வரலாறு

1620 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண அரசு போத்துக்கீசர் வசம் செல்லும் வரையில், அதன் தலைநகரம் என்ற வகையில் நல்லூரே இப் பகுதியில் பிரதான நகரமாக இருந்தது. அக்காலத்தில் இன்றைய யாழ்ப்பாண நகரத்துள் அடங்கும் கொழும்புத்துறையில் ஒரு சிறிய இறங்கு துறையும், பின்னர் போத்துக்கீசரின் கோட்டை இருந்த இடத்தில் முஸ்லிம் வணிகர்களின் இறங்குதுறையும், பண்டசாலைகளும், சில குடியிருப்புக்களும் இருந்ததாகத் தெரிகிறது. 1590 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் யாழ்ப்பாண அரசனைக் கொன்று அவ்விடத்தில் இன்னொரு அரசனை நியமித்த பின்னர் அவர்களது செல்வாக்கு அதிகரித்தது. தொடர்ந்து சமயம் பரப்புவதற்காக வந்த கிறிஸ்தவப் பாதிரிமார்கள் யாழ்ப்பாணக் கடற்கரையோரத்தில் தேவாலயம் ஒன்றையும், அவர்களுக்கான இருப்பிடங்களையும் கட்டியிருந்தனர். பின்னர் முஸ்லிம் வணிகர்களின் பண்டசாலைகள் இருந்த இடத்தைக் கைப்பற்றிக் கொண்டு அவ்விடத்தில் முன்னரிலும் பெரிதாகக் கட்டிடங்களைக் கட்டியிருந்ததாகத் தெரிகிறது. இக்கட்டிடங்கள் வழிபாட்டிடங்களாகவும், சமயம் பரப்பும் இடங்களாகவும் இருந்தது மட்டுமன்றிச் சில சமயங்களில் போத்தூக்கீசருக்கான ஆயுதக் கிடங்குகளாகவும், பாதுகாப்பு இடங்களாகவும் இருந்தன. வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை யாழ்ப்பாண அரசன் நாவாந்துறைப் பகுதியில் குடியேற்றினான். கரையோரப்பகுதிகளில் மீன்பிடிக் குடியேற்றங்களும் இருந்தன. தற்போதைய யாழ்ப்பாண நகரத்தின் மையப்பகுதி அமைந்துள்ள இடங்கள் அக்காலத்தில் சதுப்பு நிலங்களாகவும், பனங் கூடல்களாகவுமே இருந்ததாகத் தெரிகிறது.
1620ல் யாழ்ப்பாண அரசை மீண்டும் தாக்கிய போத்துக்கீசர் அதனைக் கைப்பற்றித் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து நல்லூர் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என உணர்ந்த அவர்கள் தங்கள் நிர்வாகத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர்.

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP