யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி
1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாண அரசு போத்துக்கீசரிடம் வீழ்ச்சியடைந்தபோது யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி உருவானது. இவ்வாண்டிலேயே போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தின் ஆட்சியைத் தங்கள் நேரடி ஆட்சிக்குள் கொண்டுவந்தபோதும், 1590 ஆம் ஆண்டிலிருந்தே போத்துக்கீசர் செல்வாக்குக்கு உட்பட்டே யாழ்ப்பாண அரசர்கள் ஆட்சி செய்து வந்தனர்.
இவர்கள் யாழ்ப்பாண அரசின் தலைநகரை நல்லூரிலிருந்து இன்றைய யாழ்ப்பாண நகருக்கு மாற்றினர். யாழ்ப்பாணத்தில் ஒரு கோட்டையையும் கட்டி அதற்கு வெளியே இன்று பறங்கித் தெரு என அழைக்கப்படும் பகுதியில் ஒரு நகரத்தையும் அமைத்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசரின் ஆரம்பகால ஈடுபாடுகள்
போத்துக்கீசர் முதன்முதலாக இலங்கைக்கு வந்தது, 1505 ஆம் ஆண்டிலாகும். டொன் லொரென்சே டே அல்மெய்தா என்பவன் தலைமையிலான குழுவொன்று, கடற் கொந்தளிப்புக் காரணமாகக் காலிப் பகுதியில் தரை தட்டியபோது இது நிகழ்ந்தது.[1] இதன் பின்னர் 1518 ஆம் ஆண்டில் இலங்கையின் கோட்டே இரச்சியத்தை ஆண்ட பராக்கிரமவாகுவின் அனுமதி பெற்று, மேற்குக் கடற்கரைப் பகுதியில் வர்த்தக சாலை ஒன்றைப் போத்துக்கீசர் கட்டினர். சில காலத்தின்பின் கோட்டேயைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அரசனிடம் திறையும் பெற்று வந்தனர். அதே சமயம், கத்தோலிக்க சமயப் பிரசாரத்தையும் மேற்கொண்டு, பலரைக் கத்தோலிக்க சமயத்துக்கு மாற்றியும் வந்தனர். அக்காலத்தில் தென்னிந்தியாவிலும் சில கரையோரப் பகுதிகளில் போத்துக்கீசப் பாதிரிமார்கள் சமயப் பிரசாரம் செய்து வந்தனர்.
மன்னாரில் மதப் பிரசாரம்
யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் இவ்வாறு அரசியல் மற்றும் சமயச் செல்வாக்கு விரிவாக்கத்தில் ஈடுபட்டிருந்த போத்துக்கீசரின் கண் யாழ்ப்பாண அரசிலும் விழ ஆரம்பித்தது. இலங்கையின் தென்பகுதிகளைப்போல், யாழ்ப்பாணத்தில் வணிகம் தொடர்பான கவர்ச்சி போத்துக்கீசருக்கு அதிகம் இருக்கவில்லை. எனினும், கத்தோலிக்க மத விரிவாக்க முயற்சிகளுக்கு இது தடையாகவும் இருக்கவில்லை. தென்னிந்தியாவில் மதம் பரப்புவதில் ஈடுபட்டிருந்த பிரான்சிஸ் சேவியர் என்னும் பாதிரியார், கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவரை யாழ்ப்பாண அரசின் கீழ் இருந்த மன்னாருக்கு அனுப்பி 600க்கு மேற்பட்ட மக்களைக் கத்தோலிக்கர் ஆக்கினார்.
யாழ்ப்பாண அரசனின் எதிர் நடவடிக்கை
இதனைக் கேள்வியுற்ற யாழ்ப்பாண அரசன் சங்கிலி, மன்னாருக்குச் சென்று மதம் மாறிய அனைவருக்கும் மரணதண்டனை விதித்தான். 1544 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இச் சம்பவத்தில் 600 பேர் உயிரிழந்தனர். இதனால் போத்துக்கீசப் பாதிரிமார் சங்கிலி அரசன்மீது கடுமையான பகைமை உணர்வு கொண்டிருந்தனர். சங்கிலியைத் தண்டிக்கும்படி அவர்கள், அக்காலத்தில் கோவாவில் இருந்த போத்துக்கீசப் பிரதிநிதிக்கும், போத்துக்கல் நாட்டு மன்னனுக்கும், நெருக்கடி கொடுத்துவந்தனர்.
யாழ்ப்பாணத்தின் மீதான படையெடுப்புகள்
இதனைத் தொடர்ந்து சங்கிலியைத் தண்டிப்பதற்கென வந்த போத்துக்கீசத் தளபதி ஒருவன் சங்கிலி அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்பிவிட்டான். 1561 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக யாழ்ப்பாணத்தைத் தாக்கிய போத்துக்கீசர், யாழ்ப்பாண அரசின் தலைநகரான நல்லூரைக் கைப்பற்றிய போதும், அரசனை பிடிக்கமுடியவில்லை. சங்கிலி தந்திரத்தின் மூலம் ஆட்சியை மீண்டும் தன்வசப்படுத்திக் கொண்டான். எனினும், நாட்டின் ஒரு பகுதியான மன்னாரைப் போத்துக்கீசர் கைப்பற்றிக் கொண்டனர். 1591ல் அந்தரே பூர்த்தாடோ (Andre Furtado) என்பவன் தலைமையில், போத்துக்கீசப் படைகள் மீண்டும் யாழ்ப்பாணத்தைத் தாக்கின. நல்லூரைக் கைப்பற்றி அரசனைக் கொன்ற போத்துக்கீசர், எதிர்மன்னசிங்கம் என்னும் இளவரசன் ஒருவனை அரசனாக்கி அவனிடம் திறை பெறவும் ஒப்பந்தம் செய்துகொண்டு திரும்பினர். இதன் பின்னர் யாழ்ப்பாணத்து நடவடிக்கைகளில் போத்துக்கீசர் பெருமளவு செல்வாக்குச் செலுத்தியதுடன், மதப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடையேதும் அற்ற வாய்ப்பைப் பெற்றார்கள். இந்த வாய்ப்பைத் திறமையாகப் பயன்படுத்திக்கொண்ட போத்துக்கீசப் பாதிரிமார்கள், வசதியான இடங்களைத் தம்வசப்படுத்திக்கொண்டு[4]., தேவாலயங்களை அமைத்ததோடு, போர்க் காலங்களில் பயன்படக்கூடிய வகையில் அவற்றை உறுதியாகவும், உரிய வசதிகளுடனும் அமைத்திருந்தனர்.
யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சி
17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், யாழ்ப்பாணத்து அரசில் பதவிப் போட்டிகள் உருவாகின. பராயமடையாதிருந்த பட்டத்து இளவரசன் ஒருவனுக்காகப், பகர ஆளுனராக முறையற்ற வகையில் சங்கிலி குமாரன் என்பவன் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தான். மக்கள் இவனுக்கெதிராகக் கலகத்தில் ஈடுபட்டார்கள். இதனை அடக்குவதற்காக சங்கிலி குமாரன் தஞ்சாவூர் அரசனிடம் படையுதவி பெற்றான். இதனை விரும்பாத போத்துக்கீசர், பல குற்றச்சாட்டுகளைச் சுமத்திக்கொண்டு, 1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை மீண்டும் தாக்கினார்கள். ஒலிவேரா என்பவன் தலைமையில் வந்த படை யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது. சங்கிலி குமாரனும் பிடிபட்டான். இம்முறை யாழ்ப்பாணத்தைப் போத்துக்கீசர் தங்களுடைய நேரடி ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்தனர்
0 கருத்துக்கள்:
Post a Comment