பரராசசேகரம்



பரராசசேகரம் 8000 செய்யுள் கொண்ட ஒரு வைத்திய நூலாக விளங்குகின்றது. முதலில் இது 12000 செய்யுள் கொண்டு விளங்கியதென்பர். இந்நூல் இப்பொழுது ஏழு பாகமாக அச்சிடப்பட்டுள்ளது. முதலாம் பாகத்திற் சிரரோக நிதானம் பற்றியும், இரண்டாம் பாகத்திற் கெர்ப்பரோக நிதானம், பாலரோக நிதானம் பற்றியும், மூன்றாம் பாகத்திற் சுரரோக நிதானம், சன்னிரோக நிதானம், வலிரோக நிதானம், விக்கல்ரோக நிதானம், சத்திரோக நிதானம், ஆகியன பற்றியும், நான்காம் பாகத்தில் வாதரோக நிதானம், பித்தரோக நிதானம், சிலேற்பனரோக நிதானம் ஆகியன பற்றியும், ஐந்தாம் பாகத்தில் மேகரோக நிதானம், பிளவைரோக நிதானம், பவுத்திர ரோக நிதானம், வன்மவிதி, சத்திரவிதி, சிரைவிதி, இரட்சைவிதி, ஆகியன பற்றியும், ஆறாம் பாகத்தில் உதரரோக நிதானம் பற்றியும், ஏழாம் பாகத்தில் மூலரோக நிதானம், அதிகாரரோக நிதானம், கிரகணிரோக நிதானம், கரப்பன்ரோக நிதானம், கிரந்திரோக நிதானம், குட்டரோக நிதானம் ஆகியன பற்றியும் கூறப்பட்டு, அவ்வவற்றின் குணமும் சிகிச்சையுந் தரப்பட்டுள்ளன.
தன்வந்திரி என்பார் வடமொழியிற் செய்த ஆயுள்வேத நூலைத் தழுவியே இது செய்யப்பட்டிருக்கின்ற தென்பதனை இதன் கடவுள் வணக்கச் செய்யுள்களுளொன்றாய
தரணியோர் மிகப்புகழ்ந்ததன் வந்த்ரி செய்த
தகவுடைய சீர்த்திபெறு மாயுள் வேதப்
பேரணியும் வாகடத்தைப் பெரிது பேணிப்
பெட்புடைய தமிழ்ப்பாவாற் பேசும் வண்ணம்
சீரணியுந் திருமாலு மயனுங் காணாச்
சிவபெருமா னளித்தருளு மொருவெண் கோட்டுக்
காரணிமெய் யைங்கரத்து நால்வாய் முக்கட்
கடவுளிரு பதபுயங்கள் கருத்துள் வைப்பாம்.
எனும் விருத்தங் கூறும்.
இதனைத் தமிழிற் செய்தார் யார் என்பதற்கான ஆதர மெதுவுங் கிடைக்கவில்லை. இந்நூல் பரராசசேகர மன்னன் காலத்திற் செய்யப்பட்டதென்பதனை நூலின்கண் அவன் புகழ் சுறும் செய்யுள்கள் காட்டி நிற்கும். உதாரணமாக சுரசூலையின் சிகிச்சை பற்றி கூறும் செய்யுளில்,
பாரின் மேவுதிற லரச னானபர
ராச சேகரனை யண்டினோர்
சீரின் மேவிவளர் செல்வ மல்கவவ
ரின்மை தீருமது செய்கைபோல்
என்றும், நயனரோகம் பற்றிக் கூறுஞ் செய்யுளில்,
பார்மேவு மரசர்குல திலக மான
பரராச சேகரன்மால் பருதி யேந்தி
ஏர்மேவு முலகுபுரந் தருளி நாளி
லிசைத்தனனைங் கரத்தரியை யிறைஞ்ச லுற்றே.
என்றும், திரிபலைக் குழம்பு பற்றிக் கூறும் செய்யுளில்
பார்த்திவர்க ளேனுநோய் தொலைக்கு மீதே
பரராச சேகரன்மன் பணித்த செங்கோல்
காத்தபுவி யோர்களிரு ணீக்கு மாபோற்
கண்ணிலிரு ணீக்குமிது திண்ணந் தானே
என்றுங் கூறப்படுவதிலிருந்து, இது பரராசசேகர மன்னன் காலத்திற் செய்யப்பட்ட நூலென்றறியலாம். ஆயின், எப்பரராசசேகரன் காலத்ததென்பதை நிச்சயமாக கூற ஆதாரமெதுவுமில்லை. எனவே, இது ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்து நூல் என்று மட்டுமே இப்பொழுது கூறத்தக்கதாயுள்ளது.
இந்நூல் பெரும்பான்மை விருத்தப்பாவாலும், சிறுபான்மை ஆசிரியப்பா, கலிவெண்பா ஆகியவற்றாலும் செய்யப்ட்டுள்ளது. ஆதியிலிருந்த பரராசசேகரம் என்ற நூலின் சில பகுதிகள் கிடையாமையால், அவை அச்சுப் பதிப்பிற் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்று அதன் பதிப்பாசிரியர் ஏழாலை ஐ. பொன்னையாபிள்ளை கூறியுள்ளார்.
பரராசசேகரம் என்கின்ற இந்த வைத்திய நூல் பற்றிய குறிப்பு கலாநிதி க. செ. நடராசா அவர்களால் எழுதப்பெற்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் 1982 இல் வெளியிடப்பெற்ற ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி எனும் நூலில் இருந்து எடுக்கப்பெற்றது

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP