யாழ்ப்பாணத்து இந்துப் பெயர் அமைப்பு

யாழ்ப்பாணத்தவர் பெரும்பாலும் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள். இதனால் அவர்களுடைய பெயர்கள் பெரும்பாலும் சிவன், முருகன், பிள்ளையார், உமாதேவி, விஷ்ணு போன்ற கடவுளரின் பெயர்களையும், வேறு பல பரிவார தெய்வங்களின் பெயர்களையும், சமயப் பெரியார்களின் பெயர்களையும் குறிக்கின்றன. இவை தவிரச் சமயம் சாராத பொதுப் பெயர்களையும் காணமுடியும்.
யாழ்ப்பாணத்தில் காணும் இந்துப் பெயர்களில், தமிழ், வடமொழி, வேறு மொழிகள் என்பவற்றை இனங்காணமுடியும். சமயத் துறையில் சமஸ்கிருதச் செல்வாக்கு அதிகம் இருந்ததனால், கடவுட் பெயர்கள் பெரும்பாலும் அம் மொழியிலேயே இருக்கின்றன. அதனால் மக்கட் பெயரிலும் சமஸ்கிருதச் செல்வாக்கு அதிகம். எடுத்துக் காட்டாக,
விநாயகமூர்த்தி, ஸ்ரீஸ்கந்தராஜா, பாஸ்கரன் போன்ற ஆண்களின் பெயர்களும், தனலட்சுமி, சரஸ்வதி, இராஜேஸ்வரி போன்ற பெண்களின் பெயர்களும் சமஸ்கிருதப் பெயர்களே. ஆனாலும் பல சந்தர்ப்பங்களில் இப்பெயர்களைத் தமிழ் மொழி மரபுக்கு ஏற்றபடி மாற்றிப் பயன்படுத்துவது உண்டு. இது எழுத்தில் மட்டும், பேச்சில் மட்டும் அல்லது இரண்டிலும் கைக்கொள்ளப்படுவது உண்டு. எடுத்துக்காட்டாக, ரத்னம் என்பதை இரத்தினம் என்று எழுதுவார்கள், பேச்சில் பெரும்பாலும் ரெத்தினம் அல்லது ரத்தினம் என்பது வழக்கம். ஆனால், சரஸ்வதி என்பதைப் பெரும்பாலும் அப்படியே எழுதினாலும் பேசும்பொழுது சரசுவதி என்ற பயன்பாட்டைக் காணலாம். கணேஷன் என்பது எழுத்திலும், பேச்சிலும் கணேசன் என்றே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. தமிழ் நாட்டில் பரவலாகக் காணப்படுகின்ற கணேஷ், ராஜ், கார்த்திக், முருகேஷ் போன்ற பயன்பாடுகள் யாழ்ப்பாணத்தில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.
ஒப்பீட்டளவில் தூய தமிழ்ப் பெயர்கள் குறைவு என்றே சொல்லவேண்டும். பழைய காலத்திலும், பிற்காலத்தில் சிறப்பாகப் பொருளாதார மற்றும் சமூக அடிப்படைகளில் கீழ் மட்டத்திலுள்ள மக்கள் மத்தியிலும் தமிழ்ப் பெயர்கள் கூடுதலாகக் காணப்பட்டன.
முருகன், நல்லதம்பி, பொன்னையா, எழிலன், கண்ணன், மணிமாறன், சேரன் போன்ற ஆண்களுக்குரிய பெயர்களும், அன்னப்பிள்ளை, பொன்னி, சின்னம்மா, பொன்மணி, கயல்விழி போன்ற பெண்களுடைய பெயர்களும் தமிழ்ப் பெயர்களாகும்.

சொற்களின் எண்ணிக்கை

யாழ்ப்பாணத்து மக்கட் பெயர்களை அவற்றை உருவாக்கிய சொற்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் வகுத்து ஆராயலாம். பொதுவாகத் தமிழில் பல சொற்கள் இணைந்து பெயரை உருவாக்கும்போது சில சந்தர்ப்பங்களில் விளைவு ஒரு சொல்லாகவே கணிக்கப்படுகின்றது. இக்கட்டுரையில் சொற்களின் எண்ணிக்கை என்னும்போது பெயரை உருவாக்கிய தனியாகப் பொருள் தரக்கூடிய சொற்களே கருதப்படுகின்றன. பெரும்பாலான பெயர்கள் ஒரு சொல், இரண்டு சொற்கள், அல்லது மூன்று சொற்களுக்குள் அடங்கிவிடுகின்றன. அதற்கு மேற்பட்ட சொற்கள் கொண்டவை மிகவும் குறைவே.

ஒருசொற் பெயர்கள்

முருகன், வேலன், சிவா, எழிலன், அமுதன், உமா, வள்ளி, பொன்னி, பத்மா போன்ற பெயர்கள் ஒரு சொற்பெயர்கள். ஒரு சொற் பெயர்களிற் சில மேலும் பகுதிகளாகப் பிரிக்கப்பட முடியாதவை. சிவா, குமார், உமா, வள்ளி போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். வேறு சிலவற்றை அடிச்சொல்லாகவும் விகுதிகளாகவும் பிரிக்கலாம். எடுத்துக்காட்டாக,
முருகன் > முருகு + அன் (ஆண்பால் விகுதி)
வேலன் > வேல் + அன் (ஆண்பால் விகுதி)
பொன்னி > பொன் + இ (பெண்பால் விகுதி)
ஆண்பால் விகுதிகளைக் கொண்ட பெயர்கள் பெரும்பாலும் அன், என்பதுடன், மரியாதைக்குரிய அர் என்னும் விகுதியும் கொண்டு அமைவதுண்டு.
முருகு + அன் > முருகன்
முருகு + அர் > முருகர்
சில பெயர்களில், குறிப்பிட்ட நபரைக் குறித்து மரியாதையாகப் பேசும்போது அன், ஆர் என்ற இரு விகுதிகள் சேர்ந்து அமைவதுண்டு.
முருகு + அன் + ஆர் > முருகனார்
வேல் + அன் + ஆர் > வேலனார்

இரண்டு சொற்களாலான பெயர்கள்

இரண்டு சொற் பெயர்களின் தன்மைகள்பற்றிப் பார்க்கலாம்.
தனியாக நின்று பொருள் தரக்கூடிய இரண்டு சொற்கள் இணைந்து உருவாவனவே இருசொற் பெயர்கள்.
சிவபாலன் (சிவ(ன்) + பாலன்)
பொன்னம்பலம் (பொன் + அம்பலம்)
செல்வநாயகி (செல்வ(ம்) + நாயகி)
இரு சொற் பெயர்களில், முதற்பகுதி, இறுதிப்பகுதி என்று பிரித்துப் பார்க்கலாம். பெயரை உருவாக்ககூடிய பல சொற்கள் இரண்டு இடங்களிலுமே வரக்கூடியவை. முருகு என்ற சொல்லை எடுத்துக்கொண்டால், அது முதற்பகுதியாக அமையும்போது, முருகேசன் (முருகு + ஈசன்) போன்ற பெயர்களும், இறுதிப்பகுதியாக அமையும்போது, வேல்முருகு போன்ற பெயர்களும் உருவாகின்றன. இதே போல,

சொல் முற்பகுதி பிற்பகுதி இதே போல

செல்வம் செல்வநாயகம் அருட்செல்வம்
இரத்தினம் இரத்தினவேல் குணரத்தினம்
தேவன் தேவராசா குமாரதேவன்
ராஜா ராஜநாயகம் சிவராஜா
பாலன் பாலகுமார் சிவபாலன்
அம்பலம் அம்பலவாணர் தில்லையம்பலம்
தம்பி தம்பிராசா நல்லதம்பி
அம்மா அம்மாக்கண்ணு பொன்னம்மா
இலட்சுமி விஜயலட்சுமி இலட்சுமிதேவி
சிங்கம் சிங்கராசா பாலசிங்கம்
சோதி சோதிராசா பரஞ்சோதி


போன்ற பல சொற்கள் இரு பகுதிகளிலும் அமைந்து பெயர்களை உருவாக்கக் கூடியவை. எனினும், பெரும்பாலும் முன்பகுதியிலேயே வரும் சொற்களும், பின்பகுதியிலேயே அதிகம் வரக்கூடிய சொற்களும் உள்ளன.
முற்பகுதியிலேயே அதிகம் வரும் சொற்களும் அவற்றுக்கான சில எடுத்துக்காட்டுகளும் கீழே தரப்பட்டுள்ளன.

சிவ : சிவராசா, சிவகுமாரன், சிவபாலன், சிவகடாட்சம், சிவகுமாரி, சிவானந்தன், சிவரூபன், சிவஞானம், சிவமலர்

நாக : நாகராசா, நாகமணி, நாகரத்தினம், நாகேந்திரன், நாகேஸ்வரி, நாகம்மா
பால : பாலேந்திரா, பாலசிங்கம், பாலகுமார், பாலராஜன், பாலசுந்தரம், பாலசுந்தரி, பாலராணி

ஞான : ஞானசுந்தரம், ஞானேந்திரா, ஞானானந்தன், ஞானேஸ்வரன், ஞானேஸ்வரி

சின்ன : சின்னத்தம்பி, சின்னராசா, சின்னக்குட்டி, சின்னையா, சின்னாச்சி, சின்னமணி, சின்னம்மா, சின்னத்தங்கம்

இராம : இராமநாதன், இராமச்சந்திரன், இராமேஸ்வரன்

குமார : குமாரராஜா, குமாரதேவன், குமாரசிங்கம், குமாரசாமி

குண : குணசீலன், குணபாலன், குணரத்தினம், குணராசா, குணசேகரம், குணசிங்கம், குணரஞ்சிதம்.

மூன்று சொற்களாலான பெயர்கள்

இவை தனியாக நின்று பொருள் தரக்கூடிய மூன்று சொற்கள் இணைந்து உருவாகும் பெயர்கள் ஆகும். இவ்வாறான முச்சொற் பெயர்களின் கூறுகளும் இரு சொற் பெயர்களில் பயன்படும் கூறுகள் போன்றவையே. பொதுவான முச்சொற் பெயர்கள் மேலதிகமாக ஒரு கூறு சேர்க்கப்பட்ட இருசொற் பெயர்களாகவே காணப்படுகின்றன. இருசொற் பெயர்களுக்கு முதலில், இடையில் அல்லது இறுதியில் புதிய கூறுகள் சேர்க்கப்படுகின்றன. சில எடுத்துக்காட்டுகள்:
பாலசிங்கம் > சிவபாலசிங்கம்
இரத்தினவேலு > இரத்தினவேலுப்பிள்ளை
சிவராசா > சிவமகாராசா

நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட சொற்களாலான பெயர்கள்

நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களாலான பெயர்கள் மிகமிக அரிதாகவே காணப்படுகின்றன.

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP