இந்து சாதனம்



யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினராலே 1889ம் ஆண்டு புரட்டாதி மாதம் சைவம் வளர்க்கவென ஆரம்பிக்கப்பட்டு மாதம் இருதடவை வெளியிடப்பட்ட பத்திரிகையே இந்துசாதனம் ஆகும். இது இரு மொழிகளில் வெளியிடப்பட்டதோடு இன்னமும் சைவபரிபாலன சபையினராலே வெளியிடப்பட்டு வருகின்றது.
சிறந்த கணிதமேதையும் தமிழ் ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் பாண்டித்தியம் பெற்றிருந்தவரும் சைவபரிபாலன சபையின் தலைவருமான செல்லப்பாபிள்ளை அவர்கள் இதன் ஆங்கில பக்கங்களுக்கு ஆசிரியராயும், சைவம் வளர்த்த ஆறுமுக நாவலர் அவர்களின் மருமகரான கைலாசபிள்ளை அவர்கள் தமிழ் பக்கங்களுக்கு ஆசிரியராயும் இந்து சாதனம் பத்திரிகையின் முகாமையாளராயும் இருந்து பணமேதும் பெறாமல் பணிபுரிந்து இந்து சாதனம் பத்திரிகையை ஆரம்பித்தார்கள். செல்லாப்பாபிள்ளை அவர்கள் மோசமான உடல்நிலை காரணமாக 1891இலிருந்து பத்திரிகைப்பணியை இடைநிறுத்திக்கொண்டார்கள். இருந்தபோதும் 1902இல் அவர் சிவனடி சேரும்வரை சைவபரிபாலன சபையின் தலைவராயிருந்து அரும்பணி செய்தார்கள்.
இந்து சாதனம் தொடர்ந்தும் வெளிவரவேண்டும் என்ற ஆர்வம் கொண்ட நாகலிங்கம் அவர்கள், கதிரவேலு அவர்கள் மற்றும் சபாபதி ஆகியோர் ஆசிரியர் குழுவில் தன்னார்வோடு இணைந்து செயல்பட ஆரம்பித்தார்கள். இந்து சாதனம் பத்திரிகையை ஆரம்பித்தவர்கள் அதற்கு ஒரு பலமான அடித்தளமிட்டு கொடுத்ததோடு அவர்களை தொடர்ந்து வந்த சைவபரிபாலனசபையின் செயலாளராயிருந்த காசிப்பிள்ளை அவர்களும், சபையின் பொருளாளராயிருந்த பசுபதிச்செட்டியாரும் பத்திரிகை தொடர்ந்தும் வெற்றிகரமாக வெளிவர உறுதுணையாயிருந்தனர்.
இப்பத்திரிகை 1899இல் ஆங்கிலம் தமிழ் என இரு பத்திரிகைகளாக்கப்பட்டு ஆங்கில பதிப்பு ஒவ்வோர் கிழமையும், பெரிய அளவிலான தமிழ்ப்பதிப்பு மாதமிரு தடவையாகவும் வெளியிடப்படத்தொடங்கியது. தமிழ்ப்பதிப்பும் 1913ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் கிழமையும் வெளியிடப்பட்டது.
இன்று சைவபரிபாலன சபையினராலே இந்து சாதனம் ஒரு மாதாந்த சஞ்சிகையாக வெளியிடப்பட்டு வருகின்றது

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP