கருக்கலைப்பு : சரியான சில தவறுகள் !
“உங்க பொண்ணு கர்ப்பமாயிருக்கா. இது பதினேழாவது வாரம்” சொன்ன டாக்டரைப் பார்த்து கோபத்துடன் கேட்டாள் தாய் லாக்ராமியோ. “உங்களுக்கென்ன பைத்தியமா, அவ பத்து வயசு குழந்தை”
“ஏம்மா… நான் பைத்தியமில்லை. உங்க பொண்ணு கர்ப்பமாயிருக்கா. ஆகவேண்டியதைப் பாருங்க” ஏக கடுப்பில் சொல்லிவிட்டுக் கிளம்பினார் டாக்டர்.
லாக்ராமியோரா நிலை குலைந்து போய் தரையில் அமர்ந்தாள். அருகில் மகள் புளோரினா. துருதுரு பார்வை, கொழு கொழு கன்னம். கொஞ்சமும் மாறாத தெய்வீக மழலைச் சிரிப்பு. வயிற்று வலி என மருத்துவமனை வந்தவர்கள் இப்படி ஒரு அதிர்ச்சியை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.விசாரித்த போது தான் விஷயம் தெரியவந்தது சிறுமியைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் மாமன்காரன் வில்லனாகிப் போன கொடுமை. தன் சகோதரனே கொடுமைக்காரனாகி விட்டானே எனும் அதிர்ச்சி ஒருபுறம். மகளின் துயரம் மறுபுறம் என கலங்கிப் போனாள் தாய். எப்படியாவது உடனடியாக கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும் என முயன்ற போது தான் வந்தது அடுத்த அதிர்ச்சி.
அவர்கள் வசித்து வந்த ரொமானியா வில் 14 வாரங்கள் தாண்டிவிட்டால் கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதம்! என்ன செய்வது ? எப்படியாவது கருவைக் கலைத்தேயாக வேண்டும் என்பதில் தாய்க்கும் மகளுக்கும் மாற்றுக் கருத்து இருக்கவில்லை. கடைசியில் விஷயம் பத்திரிகைக்கு வர, உதவிக்கு வந்தாள் ரோக்சானா எனும் பெண்மணி.
சில பல இன்னல்களுக்குப் பின், ரொமானியாவிலிருந்து லண்டனுக்குப் பறந்து, லண்டனிலுள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிறுமியின் கரு கலைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் பல்வேறுவிதமான விவாதங்களை உருவாக்கியது. கருக்கலைப்பு சரியா தவறா ? ஒட்டு மொத்தமாக இதைத் தடுப்பது நியாயமா ? எனும் விவாதங்களுக்கு எண்ணை ஊற்றியது இந்த நிகழ்ச்சி.
கருக்கலைப்பு என்றாலே ஏதோ தகாத உறவினால் உருவான குழந்தையைக் கலைக்கிறார்கள் எனும் எண்ணம் தான் பெருமாலானோருக்கு. உண்மையில் கருக்கலைப்புக்கு எக்கச்சக்க காரணங்கள் இருக்கின்றன. முதலில் வருவது மருத்துவக் காரணங்கள். கருவிலிருக்கும் குழந்தைக்கு உடல் ஊனம் ஏதேனும் இருக்கிறதா என்பதை மூன்றாவது மாதத்தில் எடுக்கும் ஸ்கேனே புட்டுப் புட்டு வைத்து விடுகிறது. குழந்தை பிறந்த பின் நிரந்தர ஊனமாய் இருந்தால் எந்த அன்னையால் தான் தாங்கிக் கொள்ள முடியும். இத்தகைய சிக்கல்களைக் கண்டறிவது தானே ஸ்கேனின் முக்கிய நோக்கமே !
சிலருக்கு பிரசவம் நடந்தால் உயிருக்கே ஆபத்து எனும் மருத்துவ நிலை இருக்கும். சிலர் பாலியல் பலாத்காரத்தின் விளைவாகக் கர்ப்பமடைந்திருப்பார்கள். இவர்களின் நிலைதான் என்ன ? இவையெல்லாம் எழுப்பப்படும் கேள்விகளில் சில.
பல நாடுகள் இத்தகைய பிரச்சினைகளை ஆழமாய் அலசி ஆராய்ந்து கருக்கலைப்புக்கானசட்டங்களை வகுத்திருக்கின்றன. பிரேசில் நாட்டில் கருக்கலைப்பு சட்டவிரோதம். ஆனால் பாலியல் வன்முறையினாலோ, பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருந்தாலோ கருக்கலைப்பு செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.
பெரும்பாலும் மதங்களின் அடிப்படையிலான அரசுகளே கருக்கலைப்புகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நிலையில் இருக்கின்றன. மத நம்பிக்கைகளை மறுதலிக்காமல் இருப்பதில் தவறில்லை. அதே நேரம் அரசுகள் மக்களைக் காப்பதிலும் கவனம் செலுத்தியாக வேண்டுமல்லவா ?
பொதுமக்களைப் பொறுத்தவரை கருக்கலைப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே இருக்கிறது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்து கொள்வதை பெரும்பாலான மக்கள் ஆதரிக்கின்றனர்.
2005ம் ஆண்டு பத்து ஐரோப்பிய நாடுகளில் விரிவான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. “பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடிவெடுக்கலாமா” என்பது தான் கேள்வி. அதிகபட்ச மாக கிரீச் ரிப்பப்ளிக் பிரதேசத்தில் 81 சதவீதமும், குறைந்த பட்சமாக போலந்து நாட்டில் 47 சதவீதம் மக்களும் வாக்களித்தனர்.
அமெரிக்காவில் வாழும் கனடா மக்களிடையே டிசம்பர் 2001ல் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 86 சதவீதம் பேர் தகுந்த காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யும் முடிவெடுக்கும் உரிமையை பெண்களிடம் விட்டு விடவேண்டும் என கருத்து சொன்னார்கள். சமீபத்தில் வெளியான இன்னொரு கருத்துக் கணிப்பும் கருக்கலைப்புக்கு ஆதரவாகவே இருந்தது. பெண்கள் கருக்கலைப்பு செய்யவே கூடாது என குரல் கொடுத்தவர்கள் வெறும் 16 விழுக்காடு மட்டுமே.
வட அமெரிக்கா மட்டுமன்றி, தென் அமெரிக்காவில் அர்ஜெண்டீனாவில் 2003ல் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் 77 சதவீதம் பேர் கருக்கலைப்பை எதிர்க்கவில்லை. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய உரிமை வழங்கப்படவேண்டும் என்றே வலியுறுத்தினர்.
இப்படி கருத்துக் கணிப்புகள் ஆதரவு நிலைப்பாடைக் காட்டினாலும் பல நாடுகள் அதையெல்லாம் சட்டை செய்வதில்லை. அபார்ஷனை மருந்துக்குக் கூட ஒத்துக் கொள்ளாத நாடுகள் பல இருக்கின்றன . சிலி, எல்சால்வடார், மெல்ட்டா, வாடிகன் சிட்டி மற்றும் நிக்குராக்வா போன்றவையே அவற்றில் சில.
நிக்குராக்வா நாட்டின் நிலமை படு மோசம். மருத்துவக் காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் எனும் சட்டம் 2006 வரை இருந்தது. மூன்று டாக்டர்கள் சான்றளிக்க வேண்டும் என்பது மட்டுமே சொல்லப்பட்டிருந்த நிபந்தனை. 2006 நவம்பர் மாதம் அதைத் திருத்தி, கருக்கலைப்பு கூடவே கூடாது என எழுதினார்கள்.
இதன் விளைவு மகா கொடுமையானது. 11 மாதங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட பெண்கள் பிரசவத்தில் இறந்து போனார்கள். அதிர்ந்து போன மனித உரிமைகள் சங்கம் இப்போது இந்தப் பிரச்சினையை கையிலெடுத்துக் கொண்டு களத்தில் குதித்திருக்கிறது.
எகிப்து, ஈரான், ஈராக், ஜப்பான், குவைத், சவுதி அரேபியா, துருக்கி, எமிரேட்ஸ் உட்பட பல நாடுகளில் கருக்கலைப்புக்குத் தடையில்லை. ஆனால் கருக்கலைப்பு கணவனின் அனுமதியுடன் தான் நடக்க வேண்டும் என்கிறது சட்டம். இதைப் பெரும்பாலான பெண்கள் அமைப்புகள் எதிர்க்கின்றன.
கொலம்பியாவிலும் கருக்கலைப்பு சட்ட விரோதம். அங்கே ஊறியிருக்கும் மத நம்பிக்கைகளின் காரணமாக மக்களிடையேயும் அதே சிந்தனையே. எக்காரணம் கொண்டும் கருக்கலைப்பு செய்யக் கூடாது எனும் சட்டத்தை 66 சதவீதம் பேர் ஆதரிக்கின்றனர்.
அயர்லாந்து நாட்டிலுள்ள கருக்கலைப்பு சட்டம் ஒரே ஒரு நிபந்தனையைக் கொண்டிருக்கிறது. அதாவது பெண்ணின் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே கருக்கலைப்பு. இல்லையேல் கூடாது. குழந்தை ஊனமாய்ப் பிறக்கும், பலாத்காரம் செய்யப்பட்டேன், தவறு செய்துவிட்டேன் என்றெல்லாம் காரணம் சொல்ல முடியாது.
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் அதிக சிக்கல் இல்லை. 1971 முதல் கருக்கலைப்பு சட்டரீதியாக ஒத்துக் கொள்ளப்பட்டது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இது சட்டமாக்கப்பட்டது. இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாய் பதினோரு மில்லியன் கருக்கலைப்புகள் நடக்கின்றனவாம் ! 4 மில்லியன் கருக்கலைப்புகள் மறைமுகமாகச் செய்யப்படுகிறதாம். என்.சி.எம்.ஏ (National Consensus for Medical Abortion in India) சொல்கிறது.
கருக்கலைப்பை ஒத்துக் கொள்ளாத நாடுகள், இது மக்களை ஒழுங்கு படுத்தும் முயற்சி என்கின்றன. திருமணமாகாத பெண்களுக்குத் தான் 60 சதவீதம் கருக்கலைப்பு நடக்கிறது என புள்ளி விவரங்களையும் நீட்டுகின்றன. கருக்கலைப்பை அனுமதிக்கும் நாடுகளோ இது பெண்களின் உரிமை, மருத்துவத் தேவை, சமூக கடமை என எதிர் விவாதங்களை முன் வைக்கின்றன.
கருக்கலைப்பு என்பது விளையாட்டுச் சமாச்சாரமல்ல. இது தவறுகளுக்கான அனுமதிச் சீட்டும் அல்ல. ஆனால் தவிர்க்க இயலா சூழலில் கூட அது மறுக்கப்படுவது சரியா என்பது தான் நம்மிடையே எழும் கேள்வி.
நன்றி : பெண்ணே நீ & http://sirippu.wordpress.com
0 கருத்துக்கள்:
Post a Comment