செகராசசேகரமாலை



சிங்கைச் செகராசசேகரனாற் செய்விக்கப்பட்டதெனக் கருதப்படும் செகராசசேகரமாலை என்ற சோதிட நூல், மகளிர்வினைப்படலம், மைந்தர்வினைப் படலம், வேந்தர் வினைப்படலம், கோசரப் படலம், யாத்திரைப்படலம், மனைவினைப்படலம், என்ற ஒன்பது படலங்களைக்கொண்டு விளங்கும். இந்நூல் இயற்றி அரங்கேற்றப்பட்ட காலத்தைக் குறிக்குஞ் செய்யுள் எதுவும் நூலகத்தே காணப்படாததால், இதன் காலத்தை, இதனை இயற்றுவித்த செகராசசேகர மன்னன் காலத்தைக்கொண்டே நிச்சயிக்கலாம்.
இதன் சிறப்புப்பாயிர இறுதி இரு செய்யுள்கள்,
கந்தமலை யாரியர்கோன் செகராச சேகரமன்
கங்கை நாடன்
என்றும்,
தன்கடவுட் சுருதிகளின் மனமெனுஞ்சோ
திடமதனைத் தலத்தின் மீது
மின்குலவு தென்கலையாற் றருகவென
வருள்புரிய விருத்தப் பாவாற்
பொன்குலவு செகராச சேகரமா
லையச்செய்தான் போருந்து மேன்மைத்
தொன்குலவு மிராசவிரா மேசனருள்
சோமனெனுஞ் சுருதி யோனே.
என்றுங் கூறுவதிலிருந்து. ஆரியர் கோனான செகராசசேகர மன்னன், ஆணைப்படி இச்சோதிட நூலை அம்மன்னன் பெயரால் இராச பரம்பரையினனான இராமேசன் மகன் சோமன் எனும் வேதியன் இயற்றினான் என்று தெரிகின்றது. இவ்வாசிரியர் பெயர் சோமசன்மா என வழங்கும்.
இந்நூலின்கண் பதின்மூன்று பாக்களிற் சிங்கைச் செகராசசேகரனின் புகழ் கூறப்படுகின்றது. அவற்றுள் நூலின் 36ஆவது செய்யுளில்,
சீரியவேற் பரநிருப ரிறைஞ்சும் பொற்றாட்
செகராச சேகரமன் சிங்கை தங்கு
மாரியர்கோ னெனக்குடைக்கீ ழவனி யெல்லா
மடக்கியொரு கோலோச்சி யளிக்கு மாதே
என்றும், 76 ஆவது செய்யுளில்,
சேவணி துவசன் சிங்கையெங் கோமான்
செயசெக ராசசே சரமன்
என்றும், 86 ஆவது செய்யுளில்,
சேது காவலன் விஞ்ஞை விஞ்சுசெக
ராச சேகரன்
என்றும், 158 ஆவது செய்யுளில்,
மன்னர் மன்னுசெக ராச சேகரமன்
மணவை யாரியவ ரோதயன்
பன்னு செந்தமிழ்வ ளம்பெ றற்குதவு
பரிசில்…………………..
என்றும் 204 ஆவது செய்யுளில்,
வையமன்று காத்தியா யனசூத் ரத்து
மன்னியகா சிபகோத்ர மருவு கேண்மைச்
செய்யசதுர் மறைவாய்மைக் காசி வந்த
செகராச சேகரனா மன்ன னாதி
துய்யபுகழ்ப் பூசுரமன் னவரை…
என்றும், சொல்லப்படுவதால், இந்நூல் இடபக்கொடி உடையவனும், சேதுகாவலனும், காசிப கோத்திரத்துக் காசி மறையோனும், பூசுரமன்னனுமான மணவை ஆரியவரோதய சி;ங்கைச் செகராசசேகரன் ஆட்சிக் காலத்திற் செய்யப்பட்டதெனத் தெரிகின்றது. வரோதய சிங்கையாரியன் மூன்றாம் செகராசசேகரன் ஆவான் என்பர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்.
ஆரியச் சக்கரவர்த்திகள் யாழ்ப்பாண அரசு கைக்கொண்ட கி. பி. 13 ஆம் நூற்றாண்டுக்கும், கோட்டை அரசன் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி ஆறாம் செகராசசேகரன் அரசிழந்த கி. பி. 1450 ஆம் ஆண்டுக்கு மிடைப்பட்ட காலத்தவனாவான் இச் செகராசசேகரன். எனவே, செகராசசேகர மாலையும் அக்காலத்துக்குரியதெனக் கொள்ளலாம்.
செகராசசேகரமாலை என்கின்ற இச்சோதிட நூல் பற்றிய குறிப்பு கலாநிதி க. செ. நடராசா அவர்களால் எழுதப்பெற்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் 1982 இல் வெளியிடப்பெற்ற ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி எனும் நூலில் இருந்து எடுக்கப்பெற்றது. மேலதிகமாக கலாநிதி .சி. க. சிற்றம்பலம் அவர்களால் பதிப்பக்கப்பெற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினூடாக 1992 இல் வெளியிடப்பெற்ற யாழ்ப்பாண இராச்சியம் என்கின்ற நூலும் உசாத்துணையாகக் கொள்ளப்பெற்றது

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP