யாழ்ப்பாண அரசு
கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 1620ல் போர்த்துக்கீசரின் ஆட்சியின்கீழ் கொண்டுவரப்படும் வரை யாழ்ப்பாண அரசு நிலவிவந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் உண்டெனினும், அதன் தோற்றம் பற்றிய வாத எதிர்வாதங்கள் தொடர்ந்தும் நிலவியே வருகின்றன
யாழ்ப்பாண அரசின் தோற்றம்
யாழ்ப்பாண வரலாற்று மூல நூல்களில் ஒன்றான வையாபாடல் இவ்வரசின் ஆரம்பத்தைக் கி.மு. 101 என்று கூறுகிறது. இன்னொரு நூலான வைபவமாலை இவ்வரசு கி.பி. --- யில் தொடங்கியதாகச் சொல்கிறது. எனினும் பல ஆய்வாளர்கள் யாழ்ப்பாண அரசு கி.பி. 13ஆம், 14ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதிகளிலேயே தொடங்கியிருக்கக் கூடும் எனக் கருதுகிறார்கள். 11ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழனின் இலங்கைப் படையெடுப்பு, 13ஆம் நூற்றாண்டில் கலிங்க மாகனின் படையெடுப்பு என்பன யாழ்ப்பாண அரசு உருவாவதற்கான களம் அமைத்துக் கொடுத்தன என்பது அவர்களது கருத்து.
ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சம்
தனிக்கட்டுரை: ஆரியச் சக்கரவர்த்திகள்
யாழ்பாடி வாரிசு இல்லாது இறந்த பின்னர், இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட, கூழங்கைச் சக்கரவர்த்தியிலிருந்து தொடங்கி, ஆரியச் சக்கரவர்த்திகள் என்று அழைக்கப்பட்ட வம்சம், அரசு போத்துக்கீசர் கைப்படும்வரை ஆண்டு வந்தது. இவர்கள் பரராசசேகரன் செகராசசேகரன் என்ற பட்டப் பெயர்களை மாறிமாறி வைத்துக்கொண்டு ஆண்டு வந்தனர்.
சிங்கை நகரும், நல்லூரும்
யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்தவையென சிங்கைநகர், நல்லூர் என இரண்டு பெயர்கள் கூறப்படுகின்றன. தற்போதைய யாழ்ப்பாண நகருக்கு அருகேயுள்ள நல்லூர், அரசின் இறுதிக்காலத்தில் தலைநகராயிருந்ததென்பதில் ஐயமெதுவும் இல்லை. சிங்கைநகரென்பது யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கரையிலுள்ள வல்லிபுரப்பகுதியில் அமைந்திருந்ததென்றும், இவ்வரசின் ஆரம்பகாலத் தலைநகரம் இதுவேயென்றும் சிலர் கூற, சிங்கைநகரென்பதும் நல்லூரையே குறிக்குமென்றும், யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரம் நல்லூர் மட்டுமேயென்றும் வேறு சிலர் கொள்வர்.
எல்லைகள்
இதேபோல யாழ்ப்பாண அரசின் ஆட்சி எல்லை பற்றியும் தெளிவு இல்லை. குடாநாட்டுப் பகுதியைத் தளமாகக் கொண்டு, சமயங்களில் இவ்வரசின் எல்லை, வன்னிப்பகுதி முழுவதையும் உள்ளடக்கி, மேற்குக் கரையில் புத்தளம் வரை கூடப் பரந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.
யாழ்ப்பாணத்துப் போர்கள்
செண்பகப் பெருமாள்
கி.பி.1450ல் யாழ்ப்பாணம் தென்னிலங்கையிலிருந்து படையெடுத்துவந்த, செண்பகப் பெருமாள் என்பவனிடம் தோல்வியடைந்தது. எனினும் 17 வருடங்களின் பின், தோற்றோடிய கனகசூரிய சிங்கையாரியன் இந்தியாவிலிருந்து படைதிரட்டிவந்து இழந்த நாட்டை மீட்டான்.
போத்துக்கீசர் படையெடுப்புகள்
யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி
நல்லூரிலுள்ள மந்திரிமனை என்னும் கட்டிடம், இக்கட்டிடம் பிற்காலத்ததாகக் கருதப்படினும், இது அமைந்துள்ள நிலம் யாழ்ப்பாண அரசுத் தொடர்புள்ளது.
16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்த்துக்கீசரின் நடமாட்டம் இலங்கையையண்டிய கடற்பிரதேசங்களில் அதிகரித்து இலங்கை அரசியலிலும் அவர்கள் தலையிடத் துவங்கிய பின்னர், யாழ்ப்பாண இராச்சியத்திலும் அவர்கள் பார்வை விழுந்தது. போர்த்துக்கீசரின் செல்வாக்கால் இப் பிராந்தியத்தில் கத்தோலிக்க மதம் தலையெடுக்க ஆரம்பித்து, யாழ்ப்பாண இராச்சியத்திலும் மதமாற்றங்கள் தொடங்கியபோது, அப்போதைய யாழ்ப்பாண அரசன், தனது ஆளுகைக்குட்பட்ட மன்னாரில் அவ்வாறு மதம் மாறியோரைச் சிரச்சேதம் செய்வித்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனைச் சாக்காக வைத்துக்கொண்டு, 1560ல் போர்த்துக்கீசத் தளபதி டொம் கொன்சுடன்டீனோ டி பிரகன்சா, யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். எனினும், நாட்டுக்குள்ளேயே போத்துக்கீசருக்குப் போக்குக் காட்டிய யாழ்ப்பாண அரசன், அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள இணங்கினான். எனினும் போத்துக்கீசரின் கடுமையான நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல், யுக்தியினால் அவர்களை நாட்டை விட்டு விரட்டினான். ஆனாலும், போத்துக்கீசர் யாழ்ப்பாண அரசுக்குக் கீழ்ப்பட்ட மன்னார் தீவைத் தாக்கி அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். தொடர்ந்து 1591 இல் அந்தரே பூர்த்தாடோ (Andre Furtado) என்னும் தளபதி தலைமையில், போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டனர். இப் போரில் யாழ்ப்பாண அரசன் கொல்லப்பட, அவனுடைய மகனுடன் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு, அவனை அரசனாக்கி மீண்டனர். இதன் பின்னர் 1620 வரை போர்த்துக்கீசரின் தயவிலேயே யாழ்ப்பாண மன்னர்கள் நாட்டை ஆண்டுவந்தனர். 1620ல் இராச்சியத்திலேற்பட்ட பதவிப் போட்டியைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றித் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததின் மூலம், யாழ்ப்பாண மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
ஒல்லாந்தர் ஆட்சி
இந்த இராச்சியம் 1658ல் ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது. இவர்கள் 138 வருடகாலம் ஆண்டபின், 1796ல் யாழ்ப்பாணத்தை பிரித்தானியரிடம் பறிகொடுத்தனர்.
பிரித்தானியர் ஆட்சி
பிரித்தானியர் யாழ்ப்பாணத்தையும், அவர்களால் கைப்பற்றப்பட்ட இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளுடன் சேர்த்து ஒரே அலகாக நிர்வகித்தனர். 1948 பிப்ரவரி 4ஆம் திகதி, முழுத்தீவையும் ஒரே நாடாகவே சுதந்திரம் கொடுத்துவிட்டு வெளியேறினர்
0 கருத்துக்கள்:
Post a Comment