யாழ்ப்பாணக் கோட்டை

யாழ்ப்பாணக் கோட்டை யாழ்ப்பாண நகருக்கு அண்மையில் பண்ணைப் பாலத்தருகே சிதைவடைந்த நிலையில் காணப்படும் கோட்டையாகும். யாழ்ப்பாண அரசு 1619 இல் போத்துக்கீசரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்ததும், தலைநகரத்தை நல்லூரிலிருந்து அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர். அங்கே யாழ்ப்பாணக் குடாக்கடலை அண்டி ஒரு கோட்டையையும் கட்டினார்கள். 1619 ஆகஸ்ட் மாதத்தில் பாதுகாப்புக்காகக் கோட்டையொன்றைக் கட்டிக்கொள்ள கோவாவிலிருந்த தலைமையகத்திலிருந்து பிலிப்பே டி ஒலிவேராவுக்கு அனுமதி கிடைத்திருந்தது எனினும் பொருத்தமான இடமொன்றைத் தெரிவுசெய்து கோட்டையின் கட்டிடவேலை 1625 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது. 1629இல் இது உபயோகத்திலிருந்ததெனினும், 1637இல் கூட இது முற்றாகக் கட்டிமுடிக்கப்படவில்லையென்றே தெரிகிறது. இது கிட்டத்தட்டச் சதுர வடிவமானது. நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன், ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரைவட்ட வடிவிலமைந்த அரண்களும் இருந்தன. கோட்டைக்குள்ளே கத்தோலிக்கத் தேவாலயமொன்றும், கப்டன் மேஜரின் வீடும், வைத்தியசாலையொன்றும் மேலும் சில முக்கியமான கட்டிடங்களும் இருந்தன. போத்துக்கீசரின் யாழ்ப்பாண நகரம் கோட்டைக்கு வெளியிலேயே இருந்தது.

யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் 1658 ஜூன் 22இல் கைப்பற்றிய அடுத்த நாள் ஜூன் 23 1658இல், மேற்படி கோட்டையை அவர்கள் அக்கிரமித்து அதனை இடித்துவிட்டு ஐங்கோணவடிவிலமைந்த புதிய கோட்டையைக் கட்டினார்கள்.
1984-1987 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், யாழ்ப்பாணக் கோட்டை இராணுவத்தின் வசமே இருந்து வந்தது. 1989 ஆம் ஆண்டில் இந்திய அமைதிகாக்கும் படை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய பின்னர் கோட்டையை முற்றுகையிட்ட புலிகள் பல மாதங்களின்பின் அதனைக் கைப்பற்றிக்கொண்டனர். கைப்பற்றிய சிறிது காலத்தில் மீண்டும் இவ்வாறான நிகழ்வைத் தடுக்க கோட்டையின் பெரும்பகுதி புலிகளின் ஆலோசனையின் கீழ் அழிக்கப்பட்டது. 1995 ல் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் மீண்டும் கைப்பற்றியபோது இக்கோட்டையின் எச்சங்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் வந்தன

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP