யாழ்ப்பாண கலாச்சாரம் காக்க என்ன செய்யலாம்.......??

>> கட்டாயம் வாசிக்க வேண்டியது <<

279

இன்றைக்கு இருக்கிற யாழ்ப்பாணம் பற்றிய யாழ்ப்பாணத்துக் கலாச்சாரக் காவலர்களின் புலம்பல்கள் சிலவற்றை வாசிக்க நேர்ந்தது. யாழ்ப்பாணம் கலாசாரம் மிகுந்த ஒரு இடமாகவே இதுவரை பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் பெரும்பாலான யாழ் மைந்தர்களுக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருவதில்லை. எழுத்தாளர் சுஜாதா சொன்ன ‘தப்புக்கள் வெளியே தெரியாதவரை யாவரும் புனிதர்களே’ என்கிற வாக்கியம் இன்றைக்கு யாழ்ப்பாணம் சீரழிந்துவிட்டதாகப் புலம்புகிறவர்களுக்கும் பொருந்தும். இதுவரை பெரியளவில் வெளியில் பேசப்படாமல், வெளியில் தெரியாமல் இருந்த சில விஷயங்கள் இப்போது வெட்டவெளியில் நடக்கின்றன. அவ்வளவுதான் வித்தியாசமே.


இவர்கள் வைக்கிற குற்றச்சாட்டுகளில் சிலவற்றைப் பார்ப்போமே. இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாமே facebookல் தம்பி ஒருவர் திரட்டிய பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இதற்கு நானும் கொஞ்சக்காலம் ‘கலாசார பூமி’யாகக் கட்டமைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் குப்பை கொட்டியவன் என்கிற காரணத்தால் எதிர்வினையாற்றவேண்டி வருகிறது. 


யாழ்ப்பாணத்தில் திறந்த வெளி விபசாரம் நடக்கிறதாம். 

நான் இருந்த காலத்திலும் நடந்தது. செல்வநாயகம் அண்ணா ஒரு பெண்ணுக்குப் பச்சை மட்டையால் அடியும் போட்டார். ஆனாலும், அந்தப் பெண்ணுடன் போன ஆண்கள் பற்றி யாருமே கவலைகொண்டாரில்லை. இங்கே பல்லிளிக்க ஆரம்பிக்கிறது பொதுப்புத்தி. எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியாது. எங்கள் பகுதியில் பணக்காரன் வீடு என்று ஒரு சமூகம் இருக்கிறது. இவர்கள் பெரிய வளவுகளில் வீடு கட்டி வாழ்ந்தவர்கள். வீடு கட்டி வாழ்வதைவிட, அவர்களின் வளவுக்குள் சில ‘சின்ன வீடுகள்’ இருப்பது கௌரவம் என்று வாழ்ந்தவர்கள். இதைச் சொன்னது எனக்குக் கணிதம் படிப்பித்த ஆசான் ஒருவர். அதாகப்பட்டது, ஒருவனுக்குப் பல பேர். ஆனால் ஒருத்திக்கு ஒருவன் என்கிற ஆணாதிக்கக் கட்டுமானம்தான் இவர்கள் இன்றைக்குப் புலம்பும் சீரழிந்துபோன ‘யாழ்ப்பாணக் கலாசாரம்’.


சிறுமிகள் அணியும் உடைகளை யுவதிகள் அணிகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள். முக்கால் காற்சட்டையோடு, மேலே ஒன்றும் இல்லாமல் பருத்த வண்டிகள் குலுங்க இந்த ஆண் சிங்கங்கள் நடைபோடலாமாம், ஆனால் பெண்கள் இழுத்துப் போர்த்தி கலாசாரம் பேணவேண்டுமாம். இதை இளைய சமுதாயம் ஒரு குற்றச்சாட்டாய் வைக்க இனிமேலும் இடம் கொடுக்கக்கூடாது. நீ பாரம்பரிய உடைகளை அணிகிறாயா? நீ கலாசாரத்துக்கு ஏற்ப வாழ்கிறாயா? இல்லையே. பிறகு எப்படி நீ ஒரு பெண் போடுகிற உடைகளை மட்டுப்படுத்துகிற ஆளாக முடியும்? (இதைவிட ஆண்கள் முக்கால் கால்சட்டை போடக்கூடாது என்று உடை விஷயத்தைக்கூட தாங்கள் தீர்மானித்த ஒரு கூட்டமும் இருந்தது). இங்கே மாறவேண்டியது உடைகள் அல்ல. நாங்கள் பார்க்கிற பார்வை. ஒரு வட்டத்துக்குள் இருந்துகொண்டு இவ்வளவுதான் உலகம் என்று இருந்தோம் என்றால், சந்ததி சந்ததியாக முன்னேறாமல் பின்தங்கிப்போய்விட வேண்டியதுதான்.
சந்து பொந்துகளில் காதலன் மடியில் காதலி உட்கார்ந்திருக்கிறாளாம். 
அடச் சீ… அவர்கள் என்ன… வேண்டாம். என் வாயைக் கிளறவேண்டாம். தெருவில் கூடும் நாய்களைக் கல்லால் அடித்துப் பிரிக்கிற கூட்டம், ஒரு ஆணும் பெண்ணும் அந்நியோன்னியமாக இருந்து உரையாடுவதை விமர்சிக்கிறது. நான் இருந்த போது நான்கு சுவர்களுக்குள் நடக்கவேண்டியதை எல்லாம் சில பேர் யாழ்ப்பாணத்துப் பற்றைகளில் செய்தார்கள். கலாசாரம் காக்கிறோம் என்கிற பெயரில் அவர்களைப் பிடித்த ‘கலாசாரக் காவலர்கள்’ ஆணை மிரட்டிக் கலைத்துவிட்டு, பெண்ணைத் தொட்டுப்பார்த்துவிட்டு அதைப் பெரிதாகப் பீற்றியுமிருக்கிறார்கள். அதாகப்பட்டது கலாசாரம் காக்கிறோம் என்கிற பெயரில் ஆணாகப்பட்டவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஒரு பெண் காதலன் மடியில் சாய்ந்து பேசிக்கொண்டிருந்தால் ‘கலாசாரம் சீரழிகிறது. கலாசாரம் சீரழிகிறது’ என்கிற கூச்சல். இதில் ஆண்களின் செல்லிடப்பேசிகளில் பெண்களும், பெண்களின் செல்லிடப் பேசிகளில் ஆண்களும் மட்டுமே பேசுகிறார்கள் என்கிற புலம்பல்வேறு. இப்படிப் பேசுவதாலும் கலாசாரம் கெடுகிறது என்றால், ஒரு பொதுவிழாவில் ஒரு ஆணும் பெண்ணும் பேசினால்கூட கலாசாரம் கெட்டுவிடுமல்லவா???? என்ன அபத்தமான வாதம் இது?
அதே போல நீலப்படங்களை சீ.டி.க்களாகவோ அல்லது இணையத்திலோ தேடும் இளைஞர்களையும் குற்றம் சொல்ல முடியாது. அவர்களை அப்படி அலைய வைத்ததில் எங்களுக்கும் பங்கிருக்கிறது என்பதை இந்தக் கலாசாரக் காவலர்கள் உணரவேண்டும். அவர்களுக்கு நீலப்படம் போட்டுக்காட்டுங்கள் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் ஆண் பெண் உடலமைப்பு முதல் இன்ன பிற விஷயங்களை உள்ளடக்கிய பாலியல் கல்வி என்பது நிச்சயமாக எங்களின் சமூகத்துக்குத் தேவை. எங்களின் சமூகம் மட்டுமல்ல. உலகில் பல சமூகங்களின் நிலையும் இதுதான். இது ஒன்றும் கேவலமானதும், விகாரமானதும் அல்ல. பொது வெளியில் பேசப்படவேண்டியது என்பதை முதலில் புரிந்துகொள்வது அவசியம். என் பதினமங்களில் எனக்கும் இது தொடர்பான தேடல், தவிப்பு இருந்தது. இங்கே தான் நான் எங்கள் பிதாமகன் சுஜாதாவுக்கும், ஆசான் ஜெவட்டி என்கிற ஜெபரட்ணத்துக்கும் நன்றி சொல்லவேண்டும். ஜெபரட்ணம்தான் பாலியல் பற்றிய கற்கை முக்கியமானது என்ற கருத்தின் விதையை எனக்குள்ளே விதைத்தவர், ஒரு நாற்பது நிமிட வகுப்பில் சர்வசாதாரணமாக அவர் சொன்ன 5 நிமிடக் கருத்தொன்றின் மூலமாக. தமிழ் சினிமாப் பாடல்களைத் தணிக்கை செய்கிற சமூகத்தில் பாலியல் பற்றிய பொதுவெளி உரையாடல்கள் சாத்தியமா என்பது சந்தேகமே.
இந்தக் குற்றச்சாட்டுகளைத் தவிர, அந்த நண்பர் கூறியிருக்கிற வேறு சில குற்றச்சாட்டுகளை நான் தலைகுனிந்து ஏற்றுக்கொள்கிறேன். ராணுவக் கோப்ரல் ஒருவரின் பெயரைச் சொல்லிச் சில இளைஞர்கள் அட்டகாசம் செய்கிறார்களாம். யாரையாவது அடிப்பதையே ஒரு நாள் இலட்சியமாகக் கொண்டு குழுமங்கள் பல அலைகின்றனவாம். இவைகளை நான் ‘கலாசாரச் சீரழிவு’ என்ற பதத்துக்குள் உட்படுத்தாமல் ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட சீரழிவாகப் பார்க்க விரும்புகிறேன். சினிமாக்களின் தாக்கம், இது வரையில் இருந்த, இப்போது இருக்கிற அடக்கு முறையால் ஏற்பட்ட மனச் சிதைவுகள் இவற்றுக்குரிய காரணங்களாக இருக்கலாம்.
இப்படியான செயற்பாடுகள் அந்த நண்பருக்கு வருத்தம் அளித்திருப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை. ‘கலாசாரத்துக்குப் பேர்போன யாழ்ப்பாணம்’ என்கிற பொதுப்புத்திக்கு இந்தச் செய்திகள் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். யாழ்ப்பாணத்தில் இவற்றுடன் சாதீயமும் கோரமுகம் கொண்டு இருந்து வருவது உண்மை. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் இருந்தாலும் இதையும் இங்கே சொல்லித்தானாகவேண்டும். யாழ்ப்பாணத்தில் sexual orientation என்கிற பதத்தில் அடங்குகிற அத்தனை வகைகளும் இருக்கிறது. அதே போல் incest கூட. நான் சொல்வது அதிர்ச்சியாகவும், யாழ்ப்பாணத்தை வசைபாடுவது போலவும் இருக்கலாம். என்றைக்காவது ஒரு நாள் என்னைப் போல இன்னொருவனும் இவற்றைக் கண்டுணர்வான். அல்லது கண்டுணர்ந்த ஒருவன் துணிந்து சொல்லுவான். இந்தப் பதிவுக்கு வரும் வசைகளுக்கு நான் சொல்கிற பதில்களுக்கு அப்படி ஒருவன் பலம் சேர்ப்பான்



இதையும் வாசிங்கள் 


நன்றி:-http://parunko.com

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP