விக்கிலீக்ஸ் வரலாறு -Wikileaks History-





ஜூலியன் பால் அசாங் (julian paul asang
se), வயது 41, பிறப்பால் ஆஸ்திரேலியர், ஹைடெக் நாடோடி. பூமிப்பந்தில் இருக்கும் பாதி நாடுகளால் ரகசியமாகத் தேடப்படும் நபர். இன்றையத் தேதியில் ஜூலியனைத் தவிர யாராலும் பதில் சொல்ல முடியாத ஒரே கேள்வி, ‘ஜுலியன் இப்போது எங்கிருக்கிறார்?
தற்பொழுது லண்டன் சிறை இவர் நாடுகடத்தப்படலாம்??????? என்பது தான். அந்த அளவுக்கு தான் இருக்கும் இடத்தை ரகசியமாக அடிக்கடி மாற்றிக் கொள்ளும் மாயாவி. தன் வாழ்நாளின் அனேக பொழுதுகளை விமான நிலையத்தில் பறக்க விடும் இவரின் பயணங்கள் அனைத்துமே ஒரே இலக்கை நோக்கி, அது ‘விக்கிலீக்ஸ்’.
விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூளை. தளத்தின் முகவரிக்குச் சொந்தக்காரர். பிறந்தது ஆஸ்திரேலியாவில், இரண்டு திருமணங்கள் செய்தும் தனியாக வாழும் தாய், மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து, விவாகரத்து செய்து தன் மகனையும், மனைவியையும் பிரிந்து வாழ்தல் என்று நிம்மதியில்லாத சொந்த வாழ்க்கை, இவை அனைத்தையும் தாண்டிய ஒரு உத்வேகம் ஜூலியனிடம் இருந்தது. அது கணினியும், கணினி சார்ந்த வாழ்க்கையும். இயற்பியலும், கணிதமும் கற்றாலும், கணினி மீதான காதல் 16 வயதிலேயே நிரல்கள் எழுதும் திற்மையினைக் கைவரச்செய்தது.

16 வயது ரொம்ப ஆர்வக்கோளாறான வயதென்றாலும், ஜூலியனின் ஆர்வம் கணினியின் பால் சார்ந்திருந்ததால், 16 வயதிலேயே கனடாவின் புகழ்பெற்ற நோர்டெல் (nortel) தகவல் தொடர்பு நிறுவனத்தின் ஆஸ்திரேலிய வழங்கியினை (server) தன் வசப்படுத்தி, அந்த வலையமைப்பின் நிர்வாகியிடமே “It’s been nice playing with your system. We didn’t do any damage and we even improved a few things. Please don’t call the Australian Federal Police” என்று கும்மியடித்துக் கலாய்க்கும் அளவுக்கு ஹேக்கிங் கில்லாடி. ஹேக்கிங் என்பது வலையமைப்பின் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடித்து அவற்றைப் பயன்படுத்தி (exploiting the vulnerabilities) திருட்டுத்தனமாக வலையமைப்புக்குள் நுழைவது, விரைவில் தனித் தொடரில் ஹேக்கிங் குறித்துப் பார்ப்போம் :D .
இப்படி தன் திறமைகளை வைத்துச் சேட்டைகள் செய்து கொண்டிருந்த ஜூலியனைத் தேடி விரைவிலேயே ‘ஜூலியன், யூ ர் அண்டர் அரெஸ்ட், நான் உங்களை கைது செய்றேன்’ என்றபடி ஒரு ஆஸ்திரேலிய மேஜர் சுந்தர்ராஜன் இயற்கையாக வருகை தந்தார். சுமார் 31 ஹேக்கிங் குற்றங்கள் சுமத்தப்பட்டு அனைத்துமே ‘சரியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால்’ என்று நமக்கு மிகப் பழக்கமான வசனத்துடன் முடித்து வைக்கப்பட்டது. ஆதாரங்கள் இல்லாமல் ஹேக்கிங் செய்வதில் ஜூலியனுக்கு இருக்கும் நிபுணத்துவத்துக்கு இச்சம்பவம் ஒரு உதாரணம். இப்படி அந்த காலத்திலேயே ஜூலியன் வசப்பட்ட வலையமைப்புகளில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமும் அடங்கும். ‘வலையமைப்பின் பாதுகாப்பு வலையங்களை உடைத்து உட்புகுந்தால் கணினிகளுக்கோ, அதிலுள்ள கோப்புகளுக்கோ எந்த சேதத்தினையும் விளைவிக்காதீர்கள், உங்கள் உட்புகுதலுக்கான ஆதாரங்களை அழிப்பதைத் தவிர வேறெந்த சேதத்தினையும் செய்யாதீர்கள்’, இவை ஜூலியனின் உபதேசங்கள்.
விவாகரத்தின் போது அரசுத் துறைகளிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் மிகப்பெரும் பொது நிறுவனங்கள், அரசுத் துறைகள் சார்ந்த வலையமைப்புக்குள் சென்றதில் கிடைத்தத் தகவல்கள் மூலம் அவர்களின் போலியான கோர முகங்களைக் கண்ட ஜூலியனுக்குள் சில மாற்றங்கள் உண்டாயின. இந்த சமூகம் எப்படி ஒரு போலியான கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு ஒவ்வொரு தனிமனிதனையும் அலைக்கழிக்கிறது என்பதனைக் கண்ட ஜூலியன் ‘ஓ..ஒரு தெய்வம்… படி தாண்டி வருதே..’ என்ற பாடல் முழங்க ஆஸ்திரெலியாவினை விட்டு வெளியேறி, தன் சிந்தனைகளை ஒத்த நண்பர்களைத் தேடிய பயணத்தை தொடங்கினார். ஊடக போதையில் ஊறிக் கிடக்கும் இச்சமூகத்தினை ஒரு ஊடகப் புரட்சியின் மூலமே தெளிய வைக்க முடியும் என்று நம்பிய ஜூலியன் அதற்குக் கொடுத்த செயல் வடிவம் தான் ‘விக்கிலீக்ஸ்’.



ஒரு இணையதளம், பெயர் ‘விக்கிலீக்ஸ்’ (www.wikileaks.org).(www.wikileaks.ch)ஆரம்ப காலங்களில் இருந்து விக்கிலீக்ஸ் குறித்து அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. . வழக்கம் போல நாம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட புதிய/பழையத் தகவல்கள் குறித்து இங்கு பேசப்போவதில்லை, விக்கிலீக்ஸ் எப்படிக் கட்டமைக்கப் பட்டது, அதன் வரலாறு, எவ்வாறு செயல்படுகிறது, இணையத்தளத்தின் பாதுகாப்பு, அதில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து இத்தொடரில் விரிவாகப் பார்ப்போம்.

விக்கி’ என்பது வருவோர், போவோர் என் யார் வேண்டுமானாலும் பங்களிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் இணையத்தளங்களைக் குறிக்கப் பயன்படுத்தும் வார்த்தை. உதாரணத்திற்கு தகவல் களஞ்சியமான என்சைக்ளோபிடியாவின் விக்கி வடிவம் தான் விக்கிப்பிடியா. இதே நேர்கோட்டில் ரகசியத் தகவல்களை உலகத்தில் உள்ள எவரின் பங்களிப்பின் மூலமாகவும் வெளியிடும் இணையதளம் தான் விக்கிலீக்ஸ். விக்கிலீக்ஸ் தளத்தின் பங்களிப்பாளர்களின் விவரங்கள் யாருக்குமே தெரியாது, தாங்களாக முன்வந்து சொல்லும் வரை.

உலகப்பந்தில் யாருக்குமே தெரிந்திருக்காத, நம்ம வீடு இருக்கும் தெருவின் வட்டபிரதிநிதிகளை விமர்சித்தாலே, அவர்கள் ‘ஆளடி’ அருணாவாக உருமாறும் வாய்ப்பிருக்கும் இக்காலத்தில் சர்வ வல்லமையுடன், சகல அதிகாரமும் படைத்த பல நாட்டு அரசாங்கங்கள், வல்லரசுகள் போன்ற பயில்வான்களுடன் மோதும் விக்கிலீக்ஸ் எவ்வளவு மிரட்டல்களையும், சவால்களையும், நிர்ப்பந்தங்களையும் சந்திக்கும் என்பதை எவ்வளவு உயரத்தில் நின்று கற்பனை செய்து பார்த்தாலும் எட்டவே எட்டாது :) . ‘சர்வ அதிகாரமும் படைத்த’ என்று சொல்லப்படும் இந்த அரசாங்கங்கள், தங்கள் விரலசைவில் பல்லாயிரம் உயிர்களைப் பறிக்கப் போகும் போர் உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு சரக்கடிக்கப் போய்விடும் ஏகாதிபத்திய தலைவர்கள், இவர்கள் எல்லாருமே விக்கிலீக்ஸ் விஷயத்தில் செமிக்காமல் செருமிக் கொண்டிருப்பது ஏன்?. உலக நாடுகளுக்கெல்லாம் ‘அந்தாளு சொல்றத நம்பாதீங்க, அவன் பொய் சொல்றான்’ என்று கோவை சரளா போல் கூவிக் கொண்டிருக்கிறாரே அமெரிக்கப் பேரரசாங்கக் காரியதரிசி ஹிலாரி கிளிண்டன், ஏன்?. ‘தொழில்நுட்பம்’!!!.

‘நாந்தான் அப்பவே சொன்னேன்ல’ என்று கோடிட்டுக் காட்டும் கர்ணப் பரம்பரை வழக்கப்படி, வருங்காலத்தில் புரட்சி வித்துகள் இணையத்தின் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் கையிலுமே இருக்கிறதென்பதை முன்பே இப்பதிவில் சொல்லியிருப்பதை இக்கணத்தில் நினைவுபடுத்த சுடுதண்ணி கடமைப்பட்டிருக்கிறது :D . விக்கிலீக்ஸ் விஷயத்தில் தொழில்நுட்பம் தன் விஸ்வரூபமெடுத்து ஆடிக் கொண்டிருந்தாலும் அதில் ஒரு சட்ட ரீதியான சூட்சுமம் இருக்கிறது. ராஜாங்க ரகசியங்களை வெளியிட்டால் ஜனநாயாக நாடுகளில் கூட கடும் தண்டனைகள் உள்ள இக்காலத்தில் உலகிலேயே ‘வெட்டிப் போடும்’ தண்டனைகளுக்குப் புகழ்பெற்ற சவுதி அரேபியா போன்ற நாடுகளின் அரசாங்கப் பதிவுகளைக் கூட பந்தியில் வைத்துச் சந்தி சிரிக்க வைக்கும் விக்கிலீக்ஸ், சட்ட ரீதியான பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறது?.

விக்கிலீக்ஸ் தனது இணைய வழங்கிகளை (webservers), ஊடகத் தகவல்களின் ஆதாரங்களைப் பற்றிக் கேள்விகள் எழுப்ப முடியாத சட்டதிட்டங்கள் கொண்ட நாடான ஸ்வீடனில் வைத்திருக்கிறது. இது கிட்டத்தட்ட அமெரிக்க வழங்கிகளின் மூலம் செயல்பட்டு வரும் டொரண்ட் தளங்களின் உரிமையாளர்கள் மேல் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் திருட்டு விசிடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காத்திருக்கும் நிலைக்கு ஒப்பானது. விக்கிலீக்ஸ் நபர்கள் வில்லங்கமான நாடுகளுக்குப் போனால் கைகளுக்குக் காப்பும், மாமியார் வீட்டு விருந்தும் நிச்சயம்.

விக்கிலீக்ஸ் தளத்திற்கு தகவல்கள் அளித்த ஒரு அமெரிக்க இராணுவ வீரருக்கே வாழ்க்கை முழுவதும் சிறைதண்டனைக்கு வாய்ப்பிருக்கும் வேளையில், விக்கிலீக்ஸ் நப்ர்கள் சிக்கினால் சிறைக்கும், நீதிமன்றத்துக்கும் மாறி மாறி அலைக்கழித்தே உயிரெடுத்துவிடுவார்கள். இத்தகைய அபாயத்தில் இருக்கும் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் உரிமையாளர் யார்?, அந்த இணையத் தளம் யார் பெயரில் பதிப்பிக்கப் பட்டு இருக்கிறது?. தங்களுக்குத் தகவல்களை அனுப்பி வைக்கும் நபர்களின் பாதுகாப்புக்கு விக்கிலீக்ஸ் பயன்படுத்தும் தொழில்நுட்பம் என்ன? , அதை நாம் எப்படி உபயோகப் படுத்துவது ;)

ஜூலியனின் சித்தாந்தத்தில் ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் ஒன்றிணைந்தனர், அதில் பலநாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் அடக்கம். விக்கிலீக்ஸ் போன்ற செயல்வடிவங்களுக்கு சட்டப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பது ஜூலியனுக்கு தெரிந்தே இருந்தது.இது நாள் விக்கிலீக்ஸ் தளத்திற்கென முழுநேரம் பணிபுரிவது ஐந்து நபர்கள் மட்டுமே என்பதையும், உலகெங்கும் ஆயிரத்திற்கும் அதிகமானார் தன்னார்வத் தொண்டர்களாக ஊதியமின்றி பணிபுரிகின்றனர் என்பதையும் நினைவில் கொள்ளவும். தனது வாடிக்கையாளர் விவரங்களை சட்ட ரீதியாகப் பாதுகாக்கும் ஸ்வீடனைச் சேர்ந்த PRQ என்ற நிறுவனத்திடம் விக்கிலீக்ஸ் தளத்தினைப் பதிவு செய்யப் பரிந்த்துரைத்த சட்ட ஆலோசகர்களின் சொல்படி www.wikileaks.org என்ற இணையதள முகவரி, 2006 ஆம் ஆண்டு ஒரு சுபயோக சுபதினத்தில் ஜூலியனின் பெயரில் பதிவுசெய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஜூலியனுக்கு வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி ஆட்டமாக
மாறிவிட்டது. பதிவு செய்யப்பட்டது ஸ்வீடனின் PRQ நிறுவனமாக இருந்தாலும் தள முகவரிக்கு ஏறக்குறைய 20 கோப்பு நிரல்களை வழங்கும் வழங்கிகள் பெல்ஜியம் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் உள்ளன. எல்லா நாடுகளிலுமே தகவல் பரவலுக்கு சட்டப்படிப் பாதுகாப்பு வழங்கும் நாடுகள். ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வழங்கியில் இருந்து தளம் செயல்படும், மேலும் எந்த நேரத்திலும் எந்த நாட்டின் நிர்ப்பந்ததிற்காகவும் ரகசியத் தகவல்களை நீக்குவதில்லை என்ற ஜூலியனின் கொள்கை வசதிக்காகவும் இந்த ஏற்பாடு. ஒரு நாட்டில் வழங்கியை முடக்கினால் வேறொரு நாட்டில் இருந்து தளம் தடையின்றி செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. எல்லாம் தயார், தங்கள் தளத்தில் அதிரடியாக வெளியிடுவதற்கு ரகசியக் கோப்புகள் வேண்டுமே எப்படித் திரட்டுவது?. ஜூலியனிடம் ஒரு திட்டம் இருந்தது !.

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP