இரவீந்திரநாத் தாகூரின் பல்துறை ஆளுமை


இந்தியாவில் பல நூறு பல்துறை அறிஞர்களையும் கலைஞர்களையும் உலகிற்கு அளித்ததோடு அடிமை இருளில் மூழ்கிப் பெருந்துயரில் வாடிய இந்தியர்களுக்கு ஓர் அடையாளத்தைத் தந்த முதல்வர் என்ற பெருமைக்குரியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார். அவரின் நூற்றிஐம்பதாவது பிறந்த தின விழாவை அனைத்துலக மக்களும் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தாகூரின் பல்துறை ஆளுமை பற்றிய கட்டுரையாக அமைகிறது.அவருடைய இலக்கியங்கள், கட்டுரைகள்,கலைப்படைப்புகள், நூல்கள் போன்றவற்றைக் கொண்டு நோக்குகின்ற போதே தாகூரின் பல்துறை ஆளுமையை அறிந்து கொள்ளலாம்.


தாகூரின் சிந்தனைகளில் குறிப்பாக அவரது எழுத்துகளில் மனிதநலப் பொதுமைவாதம் சிறந்ததொன்றாகும்.உபநிடதம், பௌத்தம், கிறிஸ்தவம், சூஃபித்துவம் போன்றவற்றில் காணப்படுகின்ற பொதுமைவாத மெய்யியற் சிந்தனைகள், அவரது கட்டுரைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்க இலக்கியங்களின் ஊடாக வெளிப்படுத்தப் படுகின்றன.இம்மரபானது மேலைத்தேசத் தத்துவ மரபுகளின் குறிப்பாக சோக்கிரடீஸ், பிளேட்டோவின் மெய்யியல் சிந்தனைகளில் அறிந்து கொள்ளலாம்.பிளேட்டோ தமது நூல்களில் பொதுமைவாதம் பற்றி விளக்குகின்ற போது பல தனியன்கள் சேர்ந்த கூட்டே பொதுமையாகும். எடுத்துக்காட்டாக மனிதர்களை எடுத்துக்கொண்டால் இன ரீதியாகவும், சமய ரீதியாகவும் வேறுபட்ட தன்மை காணப்பட்டாலும் மனிதத்துவம்,  மனிதசாரம் எல்லோருக்கும் பொதுவாக விளங்குபவையாகும். அத்தோடு சோக்கிரடீஸ் நோக்கில் உலகியல் பொருட்களிலும் போக்கிலும் வாழ்க்கை மரபிலும் வேறுபாடுகளும் முரண்பாடுகளும் இருப்பதைக் காணலாம்.இவ்வேறுபாடுகளை நீக்கி எல்லாவற்றிற்கும் அடிப்படையான மாறாது, தங்கியிருக்கும் பொதுமைத் தன்மையினைக் காண வேண்டும் என்பதே அவரின் சித்தாந்தமாகும். இத்தகைய மரபுகளைத் தாகூரின் சிந்தனையிலும் அறிந்து கொள்ளலாம்.




இந்தியாவின் மனிதத்துவ பொதுமை பற்றிய மெய்யியலானது இந்தியாவின் மிகப் பழைய இலக்கியமாகக் கருதப்படும்.அத்தோடு இந்திய தத்துவங்களின் அடிப்படையாக விளங்கும் உபநிடதங்களில் ஆழமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. உபநிடதங்களில் பரவலாக வளர்ச்சியடைந்த நிகழ்விய ஒருமைவாதமும் , ஏகத்துவத்தை வலியுறுத்தும் சங்கரரின் தத்துவம் தாகூரின் அனைத்துப் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. அவரது உலகப் புகழ் பெற்ற கீதாஞ்சலி என்ற கவிதைத் தொகுப்பு நோபல் பரிசு பெற்றதன் ஊடாக உலகத் தரத்தினைப் பெற்றுக் கொண்டது.நோபல் பரிசு பெற்ற ஏற்புரையில் இந்திய மரபின் சாரமான பொதுமைத் தன்மையை வெளிப்படுத்தும் உபநிடத மகா வாக்கியத்தினை நினைவு படுத்தின.

"எவனொருவன் தன்னில் எல்லாவற்றையும்,
எல்லாவற்றில் தன்னையும் காணுகின்றானோ
அவனே பிரம்ம ஞானி' என்பது அதுவாகும்.

மேலும் அவரது பொதுமை மெய்யியல், பரஸ்பர பொதுமைத் தளத்தினை வெளிப்படுத்துகிறது.இத்தகைய பொதுமை மரபு எல்லாக் கலாசாரத்தினையும் உள்வாங்குகின்ற பரந்த மனப்பாங்கு, ஆழமான பொதுமைசார் அறிவியலாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இத்தகையதொரு மரபினை இலங்கையில் ஒரு தேசம், ஒரு நாடு  என்பதன் ஊடாகவும் அறிந்து கொள்ளலாம் தாகூரின் மேற்குறிப்பிட்ட சிந்தனைகள் கீதாஞ்சலியில்,
"எங்கே மனம் அச்சமற்றும், சிரம்
பெருமிதத்தால் உயர்ந்தும் இருக்கிறதோ
எங்கே அறிவு சுயமாகச் செயற்படுகின்றதோ
எங்கே உலகம் உறவுகளின் குறுகிய எல்லைகளினால் துண்டாடப்படாமல் இருக்கிறதோ
எங்கே சோர்வற்ற முயற்சிகள்
முழுமையைத் தேடி விரைகின்றதோ
எங்கே நியாயத்தின் தெளிந்த நீரோடை
வழிமாறி அநீதியின் பாலை நிலத்தினூடாகப் பாயாமலிருக்கின்றதோ
எங்கே மனம் எப்போதும் விசாலமுறும்
எண்ணங்களினாலும் செயல்களினாலும்
உன்னால் வழிநடத்திச் செயல்படுகின்றதோ
அங்கே அந்த விடுதலையில் சுவர்க்கத்தில்
என் பிதாவே என் தாய் நாடு விழிப்புறட்டும் "
(கீதாஞ்சலி35)

என்றவாறு வெளிப்படுத்தினார். மேற்குறிப்பிட்ட சிந்தனைத் துளிகள் ஆழமான தளத்தினை முதன்மைப் படுத்துவதோடு குறுகியவாதம், குறுகிய மனப்பாங்கு, சமுதாய அடக்குமுறை,ஏற்றத்தாழ்வு, அநீதி என்பவற்றைப் புறந்தள்ளுவதன் ஊடாக எமது தாய்நாடு விழிப்புறட்டும் என்ற தன்மையினை வெளிப்படுத்துகிறது.

தாகூர் இந்தியக் கலை மெய்யியலுக்குப் பெரும் பங்காற்றியவர் என்ற சிறப்பினையும் பெற்றுக் கொள்கிறார்.சிறுகதை, நாவல், இலக்கியம், ஓவியம், கவிதை, இலக்கிய விமர்சனம் போன்ற துறைகளில் சிறப்புற்று விளங்கினார்.அவரின் நோக்கில் கலை கருத்தின் உறைவிடம் அழகின் பிறப்பிடம் இன்பம் அதன் பயன் என்ற இவ்வகை கருத்தானது, கலை தன்னளவும், பழிபாவங்களும் நிறைந்த துன்ப உலகை விட்டு நம்மை அப்பால் அழைத்துச் செல்வதாக வெளிப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். இச் சிந்தனை பிளேட்டோவின் ஒழுக்கம் போதிக்கும் கலையினூடாகவும் அறிந்து கொள்ளலாம்.உண்மையான கலை மனிதனின் ஒழுக்க நெறியினை உயர்த்துவதாகவும் மனிதர்களிடையே இணைப்புகளை ஏற்படுத்துவதாகவும் வாழ்க்கையை இசைப்பட வாழ்தல் என்ற நிலைக்கு உயர்த்துவதாகவும் அமையும்.இந்நிலைக்கு கலை உயரும் போது தான் அழகுத்துவம் கலைத்துவம் முழுமையடையும் எனக் கூறினார்.

தாகூரின் இசைப் பாடல்களை ஆராய்கையில் இவருடைய சங்கீதத்தின் வார்த்தைகள் மிகவும் எழுச்சியூட்டுவதாகவும் மயக்குவதாகவும் உள்ளன. சந்தோசம் மற்றும் துக்கம், காதல்,சோர்வு, இன்பம்,இணைதல் ,பிரிதல் அதற்கப்பால் தெரிவதையும் ஒருங்கிணைத்து மனித வாழ்க்கை மற்றும் அனுபவத்தின் ஒரு பரந்துபட்ட உட்காட்சியை அவை கொண்டு வருகின்றன. இந்திய தேசிய கீதத்தினையும் வங்காள தேசத்தின் தேசிய கீதத்தினையும் இயற்றி இசையமைத்தவர் தாகூர் ஆவார். இந்தியாவின் தேசிய கீதம் பிரபலமான தேசியப் பாடலாகவும் வங்க மொழியில் அமைந்த இக் கீதம் இந்தியாவின் பல்வேறு கலாசாரத்தையும் உள்ளடக்குவதாகவும் விளங்குகிறது. 1905 இல் வங்கப் பிரிவினையை எதிர்த்து அவரது தேசியப் பாடலான,
"அமா சோனார் பங்களா'
மிக குறிப்பிடத் தக்கதொன்றாக விளங்குகிறது.

மேலும் தாகூரின் பாடல்கள் உணர்ச்சிப் பாடல் வரிகள் மற்றும் இன்னிசையின் கனிவான இணைப்பாகும்.இங்கே அந்த இரண்டும் பிரிக்க முடியாதவையாக ஒரு தனித்துவ இன்னிசை மொழியாகப் பரிணமிக்கின்றன எனச் "சுசித்ரா மித்ரா' கூறுகின்றார்.அவரின் இசைப்பõடல்கள் மூன்று கட்டங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.

1. முதல் கட்டமான 18811900 வரை எழுதப்பட்ட பாடல்கள் இந்துஸ்தான் சாஸ்திரிய இசைத்தாக்கங்கள் மற்றும் மேலைத்தேச இசைத்தாக்கங்கள் என்பன வலுவில் பிரதிபலிக்கின்றன. 2. 19001920 ஆண்டு வரையிலான இரண்டாவது கட்டம் பரிசோதனைக் கட்டத்தினைக் குறிக்கின்றன.இக்கால சாஸ்திரிய அமைப்பு ஒழுங்கு முறையுடன் இருந்ததோடு தேசபக்திப் பாடல்களையும் கொண்டதாக அமைகின்றதன.

3.மூன்றாவது கட்டமாகிய 19201940 வரையிலான காலமாகும். இக்காலப் பாடல்கள் அவரின் கலைநய ஆர்வத்தினை வெளிப்படுத்துகின்றன. தாகூரின் கல்வி பற்றிய மெய்யியலும் உலகளாவிய கவனத்தினை ஈர்த்தது. இயற்கையோடு இணைந்த கல்வி முறையும் ஆழ் விழுமியங்களை வெளிப்படுத்தும் கல்வி மரபையும் பல்வேறு கட்டுரைகளில் சுட்டிக்காட்டியுள்ளார்.

1905 ஆம் ஆண்டு நிகழ்த்திய சொற்பொழிவொன்றில் கல்விக்கான பொறுப்பை மக்கள் ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார்.  மக்களுடைய முயற்சியினால் கல்விக்கூடங்கள் உருவாக வேண்டும். அவ்வாறு எழும் கல்வி நிலையங்கள் அச்சமுதாயத்தின் தேவைகளை நிறைவு செய்வதாக இருக்க வேண்டும் எனக்கூறினார்.கல்வியில் ஆக்கபூர்வமான, விமர்சனபூர்வமான தளத்தினை வலியுறுத்தினார். கல்வியில் கிழக்கையும் மேற்கையும் இணைப்பதில் ஆர்வம் காட்டினார். அதற்காகவே விஸ்வபாரதி பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

"யத்ர விஸ்வம் பவதி ஏக நீதம்' (உலகமனைத்தும் ஒரு கூட்டில் இணைவது) எனும் பெரு நோக்குடன் பிறந்தது இப்பள்ளியாகும். இவ்வாறாகத் தாகூரின் பல்துறை ஆளுமை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதையும் வழிகாட்டக் கூடிய தன்மையைக் கொண்டுள்ளது.  தாகூர் இறந்தாலும் அவரது பல்துறை ஆளுமையால் சோக்கிரடீஸ், பிளோட்டோ, கார்ள்மாக்ஸ் போன்றோர்களைப் போல இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவராவார்.

1 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP