செகராசசேகரம்



செகராசசேகரம் என்ற வைத்திய நூல் செகராசசேகர வைத்தியம் என்றும் வழங்கும். இதனாசிரியர் யாரென்பது தெரியவில்லை. இது ஆயுள்வேத வைத்திய முறையைத் தழுவிச்செய்யப்பட்டுள்ளதென்பது,
மணிதங்கு வரையு ளாதி
மன்னுயிர் படைத்த போது
பிணிதங்கு வகையு நோயின்
பேருடன் குணமுங் காட்டி
அணிதங்கு மருந்துங் காட்டு
மாயிரு வேதந் தன்னைக்
கணிதங்கு வகையால் வேதங்
கடந்தமா முனிவன் செய்தான்.
என்ற செகராசசேகர ஆரம்பச் செய்யுளாற் றெரிகின்றது. மேலும் ‘வேதங் கடந்த மாமுனிவன்’ செய்த ஆயுள்வேத நூலில் இருந்து சிலவற்றை தேர்ந்தெடுத்து அந்தாதித் தொடைபெற்ற விருத்தமாக இதனாசிரியன் இதனைச் செய்தானென்பதும், அவற்றைக் கொய்தெடுத்த ஒழுங்கிலேயே இதனைக் கோத்தானென்பதும்,
செய்தவர் தனது நூலும்
தேர்ந்தோர் தெரிப்பும் பார்க்கிற்
பொய்தவம் பயர்ந்த பௌவம்
போலுமிங் கிதனை யாய்ந்து
வெய்தவ நோய்கள் தீர்
விருத்தவந் தாதி யாகக்
கொய்தவ வொழுங்கி லேதான்
கோப்புற செப்ப லுற்றாம்.
என்ற இந்நூற்செய்யுள் காட்டி நிற்கும். அச்சில் வந்த ‘செகராசசேகர வைத்தியம்’ என்ற நூல் பெரும்பாலும் இவற்றுக்கமையவே இருப்பினும், பற்பலவிடங்களிலும் அந்தாதித் தொடையற்றிருத்தலைக் காணலாம். இதனால் அச்சேறிய இந்நூற் பிரதிகளிற் பல செய்யுள்கள் தவர்க்கப்பட்டுள்ளன என்றே கொள்ளவேண்டியுள்ளது. இந் நூலிற் சில செய்யுள்கள் செகராசசேகரன் புகழ் கூறும். அங்காதிபாதம் பற்றிய செய்யுளில்,
செயம்பெறு சிங்கை நாடன் செகராச சேக ரன்றான்
என்றும், முகவாத சன்னிக்கு மருந்து கூறும் செய்யுளில்,
செகராச சேகர னெனும்
சிங்கையா ரியனையெதி ரொண்ணார்க ளென்னவே
திசைகெட் டகன்று விடுமே
என்றுஞ் சிங்கைச் செகராச சேகரன் புகழ் பேசப்படுவதை காணலாம். எனவே இந்நூல் ஒரு சிங்கைச் செகராசசேகரன் ஆட்சிக்காலத்திற் செய்யப்பட்டதென்று மட்டுமே கூறக்கூடியதாயிருக்கின்றது.
இந்நூலிலே வியாதிவரும்வகை, அங்காதி பாதம், சலமலப்பகுப்பு, உணவு வகை, நாடிவிதி, சுரவிதி மருந்தும் குணமும், சன்னிவிதி, சன்னி பதின்மூன்றின் குணமும் மருந்தும், மூலவியாதியின் மருந்தும் குணமும், விக்கலின் குணமும் மருந்தும், விக்கற் சிலேட்டுமக் குணமும் மருந்தும், சுவாதம் பத்தின் குணமும் மருந்தும், வாதத்தின் குணமும் மருந்தும், கசரோகக் குணமும் மருந்தும், காசம், குட்டரோகம், கரப்பனின் குணமும் மருந்தும், வலியின் குணமும் மருந்தும், உதரரோகங்கள், உட்குத்துப் பிறவீச்சுக் குணமும் மருந்தும், நீரிழிவின் குணமும் மருந்தும், முதுகுப்பிளவையின் குணமும் மருந்தும், பித்தம் 42இன் குணமும் மருந்தும் கூறப்பட்டுள்ளன.
செகராசசேகரம் என்கின்ற இந்த வைத்திய நூல் பற்றிய குறிப்பு கலாநிதி க. செ. நடராசா அவர்களால் எழுதப்பெற்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் 1982 இல் வெளியிடப்பெற்ற ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி எனும் நூலில் இருந்து எடுக்கப்பெற்றது. மேலதிகமாக கலாநிதி .சி. க. சிற்றம்பலம் அவர்களால் பதிப்பக்கப்பெற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினூடாக 1992 இல் வெளியிடப்பெற்ற யாழ்ப்பாண இராச்சியம் என்கின்ற நூலும் உசாத்துணையாகக் கொள்ளப்பெற்றது

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP