"இராஜராஜ சோழன்" .. நீ வீர தமிழனா?
இணையதளத்தில் உலாவும்போது, இராஜராஜ சோழனைப் பற்றியும் அவரது ஆட்சி காலத்தைப் பற்றியும் வெவ்வேறு வலைப்பதிவர்கள் தங்களது வலைப்பதிவில் கூறியதைப் படிக்க நேர்ந்தது. அவரது ஆட்சிகாலம் தமிழகத்தின் பொற்காலமா? அல்லது துயரமா?
என்ற தலைப்பில் விதவிதமான கட்டுரைகள். அவர்களது பதிவை வாசிக்கும்போது முடிவில் இராஜராஜ சோழனின் ஆட்சிகாலம் துயரமான ஒன்றே என்ற முடிவுக்கு நாம் தள்ளப்படுகிறோம். இவையனைத்தும் உண்மையா?
இத்தலைப்பைப் பற்றிய எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
இத்தகைய வலைப்பதிவுகளை வாசிக்கும்போது, அங்கு குறிப்பிடடுள்ள சில கருத்துக்கள் பழங்கால கல்வெட்டுக்களிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றிற்கான ஆதாரங்களும் இருப்பதாகக் கொடுக்கப்ப்ட்டிருக்கிறது. மேலும் அவற்றுடன் பதிவர்கள் தங்களது ஆழமான கற்பனை திறனை இணைத்து தத்தம் விருப்பங்களுக்குத் தேவையான உருவத்தை வரைந்து தெளிவாகப் பதிக்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது.
அவற்றில் குறிப்பிட்ட அனைத்து கருத்துக்களையும் ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும் சில கருத்துக்களை வரலாற்றை வாசித்த வாசகர்கள் அனைவராலும் உணரமுடியும். வரிவிதிப்பு, பிராமணர்களுக்கு சலுகைகள்,போர் மற்றும் நிலங்களைக் கைப்பற்றுதல் என்பவற்றை எத்தகைய காரணத்திற்காகச் செய்தார்கள் என்ற நோக்கில் ஆராய்ந்து அதன்பின் ஒப்புக்கொள்ள வேண்டும். அத்துடன் அன்றைய சூழ்நிலையில் சோழர்களின் இருண்ட பகுதியை விட அவர்கள் செய்த நல்லனவற்றையும் பாராட்ட வேண்டும்.
ஒவ்வொரு மன்னனும் தத்தம் குடிமக்களைக் காக்கவும், தனது நாட்டின் வாணிபத்தைப் பெருக்கி, செல்வம் ஈட்ட, பிறநாட்டாரின் ஆக்கிரமிப்புகளிலிருந்து காக்க ‘போர்’ என்ற அழிவின் பாதையை கையாண்டதையும் தவறாகக் குறிப்பிட முடியாது. ராஜராஜன் இல்லாவிட்டால், காஞ்சிக்கு வடக்கேயுள்ள பகுதிகளைத் தமிழ் இழந்திருக்கலாம். மன்னராட்சி காலத்தில் இதுவே நடந்திருக்கப்பட வேண்டியது. நிலவுடைமைச் சமூக அமைப்பின் இயல்புகளை ஆராயும்போது இவையனைத்தும் தவறானதல்ல. ஒவ்வொரு சமூகத்தின் உருவாக்கமும் மற்றொரு சமூகத்தின் அழிவிலிருந்தே தொடங்கப்படுகிறது. இதையே வரலாறு சொல்கிறது.
கட்டுரையை வாசிக்கும் வாசகர்கள் தங்களை அந்தந்த காலகட்டத்துக்கு நிலைப்படுத்தி, ராஜராஜ சோழன் மற்றும் ஏனைய விமர்சிக்கப்படும் அரசர்களின் நிலைப்பாட்டில் நின்று வாசிக்க வேண்டும். அன்றைய நிலைமையில் இவையனைத்தும் முறையானதா அல்லது முரணானதா என்பதை வாசகர்கள் உணர வேண்டும்.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களது இணையபக்கத்தில் இத்தலைப்பைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள கட்டுரை பின்வருமாறு;
//”உலகம் முழுக்க நாம் ஒன்றை கவனிக்கலாம், எந்த மன்னன் ஒற்றை அதிகாரத்தை உருவாக்கி நீடித்த அமைதியைக் கொடுக்கிறானோ அவனே அந்த சமூகத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசென்றவனாக இருந்தான். அவ்வாறு எங்கெல்லாம் மேம்பட்ட நிலவுடைமைச்சமூகம் உருவாகி உற்பத்திஉபரி திரட்டப்பட்டு நாகரீகமும் பண்பாடும் வளர்ந்தது என்று அறிகிறோமோ அங்கெல்லாம் மிகக்கொடுமையான வன்முறை மூலமே அது நிகழ்ந்திருப்பதைக் காணலாம்.
சோழர் காலகட்டத்தில் வரிவசூல் அதிகரித்தது. அதற்குக் காரணம் நிலையான அரசும் வரிவசூலுக்கான அமைப்புவசதியும் இருந்ததுதான். கொஞ்சம் கொஞ்சமாக வரிவசூல் தமிழ்வரலாற்றிலேயே அதிகமான அளவுக்கு சென்றது. ஆனால் அதை நாம் அன்றைய சூழலை வைத்தே புரிந்துகொள்ள வேண்டும். இருநூறாண்டுக்காலம் தமிழகநிலத்தில் உள்சண்டைகள் தீர்க்கப்பட்டிருந்தன. அதற்கான விலை அந்த வரிகள். சோழ அரசு வீழ்ச்சி அடைந்தபின் அந்த மக்கள் அந்த வரிவசூலை விட பலபல மடங்கு கொள்ளைக்குக் கொடுக்கவேண்டியிருந்தது.
தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம் சோழர் காலத்தில்,ராஜராஜனின் பாட்டாவான இராதித்த சோழனால் வெட்டப்பட்டதுதான். வீரநாராயண மங்கலம் ஏரி என்பது அதன் பெயர். இந்த ஏரி அக்காலத்தில் இருபது கி.மீ நீளமும் ஐந்து கீ.மீ அகலமும் கொண்டது. ஐம்பதாண்டுகளாக அதை தூர்வாரவே நம் ஜனநாயக அரசுகளிடம் நிதி இல்லை என்கிறார்கள். அதை நம்பியே இன்றும் சென்னைகூட வாழ்கிறது. அது எப்பேர்ப்பட்ட வைப்புநிதி என்பதை நாம் யோசிப்பதேயில்லை. இன்று அதன் மதிப்பு பல்லாயிரம்கோடி ரூபாய்! எத்தனைகோடி வரிப்பணம், எவ்வளவு உழைப்பு!
குமரிமாவட்டத்தில் மட்டும் சோழர்கள் வெட்டிய ஏரிகள் இருபதுக்கும் மேல். தமிழகத்தில் ஐந்தாயிரம் ஏரிகள் வெட்டப்பட்டிருக்கலாம். இன்றைய தமிழகத்தின் ஆகப்பெரிய பாரம்பரியச் சொத்தே இந்த ஏரிகள்தான். இவை இல்லையேல் நாம் பாலைவன மக்கள். ஆயிரம் வருடங்களாக நாம் குடிப்பது சோழன் அளித்த குடிநீரை. உண்பது அவர்கள் உருவாக்கிய விளைநிலங்களின் சோற்றை.அதை நாம் மறக்கக் கூடாது.
சாதி ஏற்றத்தாழ்வு இருந்ததா? ஆம் இருந்தது. அடிமைமுறைகூட இருந்தது என நாம் இன்று கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். ஆனால் தமிழகத்தில் சங்க காலம் முதலே சாதிமுறையும், அடிமைமுறையும் இருந்தன. இழிசினர், தொழும்பர், உரிமைமாக்கள் என்றெல்லாம் நம் இலக்கியங்கள் சொல்கின்றன. ஆனால் அன்று உலகமெங்கும் அதே பிறப்பு அடிப்படையிலான சமூகப் பாகுபாடும், அடிமை முறையும், இருந்தன என்பதே வரலாறு. மக்களில் ஒருசாராரை அடிமைகொண்டு கட்டாய உழைப்புக்கு ஆளாக்கி அவர்களை சுரண்டி அவர்களின் உழைப்பு உருவாக்கிய உபரியால்தான் உலகத்தின் எல்லா நாடுகளும் தங்களை நாடுகளாக ஆக்கிக்கொண்டன. பண்பாட்டை வளர்த்துக்கொண்டன.
ஆக, சோழப்பேரரசைப்பற்றியும் ராஜராஜனைப்பற்றியும் நாம் கண்டிப்பாக பெருமைகொள்ளலாம். அன்றைய உலகச்சூழலில் வைத்துப்பார்த்தால் ஆக முற்போக்கான, அறம்சார்ந்த, மக்கள்நலம் நாடிய அரசுதான் அது. தன் குடிகள் மேல் விருப்பம் கொண்ட, பெருந்தன்மையும் நிதானமும் கொண்ட,கருணைமிக்க மன்னன்தான் ராஜராஜன். கலைகளிலும் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவன். பண்பாட்டை பேணியவன். ஹானிபாலைப் போல,நெப்போலியனைப்போல,அலாவுதீன் கில்ஜியைப்போல,நாதிர்ஷாவைப்போல ராஜராஜன் பெருங்கொடுமைகள் எதையும் எந்த மனிதஇனத்துக்கும் இழைத்ததில்லை.
அவர்களுடன் ஒப்பிடுகையில் ராஜராஜன் மாபெரும் மானுடத்தலைவனே. நாம் நமது வரலாற்றின் மாபெரும் சக்ரவர்த்தியை கொண்டாடுவதில் பிழையே இல்லை. இறந்தகாலத்தை இறந்தகாலமாக எடுத்துக்கோண்டால் அதில் நம் சாதனைகளுக்காகவும் நம் முன்னோர்களுக்காகவும் பெருமைகொள்வது உகந்ததே.
ஆனால் அதையும் வரலாற்றில் வைத்தே செய்யவேண்டும். ராஜராஜன் காலகட்டத்தில்தான் தமிழகத்தில் நிலஅடிமைமுறை உறுதியாக வேரோடி பதினெட்டாம் நூற்றாண்டுவரை நீடித்தது. அவரது காலகட்டத்தில்தான் பெண்ணை குடும்பத்தின் அடிமையாக ஆக்கும் நில உரிமைச்சட்டங்கள் உருவாகி வந்தன. ஆம், அந்தக் காலகட்டத்தில் நீதி குலம் நோக்கியே அளிக்கப்பட்டிருக்கும். வலியோரை எளியோர் பணிந்து நடந்திருப்பார்கள். மனித உரிமைகள் இருந்திருக்காது.வன்முறைமூலம் வரிவசூல் செய்யப்பட்டிருக்கும். அவையெல்லாம் நிலவுடைமைச் சமூக அமைப்பின் இயல்புகள். அந்த காலகட்டத்தை உடைந்த்து தாண்டித்தான் நாம் நவீன காலகட்டத்துக்குள் புக முடிந்தது.
ஆம், அன்றைய அற மதிப்பீடுகளையும் ஒழுக்க மதிப்பீடுகளையும் விட்டு நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். அது நிலவுடைமைகாலகட்டத்தின் ஒரு பகுதி. நாம் வாழ்வது அதில் இருந்து பலபடிகள் தாண்டிவந்த ஜனநாயகக் காலகட்டம். நாம் நம் பொற்காலங்களை எதிர்காலத்தில்தான் தேடவேண்டும், இறந்தகாலத்தில் அல்ல.//
இத்தகைய வரலாற்றுக் கட்டுரைகளை வாசிக்கும்போது வாசகர்கள் எத்தகைய மனநிலையில் இருக்கவேண்டும் என்பதை திரு. ஜெயமோகன் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். வெளிப்படையாகப் பேசினால் வாசகர்கள் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த அல்லது தாங்கள் அறிந்த அல்லது தங்களுக்குக் கூறப்பட்ட கருத்தை வைத்து கற்பனை ஓவியத்தை வரைந்துக் கொள்கின்றனர். 1000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சரித்திர நிகழ்வுகளை வாசிக்கும் போது முறையான ஆராயப்பட்ட கற்பனை கொண்ட பார்வையாக இருப்பது நலம்.
தற்போதைய நிலைமையில் பதிவைப் படைப்பதென்பது கற்பனையுடன் மட்டுமே உள்ளது.
வலைப்பதிவர்கள் குறிப்பிட்டுள்ள எதிர்மறை கருத்துக்கள் முழுவதுமாக ஏற்கப்பட வேண்டியதா அல்லது ஒதுக்கப்பட வேண்டியதா என்பதை விட நாம் ஒவ்வொருவரும் விமர்சிக்கும் ராஜராஜ சோழனது நிலைப்பாட்டில் நின்று ஆராய்வது நலம்.
அன்றைய சூழலை இன்றைய காலகட்டத்துடன் நோக்குவதே தவறு.
குறைகளையே கண்டறியும் சில பதிவர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் ஒரு நன்மை தரக்கூடிய நிகழ்ச்சியும் நடைபெறவில்லை என்பதை சான்றுடன் கூற முடியுமா ???????
பொதுவாகப் பதிவர்கள் அன்றைய அரசர்களையும் இன்று அரசியல் நடத்துபவர்களையும் ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டுகிறேன். மாறாக அன்றைய காலகட்டத்தில் நமது பாரதம் முழுவதும் ஆட்சி செய்த பிற அரசர்களுடன் ராஜராஜ சோழனை ஒப்பிடுதல் முறையானது. சோழர்களின் வீரத்தைப் பற்றியும் அவர்களது போர்புரியும் ஆற்றல், கடற்படையின் வலிமை முதலியவற்றை சரித்திர நாவல்களைப் படிக்கும்போது புரிந்துகொள்ள முடியும்
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் - இத்தகைய வரலாற்றுக் கட்டுரைகள் குறிப்பிடும் செய்திகளை வாசிக்கும்போது, கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அப்படியே எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து முறையாக ஆராய்ந்து அதன்பின் ஒரு முடிவுக்கு வருவது நலம்.
"எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு"
மெய்பொருள் காண்பது அறிவு"
MORE DETAILS VISIT:-
0 கருத்துக்கள்:
Post a Comment