இலங்கை நாட்டின் வட மாகாணத்தின் முடிவு எல்லையில் யாழ் மாவட்டம் அமைந்துள்ளது. தலைநகர் கொழும்பில் இருந்து கிட்டத்தட்ட 410 கிலோ மீற்றர் தொலைவில் யாழ்ப்பாணம் உள்ளது. 7 தீவுகள் அடங்கலாக யாழ்ப்பாணத்தின் மொத்த நிலப்பரப்பு கிட்டத்தட்ட 1025 சதுர கிலோ மீற்றர்களாகும். யாழ் மாவட்டம் தீவு, வலிகாமம், வடமராட்சி மற்றும் தென்மராட்சி ஆகிய நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.

யாழ் குடாநாடு வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கில் இந்தியப் பெருங்கடலை எல்லையாகக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் தெற்கு எல்லைகளாக யாழ்ப்பாண கடனீரேரியும் கிளிநொச்சி மாவட்டமும் அமைந்துள்ளன. தரைவழியாக ஆனையிறவு கடநீரேரியை கடந்து யாழ்ப்பாணத்துக்குள் பிரவேசிக்க வேண்டும். இவ்ஆனையிறவு கடநீரேரி இலங்கையின் மிக முக்கியமான உப்பளங்களில் ஒன்றாக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாடு அல்லது ஒரு பிரதேசம் பிரபலம் அடைய வேண்டும் என்றால் அங்கு துறைமுகங்கள், விமான நிலையங்கள் இருக்க வேண்டும். அந்தவகையில் யாழ்பாணத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் பலாலி விமானநிலையமும் காங்கேசந்துறை துறைமுகமும் அங்குள்ளன. இவற்றின் மூலம் யாழ் மாவட்டத்திற்கான தொடர்புகள் மேலும் இலகுபடுத்தப்படுகின்றன. ஒரு காலங்களில் யாழ்ப்பாணத்தின் இளவட்டங்கள் காலையில் படகு மூலம் தென் இந்தியாவிற்கு சென்று அங்கு வெளியாகும் புதிய தமிழ் திரைப்படங்களை பார்த்துவிட்டு மாலையில் திரும்புவது வழமையாகும். இன்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள வயதில் பெரியவர்களிடம் பேசிப்பார்த்தால் அவர்களின் இளவயது நினைவுகள் எமக்குத் தெரியவரும்.

யாழ் மாவட்டம் ஒரு உலர் வலயப் பிரதேசமாகும். இங்கு பனை மற்றும் தென்னை ஆகிய பயிர்கள் திடல்களாக பரந்து விரிந்துள்ளன. பழங்காலங்களில் பெண்களுக்கு சீதனம் வழங்கும்போது பனந்திடல்களை வழங்கினார்கள். அதனால் முழுக்குடும்பமுமே பசி, பட்டினி இன்றி வாழ்ந்ததுடன் பனந்திடல்களை வழங்குவதை அவர்கள் கௌரவமாக நினைத்தார்கள்.
ஒக்டோபர் தொடக்கம் டிசம்பர் வரையான காலப் பகுதியில் வட கிழக்கு பருவப்பெயர்ச்சி மூலம் இங்கு மழை வீழ்ச்சி கிடைக்கிறது. இப்பகுதி மக்கள் இப்பருவப்பெயர்ச்சி மழை மூலம் கிடைக்கும் நீரைக்கொண்டு நெல்லை பெரும்போகமாக பயிரிட்டு அறுவடை செய்து வருடம் முழுவதும் வளத்தோடு வாழ்கிறார்கள். 2008 ஆம் ஆண்டு இம்மாவட்டத்திற்கு 1811.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியைப் கிடைக்கப்பெற்றுள்ளது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகளவான வெப்பநிலை இங்கு காணப்படும். இம்மாவட்டத்தில் 2008 ஆம் ஆண்டு 21.40 தொடக்கம் 32.40 சென்ரிகிரேட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இங்குள்ளவர்கள் சிறுபோககாலங்களில் பயறு, உழுந்து, சணல், கௌபி, தினை, குரக்கன், சாமை போன்ற சிறு தானியங்களை பயிரிட்டு தமது தேவைகளை நிறைவேற்றுகிறார்கள். இங்கு பயிரிடப்படும் புகையிலை, முந்திரி, வெங்காயம், மிளகாய், மாம்பழம், பலாப்பழம், வெற்றிலை, உருளைக்கிழங்கு போன்ற பொருட்களுக்கு உள்ளூர் சந்தையில் மாத்திரமல்ல தென்னிலங்கையிலும் நல்ல கிராக்கி காணப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இரண்டு பிரதான தொழில்களாக விவசாயமும் மீன் பிடியும் காணப்படுகிறது. விவசாயத்தில் தன்நிறைவு பெற்ற மாவட்டமாக திகழும் யாழ் மாவட்டம் மீன் பிடித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. தமது உள்ளூர் சந்தைத் தேவையையும் நிறைவு செய்வது மட்டுமல்லாமல் தென்னிலங்கைக்கும் மீன்கள் மற்றும் கருவாடுகளை அனுப்பும் திறமை அவர்களிடம் உண்டு.
இவ்வாறு தன்னிறைவு பெற்ற மாவட்டமாகத் திகழும் யாழ்ப்பாணம் பற்றிய பல்சுவை விபரங்களைத் கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

Read more...

யாழ்வீதி வழிகாட்டி



>>A9 வீதியூடாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்வதாயின் கிட்டத்தட்ட 410 km தூரத்தைக் கடந்து யாழ் நகரை அடைய முடியும். தற்போதைய வீதி அமைப்பின்படி கொழும்பில் இருந்து யாழ் நகரை சென்றடைவதற்கு கிட்டத்தட்ட 9 மணி நேரம் தேவைப்படுகிறது.

>>கொழும்பு கோட்டையில் இருந்து கொட்டாஞ்சேனை ஊடாக நீர்கொழும்பு வீதியை அடைந்து A3 பாதையூடாக களனிபாலம், வத்தளை, மாபொல, கந்தான, ஜாஎல, சீதுவ, கட்டுநாயக்க, வென்னப்புவ, கட்டுநெரிய, மாரவில, மகாவெவ, சிலாபம், ஆராச்சிகட்டிவ ஆகிய இடங்களைக் கடந்து புத்தளம் நகரை அடைய வேண்டும்.

>>புத்தளம் A10 வீதியூடாக கருவெலகஸ்வெவ, நொச்சியாகம, அனுராதபுரம் ஊடாக யாழ் சந்தியை சென்றடந்து A20 வீதியூடாக சென்று கண்டி வீதியில் மதவாச்சியை சென்றடைய வேண்டும்.

>>பின்னர் A9 வீதியூடாக வவுனியா, புளியங்குளம், மாங்குளம், இரணைமடு, கிளிநொச்சி, ஆனையிறவு, பளை, கொடிகாமம், மீசாலை, சாவகச்சேரி, நுணாவில், கைதடி, நாவற்குழி, மாம்பழசந்தி, கச்சேரியடி ஆகிய இடங்களைக் கடந்து யாழ் நகரை சென்றடைய முடியும்.

Read more...

யாழ்ப்பாணம்



யாழ்ப்பாணம் என்பது இன்றைய நிலையில் யாழ்ப்பாணத் தீபகற்பத்தையும், அங்குள்ள தீவுகளையும் குறிக்கும். யாழ்ப்பாணத்தில் 14ஆம் நூற்றாண்டு முதல் ஓர் அரச அமைப்பு நிலவியது. அது போர்த்துக்கேயர் வருகை வரை நிகழ்ந்தது (1520).

ஒல்லாந்தர் காலம் முதல் அதன் பொருளாதார நிலைப்பட்ட நிர்வாக, நடவடிக்கைகள், அப்பிரதேசத்துக்குரிய "தேச வழமை" முறைப்படியே நடைபெற்றது. இதனால் யாழ்ப்பாணச் சமூகத்தின் தனித்துவம் தொடர்ந்து பேணப்படுவதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.

பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் மிஷனரிமார்களின் நடவடிக்கைகள் இங்கு குறுகிக் காணப்பட்டன. இதனால் காலனித்துவ ஆட்சிக்கு வேண்டிய இடைநிலை உத்தியோகங்களில் யாழ்ப்பாணத் தமிழர்கள் நிறைய இடம்பெற்றனர். இருபதாம் நூற்றாண்டின் நடுக்கூற்றில், இந்நிலைமை யாழ்ப்பாணத்தவர்களுக்கெதிரான சமூக, அரசியல் கோரிக்கைகள் வைக்கப்படுவதற்கும் காரணமாயிற்று.

யாழ்ப்பாணச் சமூகம் காலனித்துவத்தை எதிர்நோக்கிய முறையில் முதலில் சமூக மேலாண்மையுடைய மட்டத்தினர் தங்கள் பாரம்பரியத் தொடர்ச்சிக்கும் பேணுகைக்கும் வேண்டிய அதிகாரத்தினை, சைவக் கருத்து நிலை வழியாக ஏற்படுத்திக் கொண்டனர். இந்தக் கருத்து நிலை மேலாண்மை, யாழ்ப்பாணத்தின் சமூக வேறுபாடுகளை முதன்மையிழக்கச் செய்து, யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய ஓர் ஒருமைப்பாடான கருத்தினை முன்னிலைப்படுத்திற்று.

இந்த மதநிலைப் பேணுகை ஒரு புறத்தில் தொழிற்பட இன்னொரு புறத்தில் ஆங்கிலக் கல்வி வழியாக வந்த ஒரு தாராண்மைவாதப்போக்கும் தொழிற்பட்டது. யாழ்ப்பாண மாணவர் காங்கிரசையும், அதன் தோல்வியின் பின்னர் வந்த மார்க்சீயச் சிந்தனைப்போக்கையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட அரசியல், சமூகப் பாரம்பரியங்கள காரணமாக, யாழ்ப்பாணமே இலங்கைத் தமிழர்களை சின்னப்படுத்தியும் (Symbolising), பிரதிநிதித்துவப்படுத்தியும் நிற்கின்ற ஒரு நிலை ஏற்பட்டது. இதனால் இலங்கைத் தமிழர்களின் அரசியற் பிரக்ஞை வளர்ச்சியில் யாழ்ப்பாணம் நீண்டகாலம் முக்கியத்துவம் பெற்று விளங்கியது.

இந்த "முதன்மைகள்" காரணமாக, யாழ்ப்பாணத் தமிழர், மற்றைய தமிழ்ப் பிரதேசங்களில் எதிர்க்கப்படுவதற்கான ஒரு சூழலும் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிலவியது உண்மையே.

சைவக் கருத்து நிலை காரணமாக யாழ்ப்பாணத்திற் சமூக அடுக்கமைவு உணர்வு வலிமையுடன் போற்றப்பட்டு வந்ததெனினும், சாதிமுறைமைக் கெதிரான போராட்டங்களும் அங்கு நிலவின.

கத்தோலிக்க புரட்டஸ்தாந்தவர்களும், முஸ்லிம்களும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்துள்ளனர்.

Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP