யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம்
யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் என்பது யாழ்ப்பாணச் சமுதாயத்தினரிடையே நிலவுகின்ற, பரவலான உணவு தொடர்பான பழக்க வழக்கங்களைக் குறிக்கின்றது. யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கமானது, இலங்கையில் வாழுகின்ற ஏனைய தமிழ்ப் பிரிவினரிடமிருந்தோ, இலங்கையின் பிற சமூகத்தவரின் பழக்கங்களிலிருந்தோ அல்லது ஒட்டுமொத்தத் தமிழரின் உணவுப் பழக்கங்களில் இருந்தோ அடிப்படையில் வேறுபடுகின்றது என்று சொல்லமுடியாது. எனினும், பல நூற்றாண்டுகளாக, யாழ்ப்பாணச் சமுதாயம் உட்பட்டு வருகின்ற பலவகையான அக, மற்றும் புறத் தாக்கங்களின் காரணமாக, அதன் உணவுப் பழக்கங்களில் பல தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன.
யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் என்று கூறுவதனால், யாழ்ப்பாணத்தவர் அனைவரும் ஒரே மாதிரியான உணவுப் பழக்கத்தைக் கொண்டுள்ளனர் என்று கூறுவதற்கில்லை. ஏனைய பல சமுதாயங்களின் உணவுப் பழக்கங்களைப் போலவே யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கமும், அச்சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே பல அடிப்படைகளில், வேறுபடுவதைக் காணலாம். ஆனாலும், இவை அனைத்தையும், ஒன்றாகவே இயங்குகின்ற முழு யாழ்ப்பாணச் சமுதாய அமைப்பினதும் கூறுகளாகப் பார்ப்பதன் மூலமே புரிந்து கொள்ளமுடியும்
யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கங்களின் தோற்றுவாய் பண்டைக்காலத் தமிழர் உணவுப் பழக்கங்களாகவே இருக்கும் எனலாம். இது குறித்த ஆய்வுகள் எதுவும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனாலும், பல நூற்றாண்டுகளாகவே யாழ்ப்பாணத்துக்கு, தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நேரடிக் குடியேற்றங்கள் இருந்து வந்துள்ளதுடன், பண்பாட்டுத் தொடர்புகளும், வணிகத் தொடர்புகளும் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளன. இதனால், தமிழ் நாடு தவிர்ந்த பிற தென்னிந்தியப் பண்பாட்டுக் கூறுகளையும், யாழ்ப்பாண உணவுப் பழக்கங்களில் காண முடிகின்றது. இதைவிட, இலங்கையின் பெரும்பான்மை இனமான சிங்களவரின் பண்பாட்டுத் தாக்கங்கள் சிலவும் இருக்கவே செய்கின்றன. பிற்காலத்தில் பல நூற்றாண்டுகளாக யாழ்ப்பாணத்தை ஆண்டுவந்த போத்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்றவர்களின் காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட உணவு வகைகளும், பழக்க வழக்கங்களும் கூட யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கங்களில் கலந்துள்ளதைக் காணமுடியும்.
இவற்றைவிட யாழ்ப்பாணத்துப் புவியியல் அமைப்பு, வளங்கள், பல்வேறு வகையான வேளாண்மை உற்பத்திகளுக்கான வாய்ப்புக்கள், உணவுப்பொருள் தொடர்பான வணிகம் என்பனவும், யாழ்ப்பாணத்து நில உடைமை மற்றும் நிலப்பயன்பாட்டு நிலைமைகளும் உணவுப் பழக்கவழக்கங்களில் தாக்கங்களை உண்டாக்கும் காரணிகளாக இருக்கின்றன. இவற்றுடன், சமய நம்பிக்கைகளும் இன்னொரு முக்கிய காரணியாகும்.
காலத்துக்குக் காலம் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆட்சியாளர்களின், வேளாண்மை மற்றும் வணிகம் தொடர்பான கொள்கைகளும், போர் முதலியவற்றினால், ஏற்றுமதி செய்யும் நாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யமுடியாதிருந்த நிலைமைகளும்கூட உள்ளூர் உணவுப் பழக்கங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்கியுள்ளன.
அன்றாட உணவுப்பழக்க வேறுபாடுகளுக்கான பின்னணிகள்
முன்னர் எடுத்துக்காட்டியவை சமுதாயத்தில், பரந்த அடிப்படையில், எல்லாப் பிரிவினரையும் பாதிக்கின்ற காரணிகளாக உள்ளன. அதே வேளை, சமூகப் பிரிவுகள் மட்டத்தில் காணப்படும் வேறுபாடுகளுக்கு அடிப்படையாகப் பின்வரும் காரணிகள் அமைகின்றன.
சமூக அமைப்பு
தொழில்
பொருளாதார நிலை
சமூக அந்தஸ்த்து
வாழிடச் சூழல்
உணவு நேரங்கள்
யாழ்ப்பாணத்தில் மூன்று நேர உணவு உட்கொள்ளுவதே பொதுவான வழக்கு. பொருளாதாரச் சூழ்நிலைகள் காரணமாக மூன்று முறைகளிலும் குறைவாக உணவு உண்ணுபவர்களும் இருக்கிறார்கள். இந்துக்கள் சிலர் விரத நாட்களில் காலை உணவைத் தவிர்த்துவிடுவது உண்டு. மூன்று நேர உணவுகளும்,
காலை உணவு
மதிய உணவு
இரவு உணவு
எனப்படுகின்றன. காலை உணவுக்கு முன்னரும், மேலும் மூன்று உணவு நேர இடைவெளிகளில் இருமுறையும் தேநீர் அல்லது காப்பி அருந்துகிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளும், அலுவலகங்களும் 8.30 அல்லது அதற்கு முன்னரே பெரும்பாலும் திறந்து விடுவதால், மாணவரும், அலுவலகங்களில் வேலை செய்வோரும் அந்த நேரத்துக்கு முன்னரே காலை உணவு உண்டு விடுகிறாகள். அலுவலகங்களில் 12.00 க்கும் 1.00 மணிக்கும் இடையில் மதிய உணவு நேரம். பாடசாலைகள் 2.00 மணிக்கே மூடப்படுவதால் மாணவர்கள் அதன் பின்னரே மதிய உணவு உட்கொள்ளுகிறார்கள்.
அன்றாட உணவு வகைகள்
யாழ்ப்பாணத்தின் முதன்மை உணவு, ஏனைய ஆசிய நாடுகளில் இருப்பதைப் போல, அரிசிச் சோறு ஆகும். அரிசி, யாழ்ப்பாணக் குடாநாட்டில் குறைந்த அளவிலும், தலை நில வன்னிப் பகுதியில் பெருமளவும் நீண்டகாலமாகவே செய்கை பண்ணப்பட்டு வந்தது. ஐரோப்பியப் படைகளின் ஆக்கிரமிப்பும், அக்காலங்களில் அடிக்கடி ஏற்பட்ட காலரா முதலிய கொள்ளை நோய்களும், வன்னிக் குடியேற்றங்களைப் பெருமளவில் இல்லாது ஒழித்ததுடன், பெருமளவில் அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் அரிசியே தொடர்ந்தும் விருப்பத்துக்குரிய உணவாக இருந்து வந்தது.
உலக யுத்தக்காலத்தில், அரிசிக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் நிலவிய தட்டுப்பாடு காரணமாக, அப்போதைய ஆங்கிலேய அரசு, கோதுமையை அறிமுகப்படுத்தியது. இது அரிசியின் முதன்மை நிலையை மாற்றாவிட்டாலும், பின்வந்த காலங்களின் யாழ்ப்பாண உணவு முறைகளில் நிலையான தாக்கங்களை ஏற்படுத்தியது எனலாம். யாழ்ப்பாணத்தவர்களால் பாண் (bread) என்று அழைக்கப்படும் கோதுமை உணவு அப்பிரதேச உணவில் முக்கிய இடம் பெற்றது அதன் பின்னரேயாகும். அது மட்டுமன்றி, சிற்றுண்டிகள் செய்வதில் பயன்பட்ட அரிசி மாவுக்கும், குரக்கன் முதலிய சிறு தானியங்களுக்கும், மாற்றாகக் கோதுமை மா (மாவு) பயன்படத் தொடங்கியது.
யாழ்ப்பாணத்து உணவு வகைகள்
முதன்மை உணவு
யாழ்ப்பாணத்து முதன்மை உணவு சோறும் கறியும் ஆகும். யாழ்ப்பாணத்தவர், நெல்லை அவித்துக் (புழுக்கி) குற்றிப் பெறப்படும் புழுங்கல் அரிசிச் சோற்றையே அதிகம் விரும்புகிறார்கள். இதைத் தவிர, நெல்லை அவிக்காமல் குற்றும்போது கிடைக்கும், சிவப்புப் பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி[1] என்பவற்றிலும் சோறு ஆக்குவது உண்டு. தமிழ் நாட்டில் செய்வதுபோல, அரிசியிலிருந்து, புளியோதரை, சாம்பார்சாதம், தயிர்சாதம் என்னும் உணவு வகைகள் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் செய்யப்படுவதில்லை.
சோற்றுடன் சேர்த்துச் சாப்பிடும் கறி வகைகள் மரக்கறி வகைகளாகவோ, மாமிச உணவு [2]வகைகளாகவோ இருக்கலாம்.
கறிவகைகள்
சோற்றுடன் சேர்த்துச் சாப்பிடுவதற்காக காய்கறிகள், இலைவகைகள், மீன், மாமிசம் போன்றவற்றைப் பயன்படுத்தி ஆக்கப்படுபவை கறிகள் எனப்படுகின்றன. யாழ்ப்பாணத்துக் கறிவகைகளைப் பலவகையாகப் பகுத்துக் காணமுடியும். இவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு.
பருப்புக் கடையல்: தோல் அகற்றப்பட்ட, பயறு, மசூர்ப்பருப்பு, துவரம்பருப்பு போன்றவற்றில் ஒன்றைக் குறைந்த நீரில் அவித்துத் தேங்காய்ப் பால், உப்பு மற்றும் சேர்மானங்களுடன், சிறிது நீர்ப்பற்றுள்ளதாகச் செய்யப்படும் கறி இது. சைவச் சாப்பாட்டில் இது முக்கிய இடம் வகிக்கும் ஒரு கறியாகும்.
குழம்பு: கத்தரிக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கு,பூசனிக்காய், பாகற்காய் போன்ற காய், கிழங்கு வகைகளில் ஒன்றை முதன்மையாகச் சேர்த்து, தேங்காய்ப் பால், மிளகாய்த்தூள், பழப்புளி, உப்பு போன்ற சேர்மானங்களுடன் ஆக்கப்படுவது இது. மிளாகாய்த் தூளுக்குரிய சிவப்பு நிறத்தில், கூழ் போன்ற நிலையில் இருக்கும். உறைப்புச் சுவை கொண்டது.
வரட்டல் தூள் கறி (கூட்டுக்கறி): குழம்பு ஆக்குவதற்கான சேர்மானங்களே இதற்கும் பயன்படுகின்றன. ஆனால், கறி கூழ் நிலையில் இல்லாமல் மேலும் வரண்டு, பசை போன்ற கூட்டில் காய்கறிகள் சேர்ந்த நிலையில் இருக்கும். இதுவும் உறைப்புச் சுவை கொண்டதே.
பால் கறி (வெள்ளைக் கறி): இதுவும் ஒரு வரட்டல் நிலையிலேயே இருந்தாலும், இதற்கு மிளகாய்த்தூள் சேர்க்கப்படுவதில்லை.
கீரைக் கடையல்: கீரையை அவித்துத் தேங்காய்ப்பாலுடன் கடைந்து செய்யப்படும் இதற்குப் பெரும்பாலும் புளிக்காக எலுமிச்சம் பழச் சாறு சேர்ப்பார்கள்.
வறை: சேர்மானங்களை தேங்காய்ப் பூவுடன் சேர்த்து, சிறிதளவு எண்ணையுடன் சேர்த்து வறுப்பதன் மூலம் கிடைப்பது வறை ஆகும். இலை வகைகள், புடோல் போன்ற சில காய் வகைகள் போன்றவை வறை செய்வதற்குப் பயன்படுகின்றன. சுறா போன்ற அசைவ உணவுகளிலும் வறை செய்யப்படுவதுண்டு.
துவையல்: பருப்புப் போன்றவற்றைத் தேங்காய்ப்பூவுடனும், வேறு சேர்மானங்களுடனும் சேர்த்துத் துவைத்து ஆக்குவது துவையல்.
சம்பல்: தேங்காய்ப்பூ, புளி, உப்பு, வெங்காயம் என்பவற்றுடன், மிளகாய் அல்லது வேறேதாவது சேர்த்து அம்மியில் அரைப்பதன் மூலம் அல்லது உரலில் இட்டு இடிப்பதன் மூலம் சம்பல் செய்யப்படுகின்றது. மிளகாய் சேர்த்துச் செய்வது மிளாகய்ச் சம்பல். இஞ்சி சேர்க்கும்போது இஞ்சிச் சம்பல் எனப் பலவகைச் சம்பல்கள் பெறப்படுகின்றன. சம்பல் என்ற சொல்லுக்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் முன்னர் பச்சடி என்றே குறிப்பிட்டு வந்தார்கள். இன்று சம்பல் என்னும் சொல்லே பரவலாக வழங்கப்படுகின்றது. சிங்கள மொழியில் இதனைச் சம்போல என்பார்கள்.
பொரியல்:வாழைக்காய், மரவள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு போன்றவற்றைச் சீவல்களாக்கி எண்ணெயில் நன்றாகப் பொர்ப்பதன் மூலம் பொரியல்கள் பெறப்படுகின்றன. அசைவ உணவுகளான, மீன், இறைச்சி என்பவற்றிலும் பொரியல்கள் செய்யப்படுகின்றன.
சொதி: நீரினால் ஐதாக்கப்பட்ட தேங்காய்ப்பால், உப்பு, வெங்காயம் என்பவற்றைக் கொதிக்கவைத்து, அத்துடன் பழப்புளி அல்லது எலுமிச்சம் சாறு சேர்ப்பதன் மூலம் சொதி ஆக்கப்படுகின்றது.
ஒரு முழுமையான மதிய உணவு என்னும்போது மேலே குறிப்பிட்ட எல்லாவகை உணவுகளும் காணப்படுவதுண்டு. எனினும் அண்றாட உணவுகளில் பெரும்பாலானோர் இவ்வாறான முழுமையான உணவை உண்பதில்லை. விசேட நாட்களில் மட்டும் இவ்வாறு பல்வேறுபட்ட கறிகளுடன் உணவு ஆக்கப்படுவதுண்டு.
கறிகள் ஆக்குவதில், யாழ்ப்பாணத்தவர் தேங்காயை மிக அதிகமாகவே சேர்த்துக் கொள்கிறார்கள். அநேகமாக எல்லாக் கறிகளிலும், தேங்காய்ப்பூவோ, தேங்காய்ப் பாலோ சேர்த்துக்கொள்ளப்படுகிறது. மிளகாய்த்தூளின் பயன்பாடும், தமிழ் நாட்டுச் சமையலோடு ஒப்பிடும்போது அதிகமென்றே கூறலாம். தமிழ் நாட்டின் அதிகம் பயன்படும் சாம்பார் யாழ்ப்பாணத்துச் சமையலில் இடம்பெறுவதில்லை. கோவில்களில் அன்னதானம் செய்பவர்கள் சில சமயங்களில், பல கறிகள் செய்வதைத் தவிர்ப்பதற்காக எல்லாக் காய்களையும் சேர்த்துச் சாம்பார் செய்வது உண்டு.
துணை உணவு வகைகள்
காலைச் சாப்பாட்டிற்கும், சில சமயங்களில் இரவுச் சாப்பாட்டிற்கும் எடுத்துக்கொள்ளப்படுகின்ற உணவு வகைகள் துணை உணவு வகைகள் அல்லது சிற்றுண்டிகள் எனப்படலாம். இந்த விடயத்திலும் தமிழ் நாட்டுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையே வேறுபாடு காணப்படுகின்றது. தமிழ் நாட்டிலே, இட்லி, தோசை முதலியன முக்கியமான காலை உணவாக இருக்கும் அதே வேளையில், யாழ்ப்பாணத்தில் இடியப்பம், பிட்டு முதலியவையே பெரும்பாலும் உண்ணப்படுகின்றன. அப்பம், தோசை முதலியவற்றையும் யாழ்ப்பாணத்தவர் இடையிடையே உண்பது உண்டு. இட்லி மிக அரிதாகவே உட்கொள்ளப்படுகின்றது.
இடியப்பம்: இடியப்பம் முன்னர் அரிசி மாவில் மட்டுமே செய்யப்பட்டது. கோதுமை மாவின் அறிமுகத்தின் பின்னர், தனிக் கோதுமை மாவிலோ, அரிசியுடன் கலந்தோ இடியப்பம் அவிக்கும் வழக்கம் ஏற்பட்டது. கோதுமை மா மலிவான விலையில் கிடைத்ததும், கோதுமை கலந்த இடியப்பம் மென்மையாக இருந்ததும், கோதுமை இடியப்பம் பிரபலமாகக் காரணமாக அமைந்தது. இடியப்பம் பொதுவாகச் சொதி, சம்பல் ஆகியவற்றுடன் உண்ணப்படுகின்றது. எனினும், வேறு சைவ, அசைவக் கறி வகைகளுடனும் இடியப்பத்தை உண்பதுண்டு.
பிட்டு: பிட்டு அரிசி மாவில் மட்டுமன்றி, குரக்கன் மா, ஒடியல் மா போன்றவற்றிலும், அவிக்கப்பட்டு வந்தது. இப்பொழுது, கோதுமை கலந்து அவிக்கப்படுவது உண்டு. பிட்டு எந்தக் கறியுடனும் உண்ணப்படக்கூடியது. பிட்டுக்குப் பால் சேர்த்துப் பால் பிட்டு எனவும், சீனி சேர்த்து சீனிப் பிட்டு எனவும் உண்பது உண்டு.
அப்பம்: ஒரு நாள் முன்னரே அரிசியை ஊறவைத்து இடித்து நீருடன் கலந்து புளிக்கவிட்டு அப்பம் சுடுவார்கள். வெறுமனே சுடப்படும் அப்பம் வெள்ளையப்பம் என்றும், சுடும்போது நடுவிலே தேங்காய்ப் பால் ஊற்றிச் சுடப்படும் அப்பம் பாலப்பம் என்றும் அழைக்கப்படுகின்றது.
தோசை: யாழ்ப்பாணத்துக் கிராமப் புறங்களிலே சுடப்படுகின்ற தோசை சிறிது வேறுபட்டது. தோசை மாவுக்குச் சிறிது மஞ்சள் சேர்த்துக் கடுகு, மிளகாயும் தாளித்துச் சேர்ப்பார்கள். தமிழ் நாட்டில் உள்ளது போல் நீர்த் தன்மை கொண்ட சட்னி யாழ்ப்பாணத்தில் செய்யப்படுவதில்லை. ஆனால் தோசைக்காக வேறு வகையான சம்பல் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படுகின்றது. செத்தல் மிளகாயைப் (காய்ந்த மிளகாய்) பொரித்து, அத்துடன், புளி, உப்பு, வெங்காயம், தேங்காய்ப்பூ சேர்த்து உரலில் இட்டு இடித்துக்கொள்வார்கள். இது சிறிது வரண்டதாகவும், உதிர்கின்ற தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
அவித்த கிழங்கு வகைகள்: மரவள்ளிக் கிழங்கு யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத்தக்க அளவில் செய்கை பண்ணப்படும் கிழங்கு வகையாகும். கறியாகவும் சமைத்து உண்னப்படும் இக் கிழங்கை அவித்துக் காலை உணவாக உண்பது உண்டு. இக் கிழங்கு குறைந்த வருமான மட்டங்களில் உள்ளவர்களுக்கு மலிவாகக் கிடைக்ககூடிய ஒரு உணவாகும்.
பாண் (கோதுமை ரொட்டி): இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட, மேனாட்டு உணவு வகையான இது, யாழ்ப்பாணத்தவரால் பரவலாக உண்ணப்படுகின்ற உணவு வகைகளில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. உண்ணுவதற்கான தயார் நிலையிலேயே வருவதாலும், அரச மானியங்கள் மூலமாகப் பாண் மலிவான விலையில் கிடைப்பதாலும் பலரும் இதை விரும்பி உண்கிறார்கள்.
பனம் பண்டங்கள்
பனம் பண்டங்கள் நீண்டகாலமாக யாழ்ப்பாண மக்களின், சிறப்பாகச் சமுதாயத்தின் மத்தியதர மற்றும் கீழ்த்தட்டு மக்களின் உணவுப் பழக்கங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. எவரும் நட்டுப் பராமரித்து வளர்க்காத பனைகள் தாமாகவே வளர்ந்து பயன் தருவதன் மூலம், உணவுக்கான ஒரு மலிவான மூலமாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படை. பனையிலே உணவுப் பொருள்களுக்கான மூலங்களாக இருப்பவை பனம்பழமும், பனங்கிழங்கும் ஆகும். பனம்பழப் பிழிவை வெயிலில் காயவைப்பது மூலம் பனாட்டு ஆக்கி நீண்டகாலப் பயன்பாட்டுக்காக வைத்திருக்க முடிந்ததும், பனங்கிழங்கையும் அவ்வாறே காயவைத்து, ஒடியலாக்கி வருடக் கணக்கில் பயன்படுத்த முடிந்ததும் அவற்றின் உணவுப்பெறுமானத்தை மேலும் அதிகரித்தன.
ஒடியல் மா உணவுகள்
ஒடியற் கூழ்
பருகுவதற்கானவை
பழஞ்சோற்றுத் தண்ணீர்
பால் / மோர்
கருப்பநீர்
இளநீர்
தேநீர்
காப்பி
கஞ்சி
[தொகு]பழவகைகள்
மாம்பழம்
பலாப்பழம்
வாழைப்பழம்
தோடம்பழம்
இனிப்பு வகைகள் மற்றும் பிற சிற்றுண்டிகள்
பயத்தம் பணியாரம்
மோதகம் / கொழுக்கட்டை
அரியதரம்
அவல்
சுண்டல்
பால்ரொட்டி
முறுக்கு
உணவுக்கான மூலப்பொருட்களும் சேர்மானங்களும்
அரிசி மற்றும் சிறுதானிய வகைகள் - அரிசி, குரக்கன், வரகு, சாமி, தினை
பருப்புவகை - பயறு, மசூர்ப்பருப்பு, துவரம்பருப்பு, உழுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு
காய்கறிகள் - கத்தரி, வெண்டி, பயற்றை, வாழைக்காய், அவரை, தக்காளி, முருங்கைக்காய்
அசைவ உணவுகள் - மீன், இறால், கணவாய், நண்டு, கோழி, ஆடு
கீரை வகைகள் - முளைக்கீரை, முங்கைக்கீரை, பசளிக்கீரை, வல்லாரை, அகத்திக்கீரை
எண்ணெய் வகை - நல்லெண்ணை, தேங்காய் எண்ணை
சுவையூட்டற் பொருட்கள் - உப்பு, பழப்புளி, மிளகாய், எலுமிச்சை, மாங்காய், தேங்காய்
இனிப்பூட்டற் பொருட்கள் - பனங்கட்டி, சர்க்கரை, சீனி<[3]
வாசனைப் பொருட்கள் - கடுகு, சீரகம், சோம்பு, கொத்தமல்லி, பெருங்காயம்
0 கருத்துக்கள்:
Post a Comment