அதிர்ஷ்டம் பல தரும் அட்சய திருதியை


'தங்கம்' எனும் அரியவகை உலோகத்தின்மேல் ஆண், பெண் எனும் இருபாலாரும் அளவு கடந்த ஆசைகொண்டிருந்தாலும் பெண்களுக்கு என்னவோ தங்கத்தின் மீதான மோகம் அதிகமாகவே இருக்கிறது. அண்மைக் காலமாக அப்பெண்கள் சிறப்புடன் கொண்டாடும் ஒரு நாளாக 'அட்சய திருதியை' மாறிவருகிறது என்பதை யாருமே மறுக்க முடியாது.


'அட்சய திருதியை' எனும் சிறப்புமிக்க நாள் மே மாதம் 6 ஆம் திகதி வருவதாக ஜோதிட வல்லுனர்கள் கூறுகிறார்கள். அமாவசை தினத்துக்குப் பின்னர் வரும் வளர்பிறையில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே திருதியை என சிறப்பாக அழைக்கப்படுகிறது. இந்துக்களின் தமிழ்ப் புதுவருடம் சித்திரை மாதத்தில்தான் ஆரம்பமாவதுடன் சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதங்களைக் கொண்டதே ஒரு தமிழ் வருடமெனக் கொள்வது எம்முடைய மரபாகும். இப்பன்னிரண்டு மாதங்களில் சித்திரை மாதத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. திருமாலின் அவதாரமான 'பரசுராமன்' இந்நன்நாளில் பிறந்தார் என சமய இலக்கியங்கள் ஊடாக நாம் அறிகிறோம்.அந்த வகையில் சித்திரை மாதத்தில் வருகின்ற திருதியை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



தற்காலத்தில் அட்சய திருதியை தினத்தன்று தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்கினால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதுடன் வாங்குகின்ற பொருள் பல்கிப்பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. 'அட்சயம்' எனும் சொல்லுக்கு குறையாத, நிறைந்த ஆகிய பொருள்களைக் கொள்ளமுடியும். அதனாலே அள்ள அள்ள குறையாத பாத்திரத்தை 'அட்சய பாத்திரம்' என சிறப்பாக அழைத்தார்கள்.



அட்சய திருதியை தினம் தங்கம் வாங்குவதற்கு மாத்திரம் உகந்த நாள் அல்ல என்பது பெரியோர்களின் கருத்தாகும். அந்த நன்நாளில் சகல நல்ல விடயங்களையும் ஆரம்பிக்கலாம். இதனால் அவை பல்கிப்பெருகுவதோடு நல்ல பலன்களைக் கொடுக்கும் என்பது நம்பிக்கையாகும். தமிழர்கள் தங்கம் வாங்குவதை சிறந்த சேமிப்பு முறையாக காலங்காலமாக கைக்கொள்கிறார்கள். இதனால் அட்சய திருதியை எனும் நல்ல நாளை தங்கம் வாங்குவதற்கு உரிய நல்ல நாளாக மாத்திரம் பார்க்கிறார்கள்.



தங்கம் விலையில் அடிக்கடி மாற்றம் இருந்தாலும் அட்சய திருதியை தினத்தில் நகை வாங்கினால் வீட்டிற்குச் செல்வம் வந்து குவியும் என்ற நம்பிக்கை காரணமாகவும் பல தங்க நகை வியாபாரிகள் அட்சய திருதியைக்கு பல சிறப்பு சலுகைத் திட்டங்களை அறிவிப்பதுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட பல நகைகளையும் அறிமுகப்படுத்துவதாலும் இந்த நாளில் நகை வாங்குபவர்களின் கூட்டம் அலை மோதுவதுடன், வருடத்திற்கு வருடம் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

இது வரைகாலமும் எமது பாரம்பரியத்தில் இடம்பிடிக்காமல் சமீப காலமாக முக்கிய இடம் பிடிக்கின்ற அட்சய திருதியை எனும் சுப மங்கல நாளில் நல்ல செயல்கள் பலவற்றை செய்வதுடன் சிறந்த துறைகளில் முதலீடு செய்து நாமும் நலம் பெறுவோம்.



அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது ஒரு இந்து புனித நாள், அது இந்து மாதமான வைகாசியில் மூன்றாம் திதி (பௌர்ணமி நாள்)சுக்கில பட்சத்தில் வருகின்றதாகும். இந்த நாள் இந்து மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான இறைவன் விஷ்ணுவால் ஆளப்படுவதாகும். இது வழமையாக இந்து முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் இறைவன் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாவார். ஹிந்து இதிகாசங்களின்படி, இந்த நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியானகங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்தது.

"அக்ஷயா" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது, மேலும் இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. மரபியல் வழிவந்தவர் அக்ஷய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து சுபிட்சத்தைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூஜை போடுவது போன்ற புதிய முயற்சிகளை அக்ஷய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.

மேலும்


அட்சயம் என்றால், ‘வளருதல்’ என்று பொருள். சித்திரை மாதம், வளர்பிறையில் வரும் திருதியை நாள் அட்சய திருதியை. இந்த நாளில் எந்தப் பொருள் வாங்கினாலும் சிறப்புதான். அன்று, தான தர்மம், புதுக் கணக்கு ஆரம்பம், கல்வித் துவக்கம், விரதம், தெய்வ வழிபாடு ஆகியவற்றை மேற்கொள்வது உத்தமம். இப்படிப்பட்ட அட்சய திருதியைப் பற்றி புராணக் கதைகள் பல உண்டு.

ஏழ்மையில் வாடிய ஸ்ரீ கிருஷ்ணரின்
நண்பர் குசேலர், ஒரு பிடி அவலை எடுத்துத் தனது கிழிந்த மேலாடையில் முடிந்து கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரை
சந்திக்கச் சென்றார். குசேலரை வரவேற்று உபசரித்த கண்ணன், அந்த அவலை எடுத்துச் சாப்பிட்டபடி, ‘‘அட்சயம்!’’ என்றார். உடனே, குசேலரின் குடிசை, மாளிகை ஆனது; குசேலர் ‘குபேர சம்பத்து’ பெற்றார். குசேலருக்கு, கண்ணன் அருள் புரிந்தது அட்சயத் திருதியை திருநாள் ஆகும்.



கண்ணபிரான் அட்சய திருதியைப் பற்றி, தருமருக்கு ஒரு கதை கூறியதாக பவிஷ்யோத்ர புராணம் விளக்குகிறது. அந்தக் கதை:

சாகல் என்ற நகரில் தர்மன் என்ற ஏழை வணிகன் ஒருவன் இருந்தான். தெய்வ பக்தி மிகுந்தவன். அவன், வருடம் தோறும் அட்சய திருதியையின்போது புனித நதியில் நீராடி, இயன்றளவு தான தர்மங்கள் செய்தான். இதனால் மறு பிறவியில் அரசனாகப் பிறந்தான். அப்போதும் அட்சய திருதியை திருநாளில் தான தர்மங்கள், யாகம் ஆகியவற்றைச் செய்து மென்மேலும் சிறப்பு பெற்றான். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், அட்சய திருதியை அன்று புனித நதியில் நீராடி, தான தர்மங்கள் செய்தால் உடல் பிணிகள் நீங்கும்.

இந்த நன்னாளில் சிவபார்வதி, ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீலட்சுமி ஆகியோரை பூஜித்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். அன்று பித்ருக்களுக்கும், மறைந்த முன்னோருக்கும் சிராத்தம், பூஜை செய்தால் பாவ விமோசனம் பெறலாம்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெண்கள் அட்சய திருதியை அன்று சுவர்ண கௌரி என்ற விரதம் கடைப் பிடிக்கிறார்கள்.

அன்று, கௌரி எனப்படும் பார்வதி தேவி தனது பிறந்த வீட்டுக்கு வருவ தாகவும், மறு நாள் அன்னைக்குப் பாதுகாப்பாக ஸ்ரீவிநாயகர் வருவதாகவும் ஐதீகம். திருமணமான பெண்கள், இந்த நாளில் சுமங்கலி பூஜை செய்து, மற்றவர்களுக்கு ஆடை வழங்குவது வழக்கம்.

ஸ்ரீபரசுராமர் அவதரித்ததும், கிருத யுகம் தோன்றியதும் இந்த அட்சய திருதியை திருநாளில்தான். அட்சய திருதியை அன்று ஏழைக்கு ஆடை தானம் அளித்தால் மறுபிறவியில் ராஜ வாழ்வு கிட்டும்.

தயிர்சாதம் தானம் செய்தால், ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் தந்தால், திருமணத் தடை அகலும். உணவு தானியங்களை தானம் செய்தால், விபத்துகள் அகால மரணம் போன்றவை சம்பவிக்காது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.

இவ்வளவு நன்மைகள் இருக்கும் போது, அதை விடுத்து தங்கம் வாங்குவது மட்டுமே நல்லது எனறு நினைப்பது எந்த விதத்தில் சரி?

வசதி படைத்தவர்களால் நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்ய முடியும். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலையில் நடுத்தர குடும்பத்து மக்களால் தடாலடியாக நகை வாங்குவது என்பது முடியாத காரியம். தலையை அடகு வைத்தாவது அட்சய திருதியை அன்று நகை வாங்கியே தீருவேன் என்று அடம் பிடித்து குடும்பத்தில் குழப்பத்தை விளைவிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். அழியும் பொருளை வாங்க தம்மிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச அமைதியையும் தொலைக்கும் நேரத்தில் - இறைவனைப் பற்றிய தியானங்களிலும் வழிபாடு வேள்விகளிலும் மனதை செலுத்த முன்வரவேண்டும். தம்மை விட ஏழ்மையான நிலையில் இருப்பவர்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வரவேண்டும். கண்களை விற்று சித்திரம் வாங்கிய கதையாக ஆகிவிடக்கூடாது நம் வாழ்க்கை.
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பது போய் ஆடிக்கழிவு என்று ஆகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் அட்சய திருதியையின் உண்மையான நோக்கத்தை மக்கள் என்று புரிந்து கொள்ளப்போகிறார்களோ?

அட்சய திருதியை ஒட்டி நகை வாங்கினால் செல்வம் சேருமா?
சென்ற ஆண்டு நகை வாங்கியவர்களுக்கு எவ்வளவு செல்வம் சேர்ந்தது?

அட்சயதிருதியை
அட்சயதிருதியின் நோக்கமே பிறருக்கு தானங்கள் கொடுக்கவேண்டும் என்பதுதான். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இல்லறத்தானின் (சிராவகத்தான்) கடமைகளில் ஒன்றான துறவறத்தாரை ஆகார தானத்தால் தாங்குதல் ஆன “விருந்தோம்பலை”க் குறிப்பதாகிறது. ஆனால், அதுவே பின்னாளில் நோக்கம் மாறி தேவர்களால் பொழியப்பட்ட விலையுயர்ந்த நகைகளை மக்கள் தங்கள் வீடுகளுக்கு அள்ளி சென்றதை எடுத்துக்கொண்டு விட்டார்கள். அதன் அடிப்படையில் அன்றைய தினம் நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நினைப்பில் செயல்பட தொடங்கிவிட்டார்கள்.

1 கருத்துக்கள்:

Ram 31 May 2011 at 09:32  

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கையில் வந்து பார்த்து கம்ண்டிட்டு போகும் படி கேட்கிறேன்.. நன்றி

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_31.html

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP