செல்லப்பா சுவாமிகள்chellappaசெந்தமிழும் சைவநெறியும் வளர்த்த யாழ்ப்பாணத்தின் தலைநகராய் விளங்கியது நல்லூர். நல்லூர்க்கந்தன் இருந்து அருள் பாலிக்கும் இவ்வூரில் நல்லூர் தேரடிக்கு தென்புறத்தே வயல்நிலங்கள் பல இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை
யை சேர்ந்த வல்லிபுரம் என்னும் வேளாளர் நல்லூரைச்சேர்ந்த பொன்னம்மா என்பாரை மணந்து இங்கே வேளாண்மை செய்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமாக நான்கு பிள்ளைகள். ஆண்களில் ஒருவரின் பெயர் செல்லப்பா.
செல்லப்பா இளமையில் கந்தர்மடத்து சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வி கற்றபின், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குச் சென்று ஆங்கிலங் கற்று வந்தார். ஓரளவு கல்வி கற்றபின் உண்டான சூழ்நிலை காரணமாகப் படிப்பை நிறுத்தி உத்தியோகம் பார்க்க வேண்டியவரானார். யாழ்ப்பாணக் கச்சேரியில் ஆராய்ச்சி உத்தியோகம் பெற்று வெகுதிறமையாகக் கடமையாற்றி அதிகாரிகளின் அபிமானம்பெற்று பலமுறை களஞ்சியப் பொறுப்பதிகாரியாகவும் பதிற்கடமையும் பார்த்து வந்தார்.

செல்லப்பர் தமது உத்தியோகங்களை நேர்மையாகவும் திறமையாகவும் ஒழுங்காகவும் அதிகாரிகள் மெச்சும் வகையில் பார்த்து வந்த காலத்தில், அரசவுத்தியோகம் ஆதிக்கம் செல்வாக்கு முதலிய சிறப்புக்களில் மனங்கொள்ளாது, உள்ளத்தில் ஊற்றெடுத்து வந்த ஒரு வேகத்தின்பால் சென்ற வண்ணம் வாழ்ந்து வந்தார். ஞான நாட்டங் கொண்ட செல்லப்பரின் நடையுடை பாவனைகளில் நாளிலும் பொழுதிலும் மாற்றங்கள் உண்டாயின. அவரின்போக்கு பெரிய புதிராகவே இருந்தது. எவருக்கும் பிடிகொடாமல் தாமும் தம் கடமையுமாக வெளியே நடந்த வண்ணம், தம் அகநாட்டத்தில் கருத்தூன்றிக் கந்தசுவாமியாரும் தாமும் அர்த்த சாமத்தின்பின் அந்தரங்க தொடர்புகொண்டு வந்தார். ‘பிதாவே பிதாவே’ என்று பிதற்றியும் வந்தார்.
உள்ளே ஊறிவந்த ஒருவகை ஞானப்பெருக்கு, வெளியெ வழியத்தொடங்கிய வேளையில் அவரின் போக்கு பித்தர் போலவும், பிசாசு பிடித்தவர் போலவும், குழந்தை போலவும் இருந்தது. தமக்குள்ளேயே பேசிக்கொள்ளுதல், ஓமோம் என்று தலையசைத்தல், வலக்கையை மேலே உயர்த்தி விசுக்கி உரத்துப்பேசி, வருவோர் போவோரைத் தம்மை அண்டவிடாது துரத்தி வந்தார். அவர் தமக்கு அண்மையிற் சென்றோரைத் துரத்தத் தொடங்கிய காலத்திலேயே தமது உத்தியோகத்தொடர்பையும் துண்டித்து கொட்டிலின் மூலையில் குந்தியிருக்கத்தொடங்கினார்.
செல்லப்பா சுவாமிகள் வெளியே உலகத் துறவில் விசர்க்கோலமும், உள்ளத்திலே ஒடுக்கமும் ஞான நாட்டமும் சிந்தனையுங் கொண்டு, நல்லூரான் திருவருள் வெள்ளத்தில் நாளும் நனைந்து மூழ்கியிருந்த காலத்திலே, நல்லூரை வட்டமிட்ட கடையிற் சுவாமிகளின் கடைக்கண் பார்வையும் தீட்சையும் உபதேசமும் கிடைத்தன என்று நம்புதற்கு இடமுண்டு. குருவருள் பெற்ற பேற்றினாலே புறக்கோலம் நீங்காமலே அந்த கரணசுத்தி பெற்று, பசுகரணங்கள் பதிகரணங்களாக மலரப்பெற்றார். முன்னர் மூலையில் முடங்கிக்கிடந்தவர், குருவருட் பிரகாசத்தாலே முச்சந்திக்கு வந்தாற்போலத் தேரடியில் வந்து குந்தியிருந்து யாவருந் தரிசிக்கக் கூடியவராயிருந்தார். தேரடியிற் குந்தியிருந்து சிந்திக்கத் தொடங்கிய காலத்திலே அடியார்கள் பலர் அவரிடம் ஏதோ அற்புத சக்தியுண்டென்று அனுமானித்துஈ அவரைச் சூழ்ந்து மொய்க்கத்தொடங்கினார்கள். அதே வேளையில் அவர் தமக்குள்ளே சிந்தனைப்பேச்சுக்களை முணுமுணுக்கக் கண்ட சிறுவர்கள், விசரன் என்று கல்லெறியவுந் தொடங்கினர்.
உள்ளத்தில் எழுந்த துறவு மனப்பான்மையால் உலகத்தை அறவே துறந்த செல்லப்பா சுவாமிகள், வெளயுலகத்தவருக்கு விசரனாகவும், ஆன்ம ஈடேற்றங் கருதிய பெரியவர்களுக்கு ஞானியாகவும் காட்சியளித்தார். அவர் பொது மக்களிடம் வாங்கிய பட்டத்துக்கமைய மேலும் பைத்தியகோலத்தை மிகைப்படுத்தி வந்தார். பகல் முழுதும் விசர்க்கோலம் கொண்டிருக்கும் செல்லப்பா சுவாமிகள், இரவில் அர்த்தசாமப் பூசை நிறைவுற்று எல்லோரும் அகன்ற பின்னர் மெதுவாக நல்லூர் கோபுர வாசற்பக்கம் சென்று முருகனைத்தேடுவார்போல பிதாவே! பிதாவே! என்று கூவியழைத்து, அவருடன் சொல்லெதிர் பெற்றும் பெறாமலும் உரையாடி வந்தார்.

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP