யாழ்ப்பாண மண்ணெண்ணெய் யுகங்களும் அரிக்கன் லாம்புகளும் ( மண்வாசனை -2)


தம்பி பொழுது இருளுது. மண்ணெண்ணெய் விளக்கை எடுத்து எண்ணையை விட்டு ஆயத்தப்படுத்தியாச்சோ? படிக்கவேணுமெல்லோ? அம்மாவின் குரல் குசினிக்குள் இருந்து கேட்டது. வீட்டில் இருந்த அரிக்கன் லாம்பு, ஜாம் போத்தல் விளக்கு மண்ணெண்ணெய், ஒரு சிறிய துணி இவற்றுடன் முற்றத்து வாசல் படியில் வந்து அமர்ந்து கொண்டு, முதல் நாள் இரவின் கரிபுகை மண்டிப்போய் இருந்த அரிக்கன் லாம்பின் சிமினியை மெதுவாக கழற்றி அதில் படிந்திருந்த புகையை துடைக்க துவங்கினேன். எனது பள்ளிக்கால பதின்ம வயதுகளில், இருள் சூழும் மம்மல் பொழுதுகளில் சிமினி துடைக்கிறதும், மண்ணெண்ணெய் விட்டு விளக்கு திரியை சரிபார்ப்பதும், திரி கட்டையாகிப்போனால் துணியை கிழித்து புது திரி சுற்றி போடுவதும் எனது அன்றாட கடமைகளில் ஒன்றாகி போனது. 

பொருளாதார தடையின் இன்னொரு பகுதியான மின்சார வெளிச்சம் இல்லாத அன்றைய நாட்களில் வீடுகளிற்கு வெளிச்சம் தந்து கொண்டிருந்தவை அரிக்கன் லாம்புகளும், சிமினி விளக்குகளும், ஜாம் போத்தல் விளக்குகளும், மெழுகுதிரிகளும் சில குப்பி விளக்குகளும் தான் ஒவ்வொரு வீடுகளிலும் சிமிட்டி சிமிட்டி இருளை விரட்டிக்கொண்டிருந்தன. இந்த விளக்குகளிற்கு எல்லாம் ஆதார சுருதி இந்த மண்ணெண்ணெய். அன்று இருந்த பொருளாதார நிலைமையில் நிவாரணத்திற்கு சங்கங்களில் வழங்கப்படும் பொருட்களில் ஒன்றாக இந்த மண்ணெண்ணையும் இருந்தபடியாலோ என்னவோ கடைகளில் கூட தட்டுப்பாடில்லாமல் கிடைத்துக்கொண்டிருந்தது. 

எங்கள் வீட்டில் இருந்த அரிக்கன் லாம்பு ஒன்றும், பித்தளையில் செய்த திரி விளக்கு ஒன்றும், ஜாம் போத்தல் விளக்கொன்றுடனும் தான் பொழுது இருட்டியதில் இருந்து படுக்கைக்கு போகும் வரையான சகல கடமைகளும் இந்த மூன்று விளக்குகளுடனுமே நடந்தேறும். இதில் ஜாம் போத்தல் விளக்கு மட்டும் எங்களுடன் விடியும் வரைக்கும் துணையிருக்கும். அது தான் எங்களுக்கு விடிவிளக்கு. மறுநாள் பள்ளிக்கூடத்தில் கூட எமது பாடப்புத்தகங்களை புரட்டும் போது அதில் கூட மண்ணெண்ணெய் மணம் வீசும் அளவிற்கு மண்ணெண்ணெய் எமது வாழ்வுடன் ஒன்றிப்போனது. 


ஜாம் போத்தல் விளக்கு என்றால் என்ன என்பது பற்றி கேட்கப்போகும் தலைமுறைக்காக கீழே உள்ள படம். 



ஜாம் போத்தல் விளக்கு என பெயர் வந்த காரணம், முன்னர் தக்காளி ஜாம், விளாம்பழ ஜாம் அடைத்து வரும் போத்தல்களிலேயே இது தயாரிக்கப்பட்டது. மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவும் நேரங்களில் கை கொடுக்கும் சிக்கன விளக்காக பயன்பட்டது.
அது சாதாரண விளக்குகளைவிட வித்தியாசமானது. எண்ணைய்ச் சிக்கனத்துக்காகத் தயாரித்து அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜாம் போத்தல் விளக்கு

1990 இன் ஆனியில் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியது. போர் தொடங்கியவுடனேயே தமிழர் பகுதிகளில் பொருளாதாரத்தடை போடப்பட்டது. மருந்துப்பொருட்கள் கூடத் தடைசெய்யப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சுன்னாகத்திலிருந்த மின்நிலையமூடாக ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலம் என்ற அளவில் சுழற்சிமுறையில் மின்வினியோகம் செய்யப்பட்டது. (எங்கள் ஊருக்கு பகல் பத்துமணிக்கு வரும்). பொறுக்குமா  சில நாட்களிலேயே அந்தச் சுன்னாக மின்நிலையம் அழிக்கப்பட்டது. அத்தோடு குடாநாடு முற்றாக இருளில் மூழ்கியது.



எச்சரிக்கை 
இந்த பதிவை குறிப்பாக Newjaffna.com
கோப்பி(Copy) செய்து உங்கள் தளத்தில் போடவேண்டாம் 
 நீங்கள் யாருடையதும் பதிவில் பெயர் வாங்கும் கேவலமான புத்தியை விடுங்கள் 
எங்கள் பதிவை திருடுவதை எத்தனை காலம்தான் பொறுத்து இருப்பது இதுவரை எங்கள் 16பதிவுகள் திருடப்படுள்ளன (Ejaffna & ekokuvil)


அப்போது, குடாநாடு முற்றாக வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் யுத்தம் ஆரம்பித்தவுடன் பொருட்களின் விலைகளனைத்தும் சடுதியாக உயர்ந்தன. அத்தியாவசியப்பொருட்கள் சிலவற்றைக் காணவே கிடைக்கவில்லை. ஒருவருக்கு 100 கிராம் சீனி வீதம் கடையொன்றில் விற்கப்பட்டபோது, அதை வாங்க 300 பேர் வரிசையில் காத்திருந்த நாட்கள் ஞாபகமிருக்கிறது. அதில் சீனி வாங்குவதற்காகவே பாடசாலை போகாமல் சில சிறுவர்களும் அடக்கம்.

இந்த நேரத்தில் மண்ணெண்ணெய் பயங்கரத் தட்டுப்பாடு. ஒரு லீற்றர் 350 ரூபா விற்றது. (இத்தொகை அப்போது யாழ்ப்பாணத்தில் கணிசமான தொகை). எங்கள் ஊரில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக எந்த மோட்டார் சைக்கிளோ காரோ ஓடி நான் பார்த்ததில்லை. அவ்வளவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு. பெற்றோல் வாசனையையே மறந்துவிட்டிருந்தோம். எனக்கு ஞாபகமிருக்கிறது; நிலவு வெளிச்சம் இருக்கும் காலங்களில் எங்கள்வீட்டில் விளக்குக்கேற்றுவதில்லை. எங்கள் அயலிலும் தான். இரவு ஏழு மணிக்கே சாப்பிட்டுவிட்டு கதைகள் சொல்லி விளையாடி, பாட்டுக்குப்பாட்டுப் போட்டி வைத்து, அம்மம்மாவிடம் கதைகேட்டுத் தூங்கிப்போக நேரம் சரியாக இருக்கும்.
(அந்த வயதில் அது இன்பமான பொழுதுகள்).
இப்படியான நேரத்தில் பத்திரிகைகளில் ஒரு விளக்கைப்பற்றிச் செய்தியும் அறிவித்தலும் வந்திருந்தன. தொடர்ச்சியாக சிலநாட்கள் அவ்விளக்கைப் பயன்படுத்தச்சொல்லி அறிவுரைகளும் வந்தன. அதுதான் ‘ஜாம் போத்தல் விளக்கு’. (இதைவிட வேறு பெயர் அந்த விளக்குக்கு இருந்ததாக நான் அறியவில்லை.)

சின்ன ஜாம் போத்தல் ஒன்றை எடுத்து அதற்குள் சிறிதளவு பஞ்சு வைத்து, கடுதாசியைச் சுருட்டிச் செய்த திரியைப் பாவித்து அந்தவிளக்குச் செய்ய வேணும். திரியைக் கவ்வ, நுனியில் சிறிய வளையம் கொண்ட கொழுக்கியொன்றைப்பாவிக்கலாம். அக்கொழுக்கி போத்தலின் விளிம்பில் கொழுவப்பட்டிருக்கும். (இதற்கெல்லாம் சைக்கிளின் வால்வ் கட்டை தான் சிறந்ததாகக் கருதப்பட்டது. அந்த நேரத்தில் பழைய சைக்கிள் ரியூப்புக்களுக்கும் சரியான மரியாதை.) ஏறக்குறைய போத்தலின் அரைவாசிக்கும் சற்று மேலாக திரி முடிவடையும். பஞ்சில் ஊறக்கூடியவாறு மண்ணெண்ணெய் விட வேண்டும். பஞ்சில் ஊறிய எண்ணெய்தான் கடுதாசி வழியாக எரிகிறது. மண்ணெண்ணெய் பஞ்சில் ஊறும் அளவுக்கு மட்டுமே விடப்படவேண்டும்.

இந்த விளக்குத்தான் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் பாவிக்கப்பட்டது. இதையே ஹரிக்கேன் விளக்குப்போல மேலே மூடியும் கைபிடியும் வைத்து விதம்விதமாக விளக்குகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தன. யாழ்ப்பாணத்தில் அந்நேரத்தில் அவ்விளக்குப் பாவித்த ஆக்களுக்கு அதன் பயன்பாடும் முக்கியத்துவமும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

என்னைப்பொறுத்தவரை இது எண்ணெய்ச்சிக்கனத்தைச் சரிவரச் செய்தது. எல்லா மக்களுமே இவ்விளக்கின் பயனை நன்கு உணர்ந்திருந்தனர். பின்னர் கொஞ்ச நாளில் உப்புப்போட்டால் எண்ணெய் இன்னும் சிக்கனப்படுத்தப்படும் என்ற கதையொன்று ஊரில் உலாவியது. (சும்மா கதைவழிதான்) கிட்டத்தட்ட எல்லோருமே பஞ்சின்மேல் உப்புப்போட்டுப்பாவித்தோம். ஆனால் உப்புப்போடுவதால் எண்ணைய்ச் சிக்கனமுண்டு என்பது எவ்வளவுதூரம் உண்மையென்று தெரியாது. அதை நாம் உணரவுமில்லை. அதற்குரிய விளக்கங்கள் ஏதுமிருப்பதாக நான் அறியவுமில்லை. ஆனால் இந்த விளக்கு மூலம் நாம் எண்ணையை மிச்சப்படுத்தலாமென்று நன்கு உணர்ந்துகொண்டோம்.

கிட்டத்தட்ட ஒருவருடம் அந்தவிளக்கு மட்டுமே பாவிக்கப்பட்டு, பின் ஏனைய விளக்குகளோடு கலந்து பாவிக்கப்பட்டு வந்தது. (பின் எண்ணைய்த் தட்டுப்பாடு ஓரளவு குறைந்திருந்தது.) யாழ் இறுதி இடப்பெயர்வு வரை எங்கள் வீட்டில் முதன்முதல் செய்த ஜாம்போத்தல் விளக்கு பாவனையிலிருந்தது. (இதற்கிடையில் 3 இடப்பெயர்வு நடந்தாலும் அவ்விளக்கு எங்களோடு கூடவே பயணித்தது.)

இந்தவிளக்கு மூலம் மாதத்துக்கு வெறும் 250 மில்லி லீற்றர் எண்ணெய் அளவுக்குத்தான் சேமிக்க முடிந்திருக்கும். இன்றைக்கு எல்லோருக்குமே இது வெறும் தூசு என்ற அளவுதான். ஆனால் அன்றைய நிலையில் பெரிய பெறுமதி அதற்கிருந்தது. பகலில் பஞ்சிலுள்ள எண்ணெய் ஆவியாகிப் போய்விடக்கூடாதென்பதற்காய் விளக்கை மூடிவைக்கும் காலம் அது. திரியாகப் பயன்படுத்தப்பட்ட காகிதத்துண்டு மாற்றப்படும்போது, பழைய கடுதாசித்துண்டைக் கசக்கிப் பிழிந்து எண்ணைய் எடுப்போம்.

இந்த ஜாம் போத்தல் விளக்கை யார் வடிவமைத்தார்களோ தெரியாது. எனினும் குறிப்பிட்ட அந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒவ்வொருவராலும் நன்றியுடன் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.



Thanks
eelamlife
vasanthanin
Blogsport

3 கருத்துக்கள்:

Anonymous,  17 September 2011 at 18:07  

//
ஜாம் போத்தல் விளக்கு என்றால் என்ன என்பது பற்றி கேட்கப்போகும் தலைமுறைக்காக கீழே உள்ள படம்.

அந்த வயதில் அது இன்பமான பொழுதுகள்

nalla article

kumar 17 September 2011 at 18:08  

nalla article
இந்த ஜாம் போத்தல் விளக்கை யார் வடிவமைத்தார்களோ தெரியாது. எனினும் குறிப்பிட்ட அந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒவ்வொருவராலும் நன்றியுடன் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.

Tamil Baby Names 30 November 2011 at 13:09  

நல்ல பதிவு.... தொடந்து உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கிறோம்.

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP