இலங்கை நாட்டின் வட மாகாணத்தின் முடிவு எல்லையில் யாழ் மாவட்டம் அமைந்துள்ளது. தலைநகர் கொழும்பில் இருந்து கிட்டத்தட்ட 410 கிலோ மீற்றர் தொலைவில் யாழ்ப்பாணம் உள்ளது. 7 தீவுகள் அடங்கலாக யாழ்ப்பாணத்தின் மொத்த நிலப்பரப்பு கிட்டத்தட்ட 1025 சதுர கிலோ மீற்றர்களாகும். யாழ் மாவட்டம் தீவு, வலிகாமம், வடமராட்சி மற்றும் தென்மராட்சி ஆகிய நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.

யாழ் குடாநாடு வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கில் இந்தியப் பெருங்கடலை எல்லையாகக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் தெற்கு எல்லைகளாக யாழ்ப்பாண கடனீரேரியும் கிளிநொச்சி மாவட்டமும் அமைந்துள்ளன. தரைவழியாக ஆனையிறவு கடநீரேரியை கடந்து யாழ்ப்பாணத்துக்குள் பிரவேசிக்க வேண்டும். இவ்ஆனையிறவு கடநீரேரி இலங்கையின் மிக முக்கியமான உப்பளங்களில் ஒன்றாக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாடு அல்லது ஒரு பிரதேசம் பிரபலம் அடைய வேண்டும் என்றால் அங்கு துறைமுகங்கள், விமான நிலையங்கள் இருக்க வேண்டும். அந்தவகையில் யாழ்பாணத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் பலாலி விமானநிலையமும் காங்கேசந்துறை துறைமுகமும் அங்குள்ளன. இவற்றின் மூலம் யாழ் மாவட்டத்திற்கான தொடர்புகள் மேலும் இலகுபடுத்தப்படுகின்றன. ஒரு காலங்களில் யாழ்ப்பாணத்தின் இளவட்டங்கள் காலையில் படகு மூலம் தென் இந்தியாவிற்கு சென்று அங்கு வெளியாகும் புதிய தமிழ் திரைப்படங்களை பார்த்துவிட்டு மாலையில் திரும்புவது வழமையாகும். இன்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள வயதில் பெரியவர்களிடம் பேசிப்பார்த்தால் அவர்களின் இளவயது நினைவுகள் எமக்குத் தெரியவரும்.

யாழ் மாவட்டம் ஒரு உலர் வலயப் பிரதேசமாகும். இங்கு பனை மற்றும் தென்னை ஆகிய பயிர்கள் திடல்களாக பரந்து விரிந்துள்ளன. பழங்காலங்களில் பெண்களுக்கு சீதனம் வழங்கும்போது பனந்திடல்களை வழங்கினார்கள். அதனால் முழுக்குடும்பமுமே பசி, பட்டினி இன்றி வாழ்ந்ததுடன் பனந்திடல்களை வழங்குவதை அவர்கள் கௌரவமாக நினைத்தார்கள்.
ஒக்டோபர் தொடக்கம் டிசம்பர் வரையான காலப் பகுதியில் வட கிழக்கு பருவப்பெயர்ச்சி மூலம் இங்கு மழை வீழ்ச்சி கிடைக்கிறது. இப்பகுதி மக்கள் இப்பருவப்பெயர்ச்சி மழை மூலம் கிடைக்கும் நீரைக்கொண்டு நெல்லை பெரும்போகமாக பயிரிட்டு அறுவடை செய்து வருடம் முழுவதும் வளத்தோடு வாழ்கிறார்கள். 2008 ஆம் ஆண்டு இம்மாவட்டத்திற்கு 1811.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியைப் கிடைக்கப்பெற்றுள்ளது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகளவான வெப்பநிலை இங்கு காணப்படும். இம்மாவட்டத்தில் 2008 ஆம் ஆண்டு 21.40 தொடக்கம் 32.40 சென்ரிகிரேட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இங்குள்ளவர்கள் சிறுபோககாலங்களில் பயறு, உழுந்து, சணல், கௌபி, தினை, குரக்கன், சாமை போன்ற சிறு தானியங்களை பயிரிட்டு தமது தேவைகளை நிறைவேற்றுகிறார்கள். இங்கு பயிரிடப்படும் புகையிலை, முந்திரி, வெங்காயம், மிளகாய், மாம்பழம், பலாப்பழம், வெற்றிலை, உருளைக்கிழங்கு போன்ற பொருட்களுக்கு உள்ளூர் சந்தையில் மாத்திரமல்ல தென்னிலங்கையிலும் நல்ல கிராக்கி காணப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இரண்டு பிரதான தொழில்களாக விவசாயமும் மீன் பிடியும் காணப்படுகிறது. விவசாயத்தில் தன்நிறைவு பெற்ற மாவட்டமாக திகழும் யாழ் மாவட்டம் மீன் பிடித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. தமது உள்ளூர் சந்தைத் தேவையையும் நிறைவு செய்வது மட்டுமல்லாமல் தென்னிலங்கைக்கும் மீன்கள் மற்றும் கருவாடுகளை அனுப்பும் திறமை அவர்களிடம் உண்டு.
இவ்வாறு தன்னிறைவு பெற்ற மாவட்டமாகத் திகழும் யாழ்ப்பாணம் பற்றிய பல்சுவை விபரங்களைத் கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP