யாழ்ப்பாணப் பண்பாடு - மறந்தவையும் மறைந்தவையும்


யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக் கோலங்கள் என்பதை நோக்குவதற்கு முன்னர் பண்பாடு என்றால் என்ன என்பதை வரையறை செய்து கொள்வது அவசியமாகும். பண்பாடு பற்றிய ஆய்வினை மேற்கொண்ட மேலைப்புல அறிஞர்கள் 160க்கும் மேற்பட்ட வரையறைகளைத் தொகுத்துக் காட்டியுள்ளனர். அவற்றுள் எமக்குப் பொருத்தமான சிலவற்றை இங்கு சுட்டிக் காட்ட
 விரும்புகிறேன்.

மக்கள் தலைமுறை தலைமுறையாகக் குழுவாகச் சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும் மரபுகளும் சேர்ந்த ஒரு தொகுதியே பண்பாடு ஆகும்.

பண்பாடு என்பது அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களும் சமுதாய மரபுரிமையாகப் பெறப்பட்ட நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் அடங்கிய தொகுதியாகும்.

பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்க நெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும், மனிதர்கள் சமுதாயத்தில் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறமைகளும் பழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதியாகும்.

பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு மக்கட் கூட்டம் தனது சமூக வரலாற்று வளர்ச்சியினடியாகத் தோற்றுவித்துக் கொண்ட பௌதிகப் பொருட்கள், ஆத்மார்த்தக் கருத்துக்கள், மத நடை முறைகள், சமூகப் பெறுமானங்கள் ஆகியவற்றினதும் தொகுதியாகும். ஒரு கூட்டத்தினரின் தொழில்நுட்ப வளர்ச்சி, உற்பத்தி முறைமை, உற்பத்தி உறவுகள், கல்வி, விஞ்ஞானம், இலக்கியம், கலைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் தொகுதியாகும்.

இவ்வாறு பண்பாடு பற்றிய வரையறைகளை மானிடவியல் ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.

இவையெல்லாம் ஏதோ ஒரு வகையில் பெருமள்வுக்கு ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக் கோலங்களை வகைப்படுத்திக் காட்டுவதற்கு முன்னர். யாழ்ப்பாணப் பிரதேசத்தின் அமைவிடம் பற்றியும் புவியியல் பற்றியும் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.

சில அறிஞர்கள் பண்பாட்டைப் புவியியல் அடிப்படையில் நோக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக இலங்கை பண்பாடு, இந்திய பண்பாடு , எனக் குறிப்பிடுவதை சுட்டிக்காட்டலாம்.

எனினும் இவற்றுக்கிடையே பல்வேறு வகையான வேறுபாடுகள் இருப்பது உணரப்பட்ட போதும் பொதுவாக இவ்வாறு அழைக்கும் வரலாறு இன்று வரை தொடர்கிறது.

பண்பாடு என்பது பன்மைத்தன்மை கொண்டது என்பதையும் மனங்கொள்ள வெண்டும்.

யாழ்ப்பாணப் பிரதேசம் என்னும் பெரு வட்டரத்திற்குள் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவுப்பற்று முதலிய பகுதிகள் உள்ளடங்குகின்றன.

இப்பிரிவுகளுக்கிடையே பண்பாட்டுக் கோலங்கலிற் சிற்சில நுண்ணிய வேறுபாடுகள் அல்லது தனித்தன்மைகள் காணப்படுவது உண்மையே.

எனினும் எல்லாப் பிரிவுகளுக்கும் உரித்தான பொதுவான பண்பாட்டு அம்சங்களையே இவ்வுரையில் குறிப்பிடுகின்றோம்.

பண்பாடு என்ற சொல் வாழ்க்கை முறை அல்லது வாழ்வியல் என்ற அர்த்தத்திலும் பயின்று வருகிறது.

தமிழிலே பண்பாடு என்ற சொற்பயன்பாடு மிக அண்மைக்காலத்திலேயே அறிமுகமானது. Culture என்ற ஆங்கிலப் பதத்திற்கு நாகரிகம் என்ற சொல்லே பெரு வழக்கமாக இருந்தது.

பழந்தமிழ் இலக்கியங்களிற் பண்பாட்டினை குறிக்கச் சால்பு என்ற பதமே கையாளப்பட்டுள்ளது என்பர். Culture என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பண்பாடு என்ற சொல் மிகப் பொருத்தமாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. வாழ்வியல் அல்லது வாழ்க்கை முறைகள் எனப்பன்மையிலே சுட்டுவதும் பண்பாட்டின் பன்மைத்தன்மையை மனங்கொண்டே எனக் கருதலாம்.

பண்பாடு என்ற சொற்பொருள் வியாக்கியானம் இவ்வுரைக்கு முக்கியமானது அல்ல. எனினும் ஒரு முன்னீடாக இதனைக் குறிப்பிட்டோம்.

பண்பாடு பற்றிய ஆய்வினைச் செய்தவர்கள் பண்பாட்டை பொருள் சார் பண்பாடு, பொருள் சாராத பண்பாடு என இரண்டாகப் பாகுபாடு செய்வார். ஆய்வு வசதிக்காக இவ்வாறு பாகுபாடு செய்யப்பட்டுள்ள போதும் பொருள்சார் பண்பாடும் பொருள் சாராத பண்பாடும் ஒரே வழி ஒன்றிணைந்து செல்வதையும் அவதானிக்க முடிகின்றது. ஒரு சமுதாயப் பண்பாட்டு முறையை தெளிவாக அறிந்து கொள்ள முதலிலே பொருள்சார் பண்பாட்டுக் கூறுகளின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வது அவசியமெனப் பண்பாட்டு மானிடவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பண்பாட்டு மானிடவியல் ஆய்வாளர் பக்தவற்சலபாரதி பொருள்சார் பண்பாடு பற்றி பின்வருமாறு கூறுகின்றார்.

ஆய்வு செய்யும் சமூகத்தின் பொருள் சார் பண்பாட்டினைப் பற்றிய தரவுகள் மிகவும் பயனுள்ளவை. வீடுகளின் அமைப்பு, செய்பொருள்கள், வீட்டுச்சாமான்கள், உடைகள், அணிகலன்கள், போக்குவரத்துச் சாதனங்கள், கால்நடைகள், தொழிற்கருவிகள், சடங்குப் பொருள்கள் போன்ற பல்வேறு வகையான பொருள்களைப் பற்றிய தரவுகள் சமுதாயப் பண்பாட்டு முறைகளை அறியப் பெரிதும் உதவும்.

இந்த வகையிலே நோக்கும் போது யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பொருள்சார் பண்பாடுகள் யாவற்றையும் இவ்வுரையிலே விரித்துக் கூறுவது கடினமானது. குறிப்பிட்ட சில பொதுமைப்பண்புள்ள அதேவேளை முக்கியமானவை எனக் கருதும் பண்பாட்டுக் கோலங்கள் சிலவற்றை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இங்கு நான் சுட்டிக்காட்டப்போகும் பண்பாட்டுக் கோலங்கள் பலவற்றை நாம் இழந்து விட்டோம். சிலவற்றை மாற்ருவத்தோடு பேணி வருகின்றோம். இன்னும் சிலவற்றை 'பொய்யாய், பழங்கதையாய், கனவாய்' மெல்ல மெல்ல போக விட்டு விட்டோம். பண்பாடு என்பது ஒரு ஓட்டம். அது இயங்கியற் சாத்தியமுடையது. அது மாறுவது அல்லது மாற்றப்படுவது தவிர்க்க முடியாத்து. பண்பாடு என்பது மாறாத தன்மை கொண்டது என்ற கருத்தியலாளர்களும் உளர்.

பண்பாடு மாறுவதற்கு அல்லது மாற்றுருப் பெறுவதற்கு அல்லது மறைவதற்குப் பல காரணிகள் உள்ளன. சமூக, பொருளாதார, அரசியல், வரலாற்று மாற்றங்களும் இம்மாற்றங்களால் உருவான கல்வி, தொழில், உலகத் தொடர்புகள் முதலானவையும் , பண்பாட்டைக் கொள்ளலும் கொடுத்தலும் என்ற பரிமாற்ற முறையும் இந்நிலைக்கு பிரதான காரணிகள் எனலாம்.

19 ஆம் நூற்றாண்டையும் 20ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியையும் ஆதாரமாகக் கொண்டே யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக் கோலங்களை இங்கு சுட்டிச் செல்லலாம் என எண்ணுகிறேன்.

யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்பென்பது அடிப்படையில் அதிகார அடுக்குகளை உடையது. இந்த அதிகார அடுக்கு முறை என்பது சாதிகளை அடிப்படையாகக் கொண்டது. யாழ்ப்பாணப் பாரம்பரிய சமூக அமைப்பென்பது பௌதீக ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் வேளாள முதன்மை உடையது. குடித்தொகையிலும் ஏனைய சாதியினரை விட வேளாளர்களே அதிகமாக காணப்படுகின்றனர். அத்துடன் காலனிய ஆட்சியும் வேளாளர்களது சமூக மேலாண்மையை பலப்படுத்துவதாகவே அடிப்படையில் இருந்தது. ஒல்லாந்த, ரோமன் , டச்சுச் சட்டம் முதல் காலனிய ஆட்சியுடன் முன்னணிபெற்ற புகையிலை முதலான காசுப் பயிர்களின் செய்கை, கல்வி, நிர்வாகம் முதலியன யாவும் அடிப்படையில் அமைந்ததை அவதானிக்க முடியும்.

இவ்வாறு யாழ்ப்பாணச் சமூக அமைப்புப் பற்றி அகிலன் குறிப்பிடுவது மிகுந்த அவதானிப்புக்குரியது. இந்த நீண்ட மேற்கோளை உறுதி செய்வதாக அதிகம் கவனிப்புக்குட்படாத எழுத்து இலக்கியங்களும், அரை வாய் மொழிப் பாடல்களும் நாட்டுப் பாடல்களும் செவிவழிக்கதைகளும் நிறையவே உள்ளன. யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக் கோலங்களை சாதி, சமூக அதிகார அடுக்குகளின் அடிப்படையிலும் நோக்குவது தவிர்க்க முடியாதது. விரும்பியோ விரும்பாமலோ ஒன்றுடன் ஒன்று அத்து ப்பட்டுள்ளதை புலமைத்துவ நோக்கில் நிராகரிப்பது கடினமானது.

யாழ்ப்பாணத்தின் பொருள்சார் பண்பாட்டுக் கூறுகளை முதலில் நோக்குவோம். பொருள்சார் பண்பாட்டுக் கூறுகள் யாவற்றையும் விரிவாகக் குறிப்பிட்டு ஆராய்வது இவ்வுரையிலே சாத்தியமற்றது. பொதுவான முதன்மையான பண்பாட்டுக்கோலங்கள் சிலவற்றையே குறிப்பிட்டு விளக்க முனைகிறேன். யாழ்ப்பாணத்துப் பொருள்சார் பண்பாடுகளில் உணவு ,உடை, உறையுள், போக்குவரத்து, புழங்கு பொருட்கள், அணிகலன்கள் முதலியவற்றைப் பற்றியே இங்கு குறிப்பிடுகிறேன்.

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP