யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண நகரம் இலங்கைத்தீவின் வட கோடியிலுள்ள ஒரு நகராகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரியைப் பார்த்தபடி அமைந்துள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 396 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந் நகரம், நீண்ட காலமாகவே நாட்டிலுள்ள இரண்டாவது பெரிய நகரமாக விளங்கி வருகிறது. 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடமாகாணத்தின் தலைநகரமாக விளங்கிய யாழ்ப்பாணம், அந்த ஆண்டில், தற்காலிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து உருவான வட-கிழக்கு மாகாணசபைக்குத் திருகோணமலையைத் தலைநகரமாக்கியபின், மாகாணத் தலைநகரம் என்ற நிலையை (அந்தஸ்த்தை) இழந்தது. வடக்குக் கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட போதும் பின்னர் வட மாகணத்தலைநகராக வவுனியாவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
1981இல் யாழ்ப்பாணத்தில் இறுதியாக எடுக்கப்பட்ட மக்கட்தொகைக் (சனத்தொகைக்) கணக்கெடுப்பின்படி, யாழ் நகரின் சனத்தொகை 118,000 ஆக இருந்தது. 20 வருடங்களின் பின் நாட்டில் 2001ல் கணக்கெடுப்பு நடந்தபோது, யாழ்ப்பாணத்தில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனினும் அவ் வருடத்தில் இந் நகரின் சனத்தொகை 145,000 ஆக் இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. கடந்த 20 வருடங்களிற்கும் மேலாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாகப் பல வழிகளிலும் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், உரிய வளர்ச்சியைப் பெறவில்லையென்றே சொல்லவேண்டும்.
1981ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, தமிழர்கள் பெரும்பான்மையினராக இருந்தபோதும், குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வந்தார்கள். சிங்களவர்கள் மிகவும் குறைவே. சமய அடிப்படையில் பார்த்தால் யாழ்நகரில், கிறீஸ்தவர்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.
0 கருத்துக்கள்:
Post a Comment