புரிதலுடனான உறவுகளே


படைத்தவனுக்குத் தெரியவில்லை-இவன்

பரிதவிப்பு.....

பழகியவருக்கும் தெரியவில்லை-இவன்

மனத்துடிப்பு...

விலகியது உன் அன்பு 

போதாது என்று அல்ல...

நீ கொண்ட அன்பு

அளவு கடந்துவிட்டது என்பதற்காக...

“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு”

வாழ்க்கை என்னும் நீண்டதூரப் பயணத்தை நாம் சந்தோக்ஷம் நிறைந்ததாக்கிக்கொள்ளவே எப்போதும் விரும்புகின்றோம். மனதுக்கு பாரமான எந்தவொரு கவலையான சம்பவங்களையும் மறக்கவே முயற்சிக்கின்றோம்.

சந்தோக்ஷமாயினும் சரி துக்கமாயினும் சரி புரிதலுடனான ஓர் உறவின் அல்லது உறவுகளின் அவசியத்தினை மனம் எப்போதும் உணர்த்திக்கொண்டிருக்கும். 
மனதுக்கு நிம்மதியைத் தரக்கூடிய இன்பங்களில் பங்கெடுத்து துன்பங்களில் தோள்கொடுக்கக்கூடிய உறவுகள் கிடைக்கப்பெறுவதானது அதீத சந்தோக்ஷத்தை தரக்கூடியது எனலாம். அந்த உறவுகள் தாய், தந்தை, சகோதர சகோதரிகளாகவோ, உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ, தொழில் நிலையானவர்களாகவோ, காதலன் காதலியாகவோ இருக்கலாம்.

சிலர் குறைவாகப் பேசுவார்கள், ஆனால் அவர்களை உறவினர்கள் நன்றாக புரிந்துகொண்டிருப்பார்கள். சிலர் அதிகமாகப் பேசுவார்கள் ஆனால் அவர்களை உறவினர்களால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கும்.  மேலும் சிலர் சந்தித்திருக்கவேமாட்டார்கள் ஆனால் மிகச்சரியான புரிதல் இருக்கும்.

இது எவ்வாறு நிகழ்கிறது? ஆம்!
புரிந்துணர்வு எனக் குறிப்பிடுகையில் முதல் நிலையில் வைக்கப்படுவது நம்பிக்கை தான். அது ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் பாசப் பத்திரம். நம்பிக்கையின் வெளிப்பாடு அதிகமாக இருக்கையில் அங்கு எதுவித சந்தேகங்களுக்கோ அல்லது தவறான நடவடிக்கைகளுக்கோ இடமிருக்காது. 

நிறைவான  பாசத்தோடான பயணம் அனுமானிக்க முடியாத ஆனந்தத்தை தரவல்லது. ஆனால் அதே பாசம் இடை நடுவில் உடையுமாயின் அதன் வலிகளின் ஆழம் அதிகம். மனதில் ஏதோ ஒரு உருவமற்ற புள்ளியாய் எல்லா சந்தர்ப்பங்களிலும் அந்த வடு இருந்துகொண்டேதான் இருக்கும்.

உதாரணமாக : பழகிய நாடகளை என்னும் போது, பழகியவர்கள் ஞாபகப்படுத்தும் போது , நாம் பழகியது போல் வேறுயாரையும் கண்டாலோ மனதின் வலியின் கொடுமையை ஈடுகட்ட முடியாது.

ஆதலால் உறவுகள் தேவைப்படும் அதேவேளை அதற்கேற்ற புரிதல்களும் அவசியமாகிறது. 

உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள அன்பு விட்டுக்கொடுப்பு ஆகிய பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்பைவிட சிறந்த ஆயுதம் இல்லை என்பார்கள். எதையும் அன்போடு அணுகும் போது அதன் பிரதிபலனும் அன்பாகவே கிடைப்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் அனுபவித்திருப்போம். 
பரிமாணங்கள் பலவற்றோடு பிறருக்கு கொடுக்கக்கூடிய உயரிய சந்தோக்ஷமான அன்பினை எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பகிர்தல் வேண்டும். அன்பு நிறைந்த தூய உள்ளம் அமைதி வாழும் திருக்கோயில் என்று சொல்லப்படுவதுண்டு. 

அதேபோல் விட்டுக்கொடுப்பதிலும் நிறைவான திருப்தியைக் காணமுடியும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பழகும் போது மனம் இலகுதன்மையை உணரும். இது காலப்போக்கில் சுவையான சம்பவங்களை மனதில் இருத்திக்கொள்ள உதவும். நெருக்கமான உறவுகளை விரிசல் இன்றி பேணுவதற்கு விட்டுக் கொடுப்பு அவசியமாகும். நல்ல  உறவுகளில் விரிசல் ஏற்படுமாயின் அல்லது விரிசல் ஏற்படுவதற்கான காரணம் தெரியுமாயின் வாய்விட்டுப் பேசுவதே சிறந்தது. தவறான மதிப்பீடுகளில் இருந்து விலகிக்கொள்ளவும் நியாயமான புரிந்துணர்வை ஏற்படுத்தவும் எதையும் மறைக்காமல் பேசவேண்டும். அதிலும் கோபங்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு மற்றவருக்குப் புரியும் வகையில் அமைதியாக எடுத்துக்கூற வேண்டும். 
 நாம் பச்சைக் கண்ணாடி அணிந்துகொண்டு பார்க்கும்போது அணைத்துமே பச்சையாகத் தெரிவது போல சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் போது அவ்வாறே தெரியும். ஆதலால் அவற்றிலிருந்து வெளிப்படையாக பேசித்தீர்மானிப்பது சிறந்தது.

நடைமுறை வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரில் அல்லது பலரில் தங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதை எவரும் மறுக்க முடியாது. பெரும்பாலும் ஒவ்வோர் சின்ன விடயங்களுக்கும் மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறது.

நாம் உண்ணும் உடை அணியும் ஆடை, ஆபரணங்கள் என்று அணைத்தும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மற்றவரின் உதவி தேவைப்படுகிறது.  உறவுகள் எமக்கு அவசியம். 

தனியான வாழ்க்கைப் பயணத்தைவிட காத்திரமான நல்ல உறவுகளோடு வாழ்க்கையைத் தொடருவது தேகத்திற்கும் இதயத்திற்கும் நிறைவான மகிழ்ச்சியைத் தரும். ஆதல்லால் உறவுகளில் விரிசல்கள் வேண்டாமே. சிறந்த முறையில் ஆனந்தமாக வாழப்பழகிக்கொள்வோம்.
நண்பர்களே...!
இந்த பதிவு பிடிச்சு இருந்தால் உங்கள் கருத்துக்களை சொல்லுங்க
மறக்காமல் Voteபோடுங்க
 

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP