யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு

இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாடு ஒப்பீட்டளவில் மிகவும் சிறியது. எனினும் மக்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியாக இது உள்ளது. இங்கே வாழ்பவர்கள் 90% க்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள். இவர்களிற் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள். இவர்களுக்குத் தென்னிந்தியத் தமிழர்களுடன் விரிவான பண்பாட்டுத் தொடர்புகள் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகின்றன. அத்துடன் இலங்கையிலும் அந்நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும் யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு, தமிழ் நாட்டிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் உள்ள சாதியமைப்புக்களிலிருந்து வேறுபட்டுத் தனித்துவமான பண்புகளைக் கொண்டு விளங்குகிறது.
மேலோட்டமாகப் பார்க்கும்போது யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பின் உருவாக்கத்திலும், அதனைக் கட்டிக் காப்பதிலும் இந்து சமயக் கோட்பாடுகளின் தாக்கம் முன்னணியில் இருந்தபோதும், அதன் முக்கிய வெளிப்பாடுகளில் ஒன்றான பிராமண மேலாதிக்க நிலை யாழ்ப்பாணத்தில் முற்றாகவே இல்லாமல் இருப்பது கவனிக்கத் தக்கது. இங்கே சாதியப் படிநிலை அமைப்பில் பிராமணர்கள் மிக உயர்ந்தவர்களாகக் கருதப்பட்ட போதிலும், அதிகாரப் படிநிலையில் வெள்ளாளர் (வேளாளர்) சமூகத்தினரே உயர் நிலையில் உள்ளார்கள். யாழ்ப்பாண வரலாறு கூறும் யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலின் படி, யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆரம்ப காலத்தில் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு அடிமை குடிமைகளுடன் குடியேற்றப்பட்ட பிரபுக்களுள் மிகப் பெரும்பாலானோர் வெள்ளாளர்களே என்பதைக் காண முடியும். இது வெள்ளாளர்களின் உயர் நிலைக்குக் காரணம் அவர்களுடைய ஆரம்பகால அரசியல் பலமே என்பதைக் காட்டுகின்றது.

சாதிகளுக்கு இடையேயான தொடர்புகள்

யாழ்ப்பாணத்துச் சாதிகள் தொழில் அடிப்படையில் அமைந்திருந்ததால், அவற்றுக்கிடையேயான பொருளாதாரத் தொடர்புகள் முதன்மையானவை. இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்துச் சாதிகளை நான்கு பிரிவுகளாக வகுக்கமுடியும் என கென்னத் டேவிட் என்பவரை மேற்கோள் காட்டி சிவத்தம்பி எழுதியுள்ளார். அப்பிரிவுகள் பின்வருமாறு:

கட்டுள்ள சாதிகள் (bound castes)
பிராமணர், வெள்ளாளர், கோவியர், அம்பட்டர், வண்ணார், நளவர், பள்ளர், பறையர் முதலானோர்.

கட்டற்ற சாதிகள் (unbound castes)
செட்டிகள், தட்டார், கைக்குளர், சேணியர், முக்கியர், திமிலர் முதலானோர்.
பிரதானமாகக் கட்டுள்ள கலப்பு நிலையிலுள்ள சாதிகள்
பண்டாரம், நட்டுவர்

பிரதானமாகக் கட்டற்ற கலப்பு நிலையிலுள்ள சாதிகள்
கரையார், கொல்லர், தச்சர், குயவர்

கட்டுள்ள சாதிகளைச் சேர்ந்த குடும்பங்கள், நில உடைமையாளரான வெள்ளாளரின் கீழ் அவர்களுக்குச் சேவகம் செய்து வாழுகின்ற ஒரு நிலை இருந்தது. இது குடிமை முறை என அழைக்கப்பட்டது. இம் முறையின் கீழ் பணம் படைத்த வெள்ளாளர் குடும்பங்கள், தங்களுக்குக் கீழ் கோவியர், அம்பட்டர், வண்ணார், நளவர், பள்ளர், பறையர் போன்ற சாதிகளைச் சேர்ந்த குடும்பங்களைத் தங்கள் மேலாண்மையின் கீழ் வைத்து வேலை செய்வித்தனர். இக் குடும்பங்கள் குறித்த வெள்ளாளக் குடும்பங்களின் சிறைகுடிகள் எனப்பட்டன

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP