யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி
1796 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரிடமிருந்து அதனைக் கைப்பற்றியதிலிருந்து யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி ஆரம்பமானது. 1796 ஆம் ஆண்டிலிருந்து 1948 ல் யாழ்ப்பாணத்தையும் இலங்கையின் ஒரு பகுதியாக விட்டுச் செல்லும் வரை இவ்வாட்சி நீடித்தது.
இலங்கைத் தீவில் பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்பம்
1782 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கும், ஒல்லாந்து நாட்டுக்கும் இடையில் போர் மூண்டது. இதனத் தொடர்ந்து சென்னையை நிர்வகித்துவந்த பிரித்தானியத் தேசாதிபதி இலங்கைத் தீவில் உள்ள ஒல்லாந்தர் பகுதிகளைக் கைப்பற்றப் படைகளை அனுப்பினான். அப்படை திருகோணமலையில் இறங்கி அதனைக் கைப்பற்றியது எனினும், அடுத்த ஆண்டில் இங்கிலாந்தும், ஒல்லாந்தும் சமாதானம் செய்து கொண்டமையால் திருகோணமலையைத் திருப்பிக் கொடுக்கவேண்டியதாயிற்று. 1795 ல் மீண்டும் இரு நாடுகளுக்குமிடையே போர் வெடிக்கவே, சென்னையிலிருந்து சென்ற பிரித்தானியப் படைகள் மீண்டும் திருகோணமலையைக் கைப்பற்றியதுடன், பருத்தித்துறையில் இறங்கி எவ்வித எதிர்ப்புமின்றி யாழ்ப்பாணக் கோட்டையையும் கைப்பற்றிக் கொண்டன. இவ்வாறே நீர்கொழும்பு, கொழும்பு, காலி என ஒவ்வொரு நகரமாய் வீழ்ச்சியடைய இலங்கையிலிருந்த ஒல்லாந்தரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகள் அனைத்தும் 1776 பெப்ரவரியளவில் பிரித்தானியர் வசமாயின.
ஆரம்பத்தில் இப்பகுதிகளை நேரடியாக இங்கிலாந்தின் ஆட்சியின் கீழ் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டதாயினும், பல காரணங்களை முன்னிட்டு சென்னையுடன் சேர்த்து ஆட்சிசெய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த ஒழுங்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1798 ல் இலங்கையிலிருந்த பிரித்தானியர் ஆட்சிப் பகுதிகள் இங்கிலாந்து அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இங்கிலாந்து அரசின் பிரதிநிதியாக தேசாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் கொழும்பில் இருந்து நிர்வாகம் நடத்தினார்.
யாழ்ப்பாண நிர்வாகம்
தேசாதிபதிகளே யாழ்ப்பாணத்தின் நிர்வாகத்துக்கும் பொறுப்பாக இருந்துவந்தனர். இவர்கள் இலங்கையை 5 மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாகாணத்தையும் ஒரு அரசப் பிரதிநிதியின் (Government Agent) நிர்வாகத்தின் கீழ்க் கொண்டுவந்தார்கள். ஆரம்ப காலங்களில் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்துத் தொடர்புகள் பலமாக இருக்கவில்லையாதலால் சில அரசப் பிரதிநிதிகள் ஒரு அரசனைப் போலவே நிர்வாகம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
0 கருத்துக்கள்:
Post a Comment