்.
சுவாமிகள் தமது அடியார்கள் எங்கெங்கு இருந்தார்களோ அங்கங்கெல்லாம் செல்வார். யாருக்கும் அறிவித்தல் கொடுக்க மாட்டார். இருந்தாற்போல் ஒரு அடியவருடைய வீட்டில் தோன்றுவார். கேள்வியுற்ற அடியவர்கள் எல்லோரும் அங்குவந்து கூடுவர். அவர்களுக்கெல்லாம் நல்லுபதேசம் கிடைக்கும். சிலசமயம் கண்மூடி சிவயோகத்திலே ஆழ்ந்து விடுவார். அன்பர்களும் தியானத்தில் மூழ்கி ஆனந்தம்பெறுவர். இரண்டு வருட காலம் சுவாமிகள் கொழும்புத்துறை ஆச்சிரமத்தைவிட்டு எங்கும் செல்லவில்லை. 24-03-1964 செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆயிலிய நட்சத்திரத்தில் சுவாமிகள் மகாசமாதி அடைந்தார்கள். சுவாமிகளுடைய குருபூசை ஆயிலிய நட்சத்திரத்தில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
எவ்வுயிரும் பெருமான் முன்னிலையென்று கருணைசெய்
கடவுள் உள்ளும் புறம்பும் உள்ளார்
சுவாமிகளின் மறைவுக்கு பின்னர் அவரது சீடர்களான மார்க்கண்டு சுவாமிகள், சந்த சுவாமிகள், செல்லத்துரை சுவாமிகள் போன்றோர் அவரது பணியை முன்னெடுத்து சென்றார்கள்.
[box type=info]யோகர் சுவாமிகள் பற்றிய இந்தக்குறிப்பு நா. முத்தையா அவர்களாலே எழுதப்பெற்று சாவகச்சேரி ஆத்மஜோதி நிலையத்தால் வெளியிடப்பட்ட 1980ம் ஆண்டு சாகித்தியமண்டல பரிசுபெற்ற ஈழத்துச்சித்தர்கள் என்னும் நூலில் இருந்து பெறப்பட்டு தேவைக்கேற்றவாறு சுருக்கி பதியப்பட்டுள்ளது.[/box]

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP