Showing posts with label யாழ்ப்பாணக் கோட்டை. Show all posts
Showing posts with label யாழ்ப்பாணக் கோட்டை. Show all posts

யாழ்ப்பாணக் கோட்டை

இலங்கையின் வடபாகத்தின் தலையாக அமைந்திருக்கின்ற யாழ்ப்பாணக் குடாநாட்டின் அழகினை விபரிக்க முடியாது. யாழ்ப்பாணத்தில் எஞ்சியுள்ள வரலாற்றுக் கட்டமைப்புகளும் பண்பாட்டு விழுமியங்களும் யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தினை இன்றும் பறைசாற்றுகின்றன.

ஊர்காவற்றுறை கோட்டை, காங்கேசன்துறைக் கோட்டை, வெற்நிலைக்கேணி கோட்டை என்பன கடற்கரையோரங்களில் அமைக்கப்பட்ட கோட்டைகளாகும். இயக்கச்சி கோட்டை, ஆனையிறவுக்கோட்டை, பூநகரிக்கோட்டை என்பன பாதைக்கடவைகளில் அமைக்கப்பட்ட கோட்டைகளாகும். இத்தகைய நிலைய முக்கியத்துவத்தினால் கடலிருந்தும் தரையிலிருந்தும் வரும் எதிரிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடிப்பது எளிதாகவிருந்தது.

யாழ்ப்பாணத்தின் மையமாக விளங்குவது யாழ்ப்பாணக் கோட்டையாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென் கரையோரத்தில் தன் கம்பீரமான வடிவத்தை இழந்து சிதிலமான நிலையில் இன்றும் கோட்டை காணப்படுகின்றது. யாழ்ப்பாணக்குடா நாட்டின் தெற்கே பண்ணைக் கடற் கரையோரத்தில் கம்பீரமாகக் கோட்டை அமைந்திருந்தது. இக்கரையோரத்தில் இன்று காணப்படுகின்ற கோட்டை ஒல்லாந்தரால் மீளமைக்கப்பட்ட கோட்டையாகும்.

யாழ்ப்பாணக் கோட்டை ஒல்லாந்தரினால் அமைக்கப்பட்ட கட்டமைப்புகளில் மிக அற்புதமானதாகும். அதுமாத்திரமல்லாமல் கீழைத் தேசத்திலுள்ள கோட்டைகள் யாவற்றிலும் மிகப் பலமானதும் பாதுகாப்பானதுமான கோட்டை என அனைத்துக் கட்டிடக்கலை விற்பன்னர்களாலும் விதத்துரைக்கப்பட்டதாகும்.

முதலில் சிறிய பண்டகசாலையாக இக்கோட்டை இருந்தது. பின்னர் போர்த்துக்கேயர் அப்பண்டகசாலையை நாற்சதுரக் கோட்டையாக்கினர். ஒல்லாந்தர் இக்கோட்டையைப் புனரமைத்தனர். முதலில் ஐங்கோண வடிவில் உள்கோட்டையின் வடிவம் அமைக்கப்பட்டது. இதனை 1680 இல் கட்டி முடித்தனர். கோட்டையின் சுற்றுப்புறக் கட்டமைப்பு 1792 இல் நிறைவுற்றது.

யாழ்ப்பாணக்கோட்டை ஐந்து கொத்தளங்களைக் கொண்டுள்ளது. கடற்புறமாக இரண்டு கொத்தளங்களையும் நிலப்பக்கமாக மூன்றையும் கொண்டுள்ளது. உள்கோட்டையின் சுற்றளவு 6300 அடிகளாகும். கொத்தளத்தின் ஒரு பக்கத்தளம் 340 அடிகளாகும். யாழ்ப்பாணக் கோட்டை மதிலின் உச்சி 20 அடி அகலமானது. அடித்தளத்தில் 40 அடி அகலமானது. கோட்டைச் சுவர் 30 அடி உயரமானது. கோட்டையைச் சுற்நி 132 அடி அகலமான அகழியுள்ளது. அகழிச் சுவரோடு சின்னக்கோட்டைகள் அமைந்துள்ளன. இவை முருகைக்கற்களினால் மூடப்பட்ட கூரைகளைக் கொண்டுள்ளன. ஒல்லாந்தரினால் அமைக்கப்பட்ட கோட்டைகள் யாவும் முருகைக் கற்களினால் அமைக்கப்பட்டவை. இக்கோட்டைகள் கடற்கரையோரங்கனில் அல்லது பாதைக் கடவைகளில் அமைந்திருந்தன.

யாழ்ப்பாணக்கோட்டைக்குள் கவனர் பங்களா, ராணி மாளிகை, சிறைச்சாலை என்பன கட்டப்பட்டன. பிற்காலத்தில் ராணி மாளிகையில் வைத்து கைதிகள் விசாரிக்கப்பட்டார்களாம். கோட்டை இரண்டு வாயில்களைக் கொண்டிருந்தது. ஒன்று `கடற்பாதை மற்றையது நிலப்பாதை. `கடற்பாதை கடலோரமாக அமைந்திருந்தது. நில வழி தொங்கு பாலத்தினால் இணைக்கப்பட்ட பிரதான வாயிற்புறம் நிலப்பாதையாகும். கோட்டைக்குள் தென் கிழக்குப் பகுதியில் ஒரு சதுரங்கத் தேவாலயம் அமைந்திருந்தது. இன்று இக்கட்டிடங்கள் எதனையும் காணமுடியாது.

ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணக் கோட்டையைக் கைப்பற்ற சதியொன்று நடந்தது. நல்லூர் முதலியாராகவிருந்த பூதத்தம்பி என்பவன் இதில் பங்குபற்நினான் என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் யாழ்ப்பாண நிர்வாக மையமாக யாழ் கோட்டை விளங்கியதால் அதை இராசவாசல் என சிறப்பாக அழைத்தார்கள்.

Read more...

யாழ்ப்பாணக் கோட்டை

யாழ்ப்பாணக் கோட்டை யாழ்ப்பாண நகருக்கு அண்மையில் பண்ணைப் பாலத்தருகே சிதைவடைந்த நிலையில் காணப்படும் கோட்டையாகும். யாழ்ப்பாண அரசு 1619 இல் போத்துக்கீசரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்ததும், தலைநகரத்தை நல்லூரிலிருந்து அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர். அங்கே யாழ்ப்பாணக் குடாக்கடலை அண்டி ஒரு கோட்டையையும் கட்டினார்கள். 1619 ஆகஸ்ட் மாதத்தில் பாதுகாப்புக்காகக் கோட்டையொன்றைக் கட்டிக்கொள்ள கோவாவிலிருந்த தலைமையகத்திலிருந்து பிலிப்பே டி ஒலிவேராவுக்கு அனுமதி கிடைத்திருந்தது எனினும் பொருத்தமான இடமொன்றைத் தெரிவுசெய்து கோட்டையின் கட்டிடவேலை 1625 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது. 1629இல் இது உபயோகத்திலிருந்ததெனினும், 1637இல் கூட இது முற்றாகக் கட்டிமுடிக்கப்படவில்லையென்றே தெரிகிறது. இது கிட்டத்தட்டச் சதுர வடிவமானது. நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன், ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரைவட்ட வடிவிலமைந்த அரண்களும் இருந்தன. கோட்டைக்குள்ளே கத்தோலிக்கத் தேவாலயமொன்றும், கப்டன் மேஜரின் வீடும், வைத்தியசாலையொன்றும் மேலும் சில முக்கியமான கட்டிடங்களும் இருந்தன. போத்துக்கீசரின் யாழ்ப்பாண நகரம் கோட்டைக்கு வெளியிலேயே இருந்தது.

யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் 1658 ஜூன் 22இல் கைப்பற்றிய அடுத்த நாள் ஜூன் 23 1658இல், மேற்படி கோட்டையை அவர்கள் அக்கிரமித்து அதனை இடித்துவிட்டு ஐங்கோணவடிவிலமைந்த புதிய கோட்டையைக் கட்டினார்கள்.
1984-1987 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், யாழ்ப்பாணக் கோட்டை இராணுவத்தின் வசமே இருந்து வந்தது. 1989 ஆம் ஆண்டில் இந்திய அமைதிகாக்கும் படை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய பின்னர் கோட்டையை முற்றுகையிட்ட புலிகள் பல மாதங்களின்பின் அதனைக் கைப்பற்றிக்கொண்டனர். கைப்பற்றிய சிறிது காலத்தில் மீண்டும் இவ்வாறான நிகழ்வைத் தடுக்க கோட்டையின் பெரும்பகுதி புலிகளின் ஆலோசனையின் கீழ் அழிக்கப்பட்டது. 1995 ல் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் மீண்டும் கைப்பற்றியபோது இக்கோட்டையின் எச்சங்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் வந்தன

Read more...

யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி

1796 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரிடமிருந்து அதனைக் கைப்பற்றியதிலிருந்து யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி ஆரம்பமானது. 1796 ஆம் ஆண்டிலிருந்து 1948 ல் யாழ்ப்பாணத்தையும் இலங்கையின் ஒரு பகுதியாக விட்டுச் செல்லும் வரை இவ்வாட்சி நீடித்தது.

இலங்கைத் தீவில் பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்பம்

1782 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கும், ஒல்லாந்து நாட்டுக்கும் இடையில் போர் மூண்டது. இதனத் தொடர்ந்து சென்னையை நிர்வகித்துவந்த பிரித்தானியத் தேசாதிபதி இலங்கைத் தீவில் உள்ள ஒல்லாந்தர் பகுதிகளைக் கைப்பற்றப் படைகளை அனுப்பினான். அப்படை திருகோணமலையில் இறங்கி அதனைக் கைப்பற்றியது எனினும், அடுத்த ஆண்டில் இங்கிலாந்தும், ஒல்லாந்தும் சமாதானம் செய்து கொண்டமையால் திருகோணமலையைத் திருப்பிக் கொடுக்கவேண்டியதாயிற்று. 1795 ல் மீண்டும் இரு நாடுகளுக்குமிடையே போர் வெடிக்கவே, சென்னையிலிருந்து சென்ற பிரித்தானியப் படைகள் மீண்டும் திருகோணமலையைக் கைப்பற்றியதுடன், பருத்தித்துறையில் இறங்கி எவ்வித எதிர்ப்புமின்றி யாழ்ப்பாணக் கோட்டையையும் கைப்பற்றிக் கொண்டன. இவ்வாறே நீர்கொழும்பு, கொழும்பு, காலி என ஒவ்வொரு நகரமாய் வீழ்ச்சியடைய இலங்கையிலிருந்த ஒல்லாந்தரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகள் அனைத்தும் 1776 பெப்ரவரியளவில் பிரித்தானியர் வசமாயின.
ஆரம்பத்தில் இப்பகுதிகளை நேரடியாக இங்கிலாந்தின் ஆட்சியின் கீழ் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டதாயினும், பல காரணங்களை முன்னிட்டு சென்னையுடன் சேர்த்து ஆட்சிசெய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த ஒழுங்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1798 ல் இலங்கையிலிருந்த பிரித்தானியர் ஆட்சிப் பகுதிகள் இங்கிலாந்து அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இங்கிலாந்து அரசின் பிரதிநிதியாக தேசாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் கொழும்பில் இருந்து நிர்வாகம் நடத்தினார்.

யாழ்ப்பாண நிர்வாகம்

தேசாதிபதிகளே யாழ்ப்பாணத்தின் நிர்வாகத்துக்கும் பொறுப்பாக இருந்துவந்தனர். இவர்கள் இலங்கையை 5 மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாகாணத்தையும் ஒரு அரசப் பிரதிநிதியின் (Government Agent) நிர்வாகத்தின் கீழ்க் கொண்டுவந்தார்கள். ஆரம்ப காலங்களில் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்துத் தொடர்புகள் பலமாக இருக்கவில்லையாதலால் சில அரசப் பிரதிநிதிகள் ஒரு அரசனைப் போலவே நிர்வாகம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

Read more...

பிரித்தானியரின் கீழ் யாழ்ப்பாண நகரம்

பிரித்தானியர் ஆட்சி யாழ்ப்பாணத்தில் 152 ஆண்டுகாலம் நீடித்தது. இக் காலத்தில் யாழ்ப்பாணம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக, பொருளாதார மற்றும் பௌதீக வளர்ச்சிகளைப் பெற்றது எனலாம். தற்காலத்து யாழ்ப்பாணக் கல்வி மேம்பாட்டுக்கு அச்சாணியாக விளங்கிய பாடசாலைகள் அனைத்தும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டவையே. யாழ்ப்பாண நகரத்திலிருந்து குடாநாட்டின் பல பகுதிகளையும் இணைக்கும் வீதிகள் அமைக்கப்பட்டன. அத்துடன், யாழ்ப்பாணத்துடன் கண்டி,கொழும்பு போன்ற தென்னிலங்கை நகரங்களுக்கான வீதிகளும் உருவாயின.

Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP